You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பினராயி விஜயன்: கேரளாவில் 'வேட்டி கட்டிய மோதி' ஆக அழைக்கப்பட்ட முதல்வர்
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி
சிபிஎம் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியை (எல்.டி.எஃப்) வெற்றிக்கு வழிநடத்திய பினராயி விஜயன், இரண்டு அசாதாரணமான சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்களுடன் ஒப்பிடப்படுகிறார். இந்தியாவில் மட்டுமல்ல, முந்தைய சோவியத் ஒன்றியத்திலும் உள்ள தலைவருடன் அவர் ஒப்பிடப்படுகிறார்.
பினராயி விஜயனை அவரது விமர்சகர்களும் சரி தீவிர ரசிகர்களும் சரி, `` வேட்டி கட்டிய மோதி" என்றும் ``கேரளாவின் ஸ்டாலின், '' என்றும் வருணிக்கின்றனர். முந்தைய சோவியத் ஒன்றியத்தின் சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின்.
தேர்தல் பிரசாரத்தின்போது, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சிலரே, ``கேப்டன்'' என்ற பட்டப்பெயரிட்டு பினராயி விஜயன் அழைக்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அத்தகைய பெயர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் தலைவர்களை எரிச்சலூட்டக்கூடியதாக இருக்கும்.
கட்சியின் ஒரு மூத்த தலைவர், கம்யூனிஸ்ட் கட்சியில் அனைவரும் சமம் என்பதைக் கட்சி ஊழியர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது. பொலிட் பீரோ என்று அழைக்கப்படும் மிக உயர்ந்த கொள்கை உருவாக்கும் அமைப்பில் உறுப்பினரானாலும் சாதாரண அட்டை வைத்திருக்கும் உறுப்பினரானாலும் அவர் ஒரு `` தோழர். '' தான்.
ஆனால், மூத்த தலைவரின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, தோழர்கள் பினராயி விஜயனை 'கேப்டன்' என்றே குறிப்பிடுகிறார்கள்.
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில் கடவுளின் தேசம் என்று அடை மொழியால் குறிக்கப்படும் கேரள மாநிலத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த பினராயி விஜயனின் தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் இருப்பதாக அவரின் அடிவருடிகள் கருதுகிறார்கள்.
மக்கள் நல திட்டங்கள், ஓய்வூதியம், மற்றும் இலவச ரேஷன்கள் என்று அவர் மக்களுக்குப் பல நல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார் என்பதை அவரது ஆதரவாளர்களும் விமர்சகர்களும் கூட ஒப்புக்கொள்வார்கள். கேரளாவில் வெள்ளம், நிபா வைரஸ் தாக்கம், கோவிட் தொற்று ஆகிய பேரழிவுக் காலத்தில், அவர் மாநிலத்திற்கு நல்ல தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார்.
"அவர் ஒரு வலிமையான தலைவர் மற்றும் கடினமான பணி முடிப்பாளர் என்பதை மக்களுக்கு நிரூபித்துள்ளார். அது அவருடைய ஆளுமையின் ஒரு பக்கம் மட்டுமே. கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மற்ற தலைவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்துவது அவரது மற்றொரு பக்கம் தான்" என்று கேரள பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் அரசியல் ஆய்வாளருமான பேராசிரியர் ஜே. பிரபாஷ் பிபிசி இந்திக்கு தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜோசப் ஸ்டாலின் ஆகியோரின் தலைமைப் பண்புகளுடன் இவரின் சில பண்புகளை மக்கள் ஒப்பிடுவதும் இதனால் தான்.
ஆனால், அதற்கு முன்னர்...
வலுவான மனிதர் உருவான கதை
மோடியைப் போலவே, விஜயனும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். கண்ணூர் மாவட்டத்தின் பினராயி கிராமத்தில் கள்ளிறக்கும் எழவா சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு விஜயன் பிறந்தார்.
நிர்வாகத்துடன் அவரது முதல் மோதல், படகுப் போக்குவரத்துக் கட்டண உயர்வைக் கண்டித்து அவர் ஒரு மாணவர் போராட்டத்தை முன்னெடுத்த போது தொடங்கியது. கேரள மாணவர் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்த அவர் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுக்குப் பின்னர் இந்திய மாணவர் கூட்டமைப்பாக மாறிய அதன் உறுப்பினரானார்.
பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பிறகு, விஜயன் ஒரு கைத்தறி நெசவாளராகவும் பணியாற்றினார். கண்ணூர் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சி.பி.எம் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட முதல் அரசியல் கொலைகளில் அவர் குற்றம் சாட்டப்பட்ட போது அவர் தனது 20-களில் இருந்தார். ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வாடிக்கல் ராமகிருஷ்ணன் கொலைக்கு இருந்த ஒரே சாட்சி 1969 ல் தன் வாக்கு மூலத்தை மாற்றியதையடுத்து, விஜயன் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஒரு ஒழுங்குள்ள மனிதராக அறியப்பட்ட அவர், 1975 அவசரநிலைக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். காவலில் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உண்டு. காவல்துறையினரால் அவர் தவறாக நடத்தப்பட்டது அவரின் மன நிலை மாற்றத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
சர்வாதிகார மனப்பாங்கின் அறிகுறிகள்
" இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் (டி.ஒய்.எஃப்.ஐ) தலைவராக, அவர் முற்றிலும் சர்வாதிகாரியாக இருப்பதைக் கண்டோம். அவர் எந்த விமர்சனத்தையும் சகித்துக் கொள்ளவில்லை" என்று அக்காலத்தில் கட்சியின் கலாச்சாரப் பிரிவில் இருந்த மலையாளக் கவிஞர் உமேஷ் பாபு பிபிசி இந்திக்கு தெரிவித்தார்.
ஆனால், கட்சியின் கண்ணூர் மாவட்டச் செயலாளராக விஜயனின் பணி அவரைக் கட்சியின் மிக மூத்த தலைவரும் சிபிஎம் நிறுவனர்களில் ஒருவருமான வி.எஸ்.அச்சுதானந்தனுடன் நெருங்கி வரச் செய்தது.
1998 இல் செடியன் கோவிந்தனின் திடீர் மரணம் அந்த இடத்தை விஜயனுக்கு அளிக்க வழிவகுத்தது. மேலும், அவர் 17 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்துச் சாதனை செய்துள்ளார். 2015-ல் பதவிக் காலத்துக்கான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டதையடுத்து அவர் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
"விஜயன் மாநிலச் செயலாளரான பிறகு, கட்சிக்குள் தனிமைப்படுத்தப்பட்டார் வி.எஸ். 2006 ஆம் ஆண்டில் வி.எஸ். தேர்தலில் போட்டியிடுவதைக் கூட இவர் தடுக்க முயன்றார், இது ஒரு பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், விஜயனின் முடிவைக் கட்சி நிராகரித்தது, '' என்றார் பாபு.
மேலும் பாபு, "அவர் பயன்படுத்திய முறை ஸ்டாலினின் முறை போன்றது தான். ஸ்டாலின் கட்சியின் செயலாளரானபோது, எதிர்காலத்தில் தனது எதிரிகளாக மாறக்கூடிய அனைவரையும் வெளியேற்றினார். மேலும், அவர் கட்சியின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவரானார்" என்று கூறினார்.
விஜயனின் பழைய நண்பராக இருந்து எதிரியாக மாறிய குனஹானந்த நாயர் (பிரபலமாக பெர்லின் நாயர் என்று அழைக்கப்படுகிறார்) பிபிசி இந்தியிடம், "நான் அவரை எப்போதும் கேரளாவின் ஸ்டாலின் என்று தான் அழைப்பேன். கம்யூனிசத்திற்காக ஸ்டாலின் நிறைய செய்தார். பினராயி ஒரு மென்மையான இதயமுள்ள நபர். அதில் அவர் ஸ்டாலினுடன் ஒப்பிடத்தக்கவர். இதை நான் நேர்மறையான அர்த்தத்தில் கூறுகிறேன்." என்றார்.
