You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நந்திகிராம் முடிவுகள்: மமதா பானர்ஜி தோற்றது உண்மையா?
மேற்கு வங்க தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மொத்தம் உள்ள 294 இடங்களில் 200க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதையடுத்து, அக்கட்சி மீண்டும் அங்கு ஆட்சியை தக்க வைப்பது உறுதியாகி விட்டது.
ஆனால், நந்திகிராம் தொகுதியில் தேர்தல் களம் கண்ட முதல்வர் மமதா பானர்ஜிக்கும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரான சுவேந்து அதிகாரிக்கும் இடையே தேர்தல் முடிவுகளில் யார் வென்றது என்ற சர்ச்சை தொடர்ந்து நிலவியது.
தொடக்கம் முதலே ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், மாலையில் மமதா பானர்ஜி 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக தகவல் வெளியானது. பிறகு இரவு 8 மணியைக் கடந்த வேளையில், மமதா பானர்ஜியை விட சுவேந்து அதிகாரி 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து மறு கூட்டலுக்கு மமதா பானர்ஜி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டதில் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி வென்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
முன்னதாக மமதா பானர்ஜி, "கவலைப்படாதீர்கள். நந்திகிராம் மக்கள் என்ன தீர்ப்பு வேண்டுமனாலும் வழங்கட்டும். அதை நான் ஏற்கிறேன். மாநிலத்தில் நாம் வெற்றி பெற்று விட்டோம். எது நடந்ததோ அது நல்லதுக்கு தான். சில தவறுகள் நடந்ததாக நான் கேள்விப்பட்டதால் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்," என்று கூறினார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நந்திகிராம் தொகுதியில் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தை எதிர்த்து மமதா பானர்ஜி கடுமையாக குரல் கொடுத்த விவகாரம், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸுக்கு ஆதரவான மனநிலையை வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
அதே திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு நந்திகிராம் தொகுதியில் ஆரம்ப சுற்றுகளின்போது பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் முடிவுகள் மமதா பானர்ஜிக்கு பாதகமாக வந்திருக்கிறது.
இதேவேளை, மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைப்பது உறுதியானதால், மமதா பானர்ஜிக்கு உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேற்கு வாங்க மாநிலத்தில் மமதா பானர்ஜிக்கும் அவர் தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸுக்கும் ஆதரவாக தேர்தல் உத்திகள் மற்றும் பரப்புரை உத்திகளை வகுக்கும் பணியில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர், நான் முன்பு உறுதியளத்ததைப் போலவே மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கிறது. இனி இங்கு நேரடியாக எனது பங்களிப்பை குறைத்துக் கொண்டு எனது ஐபேக் நிறுவன ஊழியர்கள் இங்கு மக்கள் சேவைகளை ஆளும கட்சி நிறைவேற்ற ஆதரவாக செயல்படுவார்கள் என்று தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியின் முன்னிலை தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஃபிராத் ஹக்கீம், "பிரித்தாளும் அரசியலை செய்து மாநிலத்தில் கட்சியை பிளவுபடுத்தி தேர்தலில் வெல்லலாம் என பாஜக நினைத்தது. மேற்கு வங்க மாநிலத்தில் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக கையாண்ட தவறான கொள்கையால் இடதுசாரிகள் பலம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து பாஜக மாநிலத்தில் அதிகாரத்தில் அமர முயன்றது. ஆனால், அது நடக்கவில்லை," என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, கொல்கத்தாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரிணாமூல் காங்கிரஸின் வெற்றியைக் கொண்டாட அக்கட்சி தொண்டர்கள் குவியத் தொடங்கினர். ஆனால், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் காரணமாக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கவனத்தில் கொண்டு கூட்டம் கூடாமல் இருக்க காவல்துறையினர் கேட்டுக் கொண்டதால், ஒருசிலர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஏ. தங்கவேல், பிபிசி தமிழ் ஆசிரியர் பார்வை
மேற்கு வங்கத்தை பொருத்தவரை, இம்முறை பாரதிய ஜனதா கட்சி ஏறத்தாழ ஆட்சியை பிடித்து விடும் என்று பேசப்பட்டது. ஆனால், மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் வகையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 200 இடங்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று வருகிறது. கடந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 211 இடங்களில் வென்றது. இம்முறையும் ஏறத்தாழ அந்த இடங்களை நோக்கி அக்கட்சி முன்னேறி வருகிறது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மமதா பானர்ஜி தனி ஒரு நபராக தன்னை மையப்படுத்தி இந்த முறை தேர்தல் பரப்புரையை செய்தார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்தபோது அவர் மேற்கொண்ட தேர்தல் பரப்புரைகள், அவரை மையப்படுத்தியதாகவே இருக்கும். அதுபோலவே, மமதா பானர்ஜியின் பரப்புரை அமைந்ததாக நான் பார்க்கிறேன்.
மேற்கு வங்க மாநிலத்தில் இப்போது வலுவான எதிர்கட்சியாக பாரதிய ஜனதா கட்சி மட்டுமே இருக்கிறது. இந்த தேர்தலில் மமதா பானர்ஜிக்கு சாதகமாக இரண்டு விஷங்கள் இருந்தன. முதலாவதாக இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் அந்த மாநிலத்தில் செல்வாக்கை இழந்து காணாமல் ஆக்கப்பட்டு விட்டது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அந்த பின்னடைவு, மாநிலத்தில் டிஎம்சிக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி இருப்பதற்கான சூழலை உருவாக்கின.
இரண்டாவதாக, மேற்கு வங்கத்தில் பெண் வாக்காளர்கள் மிக அதிக அளவில் மமதா பானர்ஜிக்கு சாதகமாக வாக்களித்திருப்பதாக பார்க்க முடிகிறது. அதன் பிரதிபலிப்பாகவும் டிஎம்சி, இந்த அளவுக்கு ஒரு வெற்றியை எட்டியிருப்பதாக கருத முடிகிறது.
பாஜக, டிஎம்சி இடையே நேரடி போட்டி தீவிரமானபோது, அந்த மாநிலத்தில் பெங்காலிகளின் பெரும் எனும் முழக்கத்தை மமதா பானர்ஜி கையில் எடுத்தார். அந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாநில அளவிலான அடித்தளம் இல்லை. பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்களை முன்னிலைப்படுத்தியே அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். எனவே, வெளியாட்கள் வந்து பெங்காலிகளை ஆளக்கூடாது என்ற உணர்வுப்பூர்வமான முழக்கத்தை மமதா பானர்ஜி முன்வைத்தது, தேர்தலில் டிஎம்சிக்கு சாதகமாக வெற்றியை தேடித்தந்ததாகவே பார்க்க முடிகிறது.
இது தவிர, பாரதிய ஜனதா கட்சி இந்துத்துவ முழக்கத்தை தனது தேர்தல் பரப்புரையில் கையில் எடுத்தது. அதன் விளைவாக, அந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக டிஎம்சிக்கு ஆதரவாக திரும்ப காரணமானது. மேலும், இந்துத்துவ முழக்கத்தை பாஜக கையில் எடுத்தபோதும், அந்த உத்தி எடுபடவில்லை. பெங்காலி வாக்காளர்களை பிரிக்க பாஜக கையாண்ட உத்தி கைகொடுக்கவில்லை என்பதையே முன்னிலை விவரம் காட்டுகிறது என்கிறார் தங்கவேல்.
பிற செய்திகள்:
- தமிழக தேர்தல் முடிவுகள்: சமூக ஊடகங்களில் பிரபலங்கள் சொல்வது என்ன?
- "நான் அவர்களிடம் படுக்கை கேட்டேன், அவர்கள் எனக்குச் சடலங்களைக் காட்டினார்கள்"
- கொரோனா தடுப்பூசி தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்து கொள்ள முடியுமா?
- என்ஜிடி நிபுணத்துவ உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்த கிரிஜா வைத்தியநாதன்
- 18 வயதுக்கு மேல் கொரோனா தடுப்பூசி: மோதி அரசின் அறிவிப்பை செயல்படுத்த மாநிலங்கள் தயாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: