'இந்தியன் 2': இயக்குநர் ஷங்கர் லைகா நிறுவனம் மீது குற்றச்சாட்டு

பட மூலாதாரம், LYCA
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் அறிவிக்கப்பட்ட 'இந்தியன் 2' படப்பிடிப்பிற்கான தாமதத்துக்கு லைகா நிறுவனமே காரணம் என ஷங்கர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
'இந்தியன்2' அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் 1996ம் வருடம் வெளியான 'இந்தியன்' படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு 2017ல் வெளியானது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், மறைந்த நடிகர் விவேக் என பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு அமலாவதற்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் சென்னை, ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக செட்டில் கிரேன் விழுந்ததில் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. இதனால், பலர் காயமடைய இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் 3 பேர் இறந்தது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விபத்திற்கு யார் காரணம்?

பட மூலாதாரம், LYCA
இதனையடுத்து, இந்த விபத்து ஏற்பட காரணம் தயாரிப்பு நிறுவனத்தின் அலட்சியம் என கமல்ஹாசன் குற்றம் சொல்ல, கமல்ஹாசனுக்கும் லைகா நிறுவனத்திற்குமான புகைச்சல் வெளிப்படையாக வர ஆரம்பித்தது.
இது குறித்து லைகா நிறுவனமும் தங்கள் தரப்பில் இருந்து கமலை நேரடியாக தாக்கி பதில் கடிதம் அளித்தது. அதில், "தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தும் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்று, தவறை சரி செய்ய வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் எங்கள் தரப்பில் சரியாக செய்யப்பட்டிருப்பதால் அனுபவம் வாய்ந்த நடிகரும், இயக்குநரும் இருக்கும் போது உங்கள் தலைமையில் எல்லாம் சரியாகவே இருக்கும் என எதிர்ப்பார்த்தோம். பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளும், நிவாரணத்தொகையும் அளிக்கப்பட்டுள்ளன. இவை உங்கள் கவனத்திற்கு வராதது வருத்தமே" என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன் பிறகு கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து, குறைந்த ஆட்களோடு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்ட போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் 'விக்ரம்' படத்தை அறிவித்தார் கமல்ஹாசன். அவர் பிறந்தநாளின் போது, படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீசரும் வெளியானது. இன்னொரு பக்கம் தெலுங்கில் நடிகர் ராம் சரணுடன் ஒரு படம் இந்தியில் ரன்வீருடன் 'அந்நியன்' ரீமேக் என அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் ஷங்கர்.
இயக்குநர் ஷங்கர் மீது வழக்கு

பட மூலாதாரம், LYCA
இதனையடுத்தே லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. 'பாதிக்கும் மேலான படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதனால், இயக்குநர் ஷங்கர் 'இந்தியன் 2'-வை முடித்துவிட்டுதான் வேறு படங்களை இயக்க வேண்டும்' என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இயக்குநரையும் தயாரிப்பு நிறுவனத்தையும் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்ய அறிவுறுத்தியது.
இதனையடுத்து, படத்தில் மறைந்த நடிகர் விவேக்கிற்கான காட்சிகள் முழுமையடையாத நிலையில், அதனை மறுபடியும் எடுக்க வேண்டும் எனவும் மீதமுள்ள படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபருக்குள் முடித்து கொடுத்து விட தயார் எனவும் இயக்குநர் ஷங்கர் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், தயாரிப்பு தரப்போ ஜூனிற்குள் முடித்து தர வேண்டும் அழுத்தம் கொடுத்ததால் அவர்களுக்குள்ளான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து மீண்டும் இருதரப்பும் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதற்கிடையில், ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசனுடன் நடந்த சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து கொரோனா லாக்டவுன் முடிந்ததும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளிவர ஆரம்பித்தது.
'தாமதத்திற்கு லைகா நிறுவனமே காரணம்'
இந்த நிலையில்தான், தற்போது இயக்குநர் ஷங்கர், லைகா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி பதில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதில், "படப்பிடிப்பு தொடங்குவது, அரங்குகள் அமைப்பது, படத்தின் பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்து நிதி ஒதுக்குவது என தேவையில்லாத தாமதத்தை லைகா நிறுவனம்தான் ஏற்படுத்தியது. நடிகர் கமல்ஹாசனுக்கு மேக்கப் அலர்ஜி ஏற்பட்டு படப்பிடிப்பு தாமதமானதற்கு நான் பொறுப்பல்ல. மேலும் படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதும் படப்பிடிப்பு தாமதமானதற்கு ஒரு காரணம்" என இயக்குநர் ஷங்கர் அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பது மீண்டும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
- இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவிய 137 ராக்கெட்டுகள்: காசா தாக்குதலுக்கு பதிலடி
- எம்.பி பதவி: தரைவார்த்த அ.தி.மு.க; தி.மு.கவுக்கு ஜாக்பாட் - யாருக்கு வாய்ப்பு?
- குடும்பம், குழந்தையை கவனிக்காமல் கொரோனாவுடன் போரிடும் செவிலியர்களின் கதைகள்
- தமிழ்நாட்டில் கொரோனா மரணங்களைக் குறைக்க புதிய சிகிச்சை நெறிமுறை
- சிக்கல் தரும் சீன மக்கள்தொகை: குறையும் பிறப்பு விகிதம்; அதிகரிக்கும் முதியவர்கள்
- பிகாரை தொடர்ந்து உ.பி காஸிபூர் நதிக்கரையிலும் ஒதுங்கிய சடலங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













