பணம் பறிமுதலான தொகுதிகளில் தோ்தல் ரத்தாகுமா? தலைமை தோ்தல் அதிகாரி விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
(இன்று 5.04.2021 திங்கட்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
பணம் பறிமுதல் செய்யப்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப் பதிவை நிறுத்துவது குறித்து தோ்தல் ஆணையமே இறுதி முடிவை எடுக்கும் என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்ததாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் பல்வேறு ஆலோசனைகளை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டார். இந்த ஆலோசனைகளைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் "தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஏப். 6) நடைபெறுகிறது. தோ்தலில் வாக்குக்குப் பணம் அளிப்பதை கட்டுப்படுத்த தோ்தல் ஆணையம் தனது கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான காலத்தில் பல்வேறு தொகுதிகளில் லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை தொகுதியில் ரூ.91.56 லட்சமும், சிவகாசியில் ரூ.45 லட்சமும், பாளையங்கோட்டையில் ரூ.12.71 லட்சமும், விருதுநகரில் ரூ.65 லட்சமும், சைதாப்பேட்டையில் ரூ.1.3 கோடியும், வேலூரில் ரூ.1.06 கோடியும், ஆயிரம் விளக்கில் ரூ.1.23 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவுக்கு முன்பாக பணம் பட்டுவாடா செய்யப்படும் என்ற சந்தேகம் இருப்பதால் இரவு, பகலாக தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென மாவட்ட தோ்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும், வாக்குக்குப் பணம் கொடுப்பது தொடா்பாக 1950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் புகார்களை மக்களே தெரிவிக்கலாம். புகார்களை எந்த நேரத்திலும், எப்போது தெரிவித்தாலும் உடனடியாக சம்பவ இடத்துக்குப் பறக்கும் படையினா் செல்வா்.
தமிழகத்தின் பல்வேறு சட்டப் பேரவைத் தொகுதிகளில் வருமான வரித் துறை, பறக்கும் படையினா் மூலமாக ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்கப் பணம் பறிமுதல் தொடா்பாக, தோ்தல் நடத்தும் அதிகாரி, பொதுப் பார்வையாளா், செலவினப் பார்வையாளா், சிறப்பு செலவினப் பார்வையாளா், தலைமைத் தோ்தல் அதிகாரி ஆகியோர் தோ்தல் ஆணையத்துக்கு தனித்தனியாக தகவல்களை அனுப்பியுள்ளனா்.
இந்த தகவல்கள் அனைத்தையும் இந்தியத் தோ்தல் ஆணையம் பரிசீலிக்கும். இதன்பின்பே, அதிகளவு பணம் பறிமுதல் செய்யப்பட்ட தொகுதிகளில் தோ்தல் ரத்தாகுமா அல்லது திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதை ஆணையம் முடிவு செய்யும்" என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 3,581 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் மேலும் 3,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 99 ஆயிரத்து 807 (8,99,807) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக தினகரனில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 3,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,99,807 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,813 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,65,071 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,778 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 07; தனியார் மருத்துவமனையில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,344 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,53,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 1,99,32,179 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 82,791 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது 21,958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 259 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.1,001 கோடி சொகுசு பங்களா வாங்கிய மும்பை தொழிலதிபர்

பட மூலாதாரம், Getty Images
டி மார்ட் எனப்படும் சங்கிலித் தொடர் நிறுவனங்களின் நிறுவனரான ராதாகிருஷ்ணன் தமானி மும்பையில் ரூ.1,001 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது. தனது சகோதரருடன் இணைந்து இந்த பங்களாவை அவர் வாங்கியுள்ளார்.
சமீப காலங்களில் வீடு சார்ந்த ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் மிகப் பெரிய தொகை இதுவாகும்.
தெற்கு மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள மதுகுஞ்ச் எனும் இடத்தில் 2 தளங்களைக் கொண்ட இந்த பங்களா 61,916 சதுர அடி கொண்டதாகும். இந்த பங்களாவின் சந்தை மதிப்பு ரூ.724 கோடியாகும். இந்த பங்களாவை வாங்க முத்திரைத் தாள் கட்டணமாக ரூ.30.03 கோடியை ஆர்கே தமானி செலுத்தியுள்ளார்.
தற்போது அல்டாமவுன்ட் சாலையில் உள்ள பிரித்வி அபார்ட்மென்ட் பகுதியில் தமானி மற்றும் அவரது சகோதரர் வசிக்கின்றனர். இதுவும் தெற்கு மும்பை பகுதியில் மிகவும் மதிப்பு மிகுந்த இடமாகும்.
இந்த பங்களாவை புராசந்த் ராய்சந்த் அண்ட் சன்ஸ் எல் எல் பி நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளனர். இதற்கான பத்திரப் பதிவு மார்ச் 31-ம் தேதி நடைபெற்றதாகச் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
106 நாட்டை சேர்ந்த 53.3 கோடி ஃபேஸ்புக் பயணர்களின் விவரங்கள் ஹேக்கிங் குழுவால் வெளியீடு

பட மூலாதாரம், Getty Images
ஒரு ஹேக்கிங் குழு, இணையத்தில் இலவசமாக 53.3 கோடி பேரின் தரவுகளை கசியவிட்டிருக்கிறது. இதில் 60 லட்சம் இந்திய ஃபேஸ்புக் பயனர்களும் அடக்கம். அமெரிக்கா 3.2 கோடி, பிரிட்டன் 11 கோடி என மூன்று நாடுகளைச் சேர்ந்த பல கோடி ஃபேஸ்புக் பயனர்களின் தரவுகள் இணையத்தில் கசிந்திருக்கின்றன. இந்த நாடுகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக கேட்ஜெட்ஸ் நவ் வலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இதில் ஃபேஸ்புக் பயணர்களின் மொபைல் எண், இருப்பிடம், பிறந்த தேதி, ஃபேஸ்புக் ஐடி மற்றும் அவர்களைக் குறித்த சொந்த விவரங்கள் என பல தரவுகள் கசிந்திருக்கின்றன.

பட மூலாதாரம், SATYABRATHA SAHOO
இந்த தரவு கசிவை ஹட்சன் ராக் என்கிற சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனத்தின் சி டி ஓ, அலோன் கல் கண்டுபிடித்தார். இப்போது வரை அது இணையத்தில் இலவசமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது
"இது கடந்த 2019-ம் ஆண்டு கசிந்த பழைய தரவுகள். நாங்கள் ஆகஸ்ட் 2019-லேயே பிரச்சனையைக் கண்டறிந்து சரி செய்துவிட்டோம்" என ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- வாக்காளர் அட்டை இல்லையா? ஓட்டு போட வேறு எந்த ஆவணத்தை பயன்படுத்தலாம்?
- சூயஸ் கப்பல் சம்பவத்தில் இலக்கு வைக்கப்பட்ட எகிப்திய பெண் கேப்டன்
- திமுகவுக்கு எதிரான விளம்பரங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றுமா? - என். ராம் பேட்டி
- 'வீட்டுக் காவலில்' ஜோர்டான் முன்னாள் பட்டத்து இளவரசர்: காணொளியால் அதிர்வலைகள்
- திமுக vs அதிமுக: சென்னை பகுதிகளில் செல்வாக்கு யாருக்கு? ஓர் அலசல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












