கி.ராஜநாராயணன் என்னும் கரிசல்காட்டு நெடுங்கதை

கி.ரா என்னும் கரிசல்காட்டு நெடுங்கதை

பட மூலாதாரம், Ki. Rajanarayanan

    • எழுதியவர், கே.எஸ். ராதாகிருஷ்ணன்
    • பதவி, செய்தித்தொடர்பாளர், திமுக

கி.ராவை சுமார் 50 ஆண்டு காலமாக எனக்குத் தெரியும். 45-46 ஆண்டுகளாக இலக்கியம் பேசுமளவுக்கு அவர் நெருக்கமாக இருந்தார். கி.ரா எனப்படும் கி. ராஜநாரயணன் அடிப்படையில் ஓர் இடதுசாரி. நல்லகண்ணு, கோவில்பட்டி அழகிரிசாமி, எஸ்எஸ் தியாகராஜன், ஜனசக்தி ஆசிரியராக இருந்த சீனிவாசன் ஆகியோரெல்லாம் ஒரே வயது. கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபடாத அந்த காலகட்டத்தில் ஒன்றாகச் செயல்பட்டார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது, எட்டயபுரம் பகுதியில் தலைமறைவாக இருந்தார்கள். நெல்லை சதி வழக்கு விசாரிக்கப்பட்டு கொண்டிருந்தபோது கோவில்பட்டி சதி வழக்கு என்ற வழக்கும் நடத்தப்பட்டு வந்தது. அந்த வழக்கில் கி. ராஜநாராயணன் பெயரையும் சேர்த்திருந்தார்கள். ரசிகமணி டி.கே.சிக்கு கி.ராவை நன்றாகத் தெரியும். அப்போது குமாரசாமி ராஜா சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்துவந்தார். அவரைச் சென்று பார்த்த டி.கே.சி, "இடைசெவல் நாயக்கருக்கு இந்த வழக்கில் என்ன தெரியும்? அவரையும் எதற்கு வழக்கில் சேர்த்திருக்கிறீர்கள்?" என கேட்டார். இதற்குப் பிறகு கோவில்பட்டி சதிவழக்கிலிருந்து கி.ரா விடுவிக்கப்பட்டார்.

1960களில் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது இவரும் ஈடுபட்டு சிறையில் இருந்தார். கி.ராவுக்கு எழுத்தின் மீது ஆர்வம் வருவதற்கு முன்பாக இசையின் மீது பெரும் ஆர்வம் இருந்தது. இசை மேதையாக நாம் வர வேண்டுமென ஆசைப்பட்டார்.

காரக்குறிச்சி அருணாச்சலம், விளாத்திகுளம் சாமிகள், ராஜரத்தினம் பிள்ளை ஆகியோருடன் கி.ராவுக்குத் தொடர்பு இருந்தது. இதற்குப் பிறகு எழுத்தாளராக உருவெடுத்தார். சரஸ்வதி, தாமரை ஆகிய இதழ்களில் எழுதினார். பிறகு ஆனந்தவிகடனில் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர் வட்டம் பதிப்பகத்தின் மூலம் கோபல்ல கிராமம் நாவல் வெளிவந்தது.

கி.ரா என்னும் கரிசல்காட்டு நெடுங்கதை

பட மூலாதாரம், Ki. Rajanarayanan

இடைச்செவல் என்பது கோவில்பட்டுக்கு அருகில் உள்ள மிகச் சிறிய கிராமம். இந்த கிராமத்திற்கு மின்சாரம்கூட மிகத் தாமதமாகத்தான் வந்தது. பேனா வாங்க வேண்டும் என்றால்கூட கோவில்பட்டிக்குத்தான் வரவேண்டும். அந்தக் குக்கிராமத்தில் இருந்தபடியே இத்தனையும் சாதித்தார் கி.ரா. அவர் பெரிதாகப் படிக்கவில்லை. ஆனால் அவரது கையெழுத்து மிக அழகாக இருக்கும்.

அவரது காலத்தில் தனித் தமிழ் இயக்கம் மிகத் தீவிரமாக இருந்தது. ஆனால், கி.ராவைப் பொறுத்தவரை பேச்சுத் தமிழ் மிக முக்கியம் எனக் கருதினார். நாட்டுப்புற கதைகள் அனைத்தும் பேச்சுத் தமிழில் அமைந்தவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். கடைசிவரை அந்த நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார்.

அதனால்தான் வட்டாரச் சொல் அகராதியை ஒன்றை உருவாக்க முடிவுசெய்தார். அப்படி உருவாக்கப்பட்டதுதான் கரிசல் வட்டாரச் சொல்லகராதி. இதனை அன்னம் - அகரம் பதிப்பகம் வெளியிட்டது. மாரீஸ், உதயசங்கர், தமிழ்செல்வன் போன்ற பலர் இந்த அகராதி வெளிவருவதற்கு உதவி செய்தனர். அதேபோல, கரிசல் வட்டார சிறுகதைகள் என்று ஒரு தொகுப்பையும் கொண்டுவந்தார். இப்போதைய பல முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன. ஜூனியர் விகடனில் கரிசல் காட்டுக் கடுதாசி என்ற அவரது தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வெங்கடசுப்பிரமணியம் இருந்தபோது இவரை கௌரவ பேராசிரியராக நியமித்தார். அவர் புதுச்சேரிக்கு வந்த பிறகுதான் கதைசொல்லியைத் துவங்கினோம்.

கி.ரா என்னும் கரிசல்காட்டு நெடுங்கதை

பட மூலாதாரம், SIVAKUMAR

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மிகவும் விரும்பினார். ஆனால், பல முறை முயற்சி செய்தும் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. ஆனால், மு. கருணாநிதி இவருடைய படைப்புகளைப் பற்றி பேசியிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவும் இவருடைய புத்தகங்களை என்னிடமிருந்து கேட்டு வாங்கிப் படித்தார்.

பிரபாகரன் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்தபோது படிப்பதற்கு புத்தகங்களைக் கேட்டார். நேரு எழுதிய புத்தகங்கள், கோபல்ல கிராமம் ஆகிய புத்தகங்களைக் கொடுத்தேன். கோபல்ல கிராமத்தைப் படித்துவிட்டு மிகச் சிறப்பாக இருக்கிறதே, யார் இவர் என்று கேட்டார். பிரபாகரனை அழைத்துச் சென்று கி.ராவிடம் அறிமுகப்படுத்திவைத்தேன். அப்போது வெளிவந்திருந்த கன்னிமை என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பில் கி.ரா. கையெழுத்திட்டு பிரபாகரனிடம் கொடுத்தார். அதில் கி.ரா. எழுதும்போது, "கரிகாலன்னு என் பேர எழுதுங்க" என்றார் பிரபாகரன். "சோழ நாட்டுக் கரிகாலனைப் போல ஈழ நாட்டுக் கரிகாலனும் வெற்றிபெற வேண்டும்" என எழுதிக் கொடுத்தார் கி.ரா.

வைகோ, சுதந்திரா கட்சியினர் என பல தரப்பினருடனும் நெருக்கமாக இருந்தார் கி.ரா. அவருக்கு 100ஆம் ஆண்டுவிழாவை நடத்துவதற்கான குழுவை இன்னும் சில நாட்களில் அமைக்கவிருந்தோம். அதற்குள் மறைந்துவிட்டார் கி.ரா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :