தமிழ்நாடு அரசு வழங்க வேண்டிய கடன்; விழுப்புரம் ஆட்சியர் அலுவலக சொத்துகளை ஜப்தி செய்ய வந்த மனுதாரர்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு இடம் வழங்கியவருக்கு நீதிமன்ற உத்தரவின்படி 39 கோடி ரூபாய் இழப்பீடு வழங்காததால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தின் அசையும் சொத்துகளை நீதிமன்ற அலுவலர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு விழுப்புரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சண்முக உடையார் என்பவர் 6 ஏக்கர் 75 செண்ட் நிலத்தினை 1991ஆம் ஆண்டு வழங்கியுள்ளார்.
அந்த இடத்திற்கு வீட்டு வசதி வாரியம் குறைவான இழப்பீட்டுத் தொகை வழங்கியதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகன் சிவானந்தம் என்பவர் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2007ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கின் அடிப்படையில், மனுதாரர் சிவானந்தத்திற்கு ரூ.39 கோடியே 36 லட்சத்து, 59 ஆயிரம் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.
ஆனால், மாவட்ட நிர்வாகம் தரப்பில் இழப்பீடு வழங்கப்படாத காரணத்தினால், மனுதாரர் சிவானந்தம் கடந்த 2020ஆம் ஆண்டு, இந்தத் தீர்ப்பை நிறைவேற்றித் தரக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி, மனுதாரர் சிவானந்தத்திற்குத் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த தமிழக அரசு வீட்டு வசதி வாரியம், 2021 மார்ச் மாதம் 24ஆம் தேதிக்குள் சிவானந்தத்திற்கு வழங்கவேண்டிய ரூ.39 கோடி இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சிவானந்தத்திற்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் விழுப்புரம், வீட்டு வசதி பிரிவில் உள்ள அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துகள் அனைத்தையும் ஜப்தி செய்ய விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று சிவானந்தம் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற அலுவலர்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய வருகை தந்தார்.
இதனையடுத்து ஜப்தி செய்ய வந்த மனுதாரர் சிவானந்தம் மற்றும் நீதிமன்ற அலுவலர்களுடன் மாவட்ட நிர்வாகம், விழுப்புரம் வீட்டுவசதி வாரியம் தரப்பில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில், வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதிக்குள் இழப்பீட்டுத் தொகையை நீதிமன்ற உத்தரவின்படி செலுத்துவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.
இது குறித்து மனுதாரர் சிவானந்தத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியபோது, "நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஜப்தி செய்வதற்காக வந்தோம். ஆனால் விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் அடுத்த விசாரணை தேதியான ஜூன் மாதம் 2ஆம் தேதிக்குள் இந்த தொகையைச் செலுத்திவிடுவதாக எழுத்துபூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. இதனால் நீதிமன்றம் குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் வீட்டு வசதி வாரிய அலுவலகங்களை ஜப்தி செய்யவில்லை," எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக விழுப்புரம் வீட்டு வசதி செயற்பொறியாளரைத் தொடர்பு கொண்ட பேசியபோது, தற்போது ஜப்தி எதும் நடைபெறவில்லை. நீதிமன்றம் அறிவுறுத்தியபடி செயல்படுவதாக மனுதாரருக்கு உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- காசோலை மோசடி வழக்கில் ராதிகா, சரத்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை
- ஹேக்கர்கள் கசியவிட்ட 53 கோடி ஃபேஸ்புக் பயனர் தகவல்கள்: உங்கள் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா?
- மாஸ்க் அணியாத எளியவரை சாலையில் போட்டு அடிக்கும் போலீஸ்: மனம் கலங்க வைக்கும் வீடியோ
- திருமணமாகி 19 ஆண்டுகளுக்கு பின் தந்தையாகும் நிலையில் நக்சலைட் தாக்குதலில் இறந்த வீரர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