மூத்த அரசியல் விமரிசகர் பி.ஆர்.பி. பாஸ்கர் இதை வேறு விதமாகப் பார்க்கிறார். "அவரை வேட்டி கட்டிய மோடி என்று குறிப்பிடுவதன் காரணமே அவர் அதிகாரம் செலுத்துகிறார் என்பதால் தான்" என்பது அவர் கருத்து.
கட்சிக் கட்டமைப்பை விரிவாக்கினார்
ஆனால், விஜயன் கட்சியின் தளத்தை விரிவுபடுத்தினார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
சி பி எம், எப்போதும் ஒரு "இந்து கட்சியாக" தான் கருதப்பட்டது. கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் பெரும்பாலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளித்தனர். அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஒரு அங்கமாக இருந்தது. கேரள காங்கிரஸ் (மணி) , கிறிஸ்தவ சமூகத்தின் நலன்களை வலுயுறுத்துவதாக இருந்தது.
கேரள அரசியலில் ஒரு முக்கியமான கட்டத்தில் இந்து கட்சி என்ற அந்த பிம்பத்தை விஜயன் மாற்றினார். ஒரு காலத்தில், கட்சி தனது உறுப்பினர்களை இழந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது, ஆனால் உறுப்பினர் வீழ்ச்சி ஏற்படவில்லை. முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களிடமிருந்து உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம் கட்சி தனது உறுப்பினர்களை விரிவுபடுத்தியதே இதற்குக் காரணம்.
"இதை அவர் மிகவும் புத்திசாலித்தனமாகச் செய்தார். இது பழம் பெருச்சாளிகளின் கட்சியல்ல. புதிய உறுப்பினர்கள் அவரைக் கவனிக்கிறார்கள். அவர் வியூகம் அமைப்பதில் வல்லவர். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மோதியுடன் ஒப்பிடக்கூடிய பல அம்சங்கள் இவருக்கு உள்ளன." என்றார் பாஸ்கர்.
கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக விஜயன் விரைவாக சீன வழியை ஏற்றுக்கொண்டார். "கைரளி டிவி சேனல் ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம். இது ஒரு வருட காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டம். இதற்கு, வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளிகளின் உதவி பெறப்பட்டது. கார்ப்பரேட் இந்தியாவில் கிரவுட் ஃபண்டிங்க் என்பது ஒரு நாகரீகமான வார்த்தையாக மாறுவதற்கு முன்பே அவர் இதைச் செயல்படுத்தியுள்ளார். சீனாவின் சோசலிச சந்தைப் பொருளாதாரத்தைப் போலவே, அவர் ஒரு சோசலிச சந்தைக் கட்சியை உருவாக்கியுள்ளார், '' என்றார் பாஸ்கர்.
முதலமைச்சரின் ஊடக ஆலோசகரும் விருது பெற்ற கவிஞருமான டாக்டர் பிரபா வர்மா, பிபிசி இந்தியிடம், "அவர் எந்த முடிவுகளை எடுத்தாலும் அது எப்போதும் கட்சிக் கொள்கையுடன் ஒத்துப்போகிறது. அவர் பொலிட்பீரோவில் உறுப்பினராக உள்ளார், கட்சியின் கோட்பாடுகளை அவர் நன்கு அறிவார்." என்று தெரிவிக்கிறார்.
விஜயனுக்கும் அப்போதைய முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதல்களால், கட்சி இருவரையும் சிறிது காலம் பொலிட்பீரோவிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது. அச்சுதானந்தன் மக்கள் அபிமானம் பெற்ற ஒரு தலைவராகிவிட்டார், ஆனால் அவர் செய்த அனைத்தையும் கட்சித் தலைவர் விஜயன் அழிக்க வேண்டும்.
2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, கட்சித் தலைமை, விஜயனைத் தான் முதல்வராக்க விரும்பியது. காரணம், அவருக்கு 72 வயதாகியிருந்தாலும், அச்சுதானந்தனை விட அவர் 20 வயது இளையவராக இருந்தார்.
எவ்வித சிக்கலையும் கையாளும் ஆளுமை
ஆனால், விஜயன் ஒரு முதலமைச்சராகத் திறமையான நிர்வாகத்தை வழங்கினார். ஆரம்பத்தில் அவர் முதலமைச்சராக இருப்பதை விட கட்சி செயலாளரைப் போலவே செயல்படுகிறார் என்று நினைத்தவர்கள் விரைவில் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டனர். கேரளாவைத் தாக்கிய ஒவ்வொரு இயற்கைப் பேரிடரும் முதலமைச்சரின் புதிய ஆற்றல் ஒன்றை வெளிக்கொண்டு வந்தது. அதுவே மக்கள் அவருக்கு `` கேப்டன் '' என்ற பட்டத்தை வழங்க வைத்தது.
மீனவர் சமூகங்களைப் பேரழிவிற்கு உட்படுத்திய 2018 மற்றும் 2019 புயல், வெள்ளாமாகட்டும், நிபா வைரஸ் ஆகட்டும் அல்லது நீண்ட காலம் நீடித்து வரும் கோவிட் -19 ஆகட்டும். முதல்வர் நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருந்தார். 2018 வெள்ளத்தில், பஞ்சாயத்து மட்ட அதிகாரிகள் வரை முடிவெடுப்பதைப் பரவலாக்குவதன் மூலம் மக்களை ஒன்றுபட்ட சக்தியாகச் செயல்பட வைத்தார்.
கேரளாவை பேரழிவிற்கு உட்படுத்திய வெள்ளத்தின் போது முதல்வர் காலை 9 மணிக்கு முதலமைச்சர் அலுவலகத்திற்கு வந்து அதிகாலை 1.30 மணி வரை அதிகாரிகள் மற்றும் பிறருடன் ஒருங்கிணைந்து பணியாற்றினார் என்று அவரது அலுவலக அதிகாரிகள் நமது செய்தியாளரிடம் கூறினர். சாதாரண நாட்களில் அவர் காலை 9 மணி முதல் இரவு 10 -10.30 மணி வரை பணியாற்றுவார்.
ஒவ்வொரு முறையும் ஒரு நெருக்கடி அரசை சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு முறையும் ஊடகங்களை தனிப்பட்ட முறையில் செய்தியாளர் சந்திப்பை தினந்தோறும் கூட்டிய அவரது செயல், அவரது ஆளுமையை மேம்படுத்தியது. " இந்த நம்பிக்கைக்குரிய மனிதர் நிலைமையின் மொத்தப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டுள்ளார் என்று உணர்ந்ததால் மக்கள் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றனர். அவர் ஒரு தீர்க்கமான தலைவராகப் பார்க்கப்படுகிறார்,'' என்று பெயர் கூற விரும்பாத ஒரு பத்திரிகையாளர் கூறினார்.
ஆனால், அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்கும் பிரச்னையில் மட்டுமே அவர் தடுமாறினார். "இது முற்றிலும் காவல் துறையினரின் விவகாரம். காவல் துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் தான் அவர் செயல்பட்டார். உம்மன் சாண்டி (காங்கிரஸ் தலைவர்) போல, ஒரு அனைத்துக் கட்சி கூட்டத்தை அவர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தால், பிரச்சினையை எளிதாகத் தீர்த்திருக்கலாம்" என்கிறார் பெயர் கூர விரும்பாத ஒரு முன்னாள் அதிகாரி.
மற்றொரு முன்னாள் அதிகாரி, "எங்களில் சிலரின் கருத்து என்னவென்றால், அவர் அவசர நிலை காலத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அவர் அனுபவித்த சித்திரவதைகளின் காரணமாக அவர் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் என்ற நோய்க் குறியால் பாதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கே கருணாகரனுக்கு காவல்துறையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியும். இவர் அப்படியே எதிர்மாறானவர். காவல்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கையாளுவதில் இவர் தவறி விடுகிறார்." என்று கூறுகிறார்.
அவர் மீது காவல் துறையினரின் தாக்கம் பெருமளவில் இருப்பதாகக் கருதப்படுவதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், சுகாதாரத் துறை, உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் விஜயன் கொண்டு வந்த நடைமுறைகள், அவருக்குப் புகழ் சேர்த்துள்ளது.
இல்லையெனில், விஜயனின் தடைசெய்யும் ஆளுமை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பேசுவதைத் தடுக்கிறது. ஆனால், சில அதிகாரிகள் தனிப்பட்ட முறையில், "அவர் ஒருபோதும் கண்ணியமிக்க ஒருவரைத் தவறு செய்யத் தூண்டியதில்லை. இது அவரது தனிச்சிறப்பாகும். அவர் யாருடைய ஆலோசனையையும் எடுத்துக்கொள்வதில்லை என்ற ஒரு கருத்து பரவலாக நிலவுகிறது. அது உண்மை இல்லை. அவர் கேட்டுக்கொள்கிறார், ஆனால் சொந்தமாக முடிவுகளை எடுக்கிறார், '' என்றார் ஒரு அதிகாரி.
ஆனால், பேராசிரியர் பிரபாஷ் விஜயனின் முடிவெடுக்கும் திறன்களைப் பற்றி வேறுபட்ட கருத்தைத் தெரிவிக்கிறார்.
"அவர் ஒரு சக்தி மையமாக மாறிவிட்டார். இது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் கூட்டுத் தலைமை என்ற கருத்தையே தோற்கடிக்கிறது. எனவே, மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது சிபிஎம் எந்த விதத்தில் வேறுபடுகிறது? இதே தான் சற்றேறக்குறைய பாஜகவில் நடக்கிறது. அந்த வகையில் இங்குள்ள சிபிஎம்-ஐ விட பாஜக ஜனநாயகமானது. இதில் கேரளாவில் ஒருவரைப் போலல்லாமல் இரண்டு நபர்கள் உள்ளனர்" என்றார் அவர்.
மேலும், பேராசிரியர் பிரபாஷ், "சமூக நலன் என்பது ஒரு பாதுகாப்பு வலையாகும், சமூகத்தைப் பொறுத்தவரை சமூக மாற்றம் என்பது ஒரு அடிப்படை மாற்றமாகும். சமூக மாற்றம் என்ற சோதனையை விஜயனின் அரசாங்கம் கடந்து செல்லும் என்று நான் நினைக்கவில்லை. விஷயங்களை மாற்றுவதை விட விஷயங்களை நிர்வகிக்கும் ஒரு அரசாங்கத்திற்கு அவர் தலைமை தாங்கினார்." என்று கூறினார்.
விஜயன் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு எதிர்காலத்தில் தனது கட்சியின் நலனுக்கு உதவுவாரா என்பது தான் இப்போது எழும் கேள்வி
பிற செய்திகள்:
- தமிழக தேர்தல் முடிவுகள்: சமூக ஊடகங்களில் பிரபலங்கள் சொல்வது என்ன?
- "நான் அவர்களிடம் படுக்கை கேட்டேன், அவர்கள் எனக்குச் சடலங்களைக் காட்டினார்கள்"
- கொரோனா தடுப்பூசி தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்து கொள்ள முடியுமா?
- என்ஜிடி நிபுணத்துவ உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்த கிரிஜா வைத்தியநாதன்
- 18 வயதுக்கு மேல் கொரோனா தடுப்பூசி: மோதி அரசின் அறிவிப்பை செயல்படுத்த மாநிலங்கள் தயாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: