கன்னியாகுமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட விஜய் வசந்த் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

அவரை எதிர்த்து பாஜக சார்பாக போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இதுவரை விஜய் வசந்த் 5,67,280 வாக்குகளையும், அவரை எதிர்த்து பாஜக சாபாக போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் 4,32,906 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதனால், விஜய் வசந்த் 1,34,374 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றிபெற்ற வசந்த் அண்ட் கோ வணிக நிறுவனரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வசந்தகுமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்றுக்குப் பிந்தைய சிகிச்சையின்போது உயிரிழந்தார். இதனால், அவர் மக்களவைக்குதேர்வான கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அந்த தொகுதியில் காங்கிரஸ் உறுப்பினரும் வசந்தகுமாரின் மகனுமான விஜய் வசந்த்துக்கு போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கியது.

கன்னியாகுமரியில் தனது தந்தை வசந்தகுமார் கண்ட கனவை நனவாக்குவதே தலையான கடமை என்று கூறி வந்த விஜய் வசந்த், தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளதால், அதன் மூலம் அவருககு கிடைத்த பிரபலம் தொகுதி மக்களை நெருங்க உதவியது.

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் முக்கிய போட்டியாளராக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் பொன்.ராதாகிருஷ்ணனை வசந்தகுமார் தோல்வியடைய செய்தார். இப்போது அவரது மகனான விஜய் வசந்த்திடமும் பொன். ராதாகிருஷ்ணன் தோல்வி அடையும் வகையில் தேர்தல் முன்னிலை நிலவரம் உள்ளது.

இதற்கிடையே, தனது தேர்தல் வெற்றி முடிவு உறுதியாகும் கட்டத்தில் இருப்பதால், தனது ட்விட்டர் பக்கம் மூலம் தொகுதிவாசிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் விஜய் வசந்த்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: