You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேற்கு வங்க தேர்தல்: வாக்குச்சாவடியில் முகாமிட்ட மமதா - பாஜகவினருடன் நேருக்கு நேர் வாக்குவாதம்
மேற்கு வங்கத்தில் இன்று 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த வேளையில், நந்திகிராம் தொகுதியில் களம் காணும் மமதா பானர்ஜி, அங்கு வந்த பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுடன் நேருக்கு நேராக மல்லுக்கு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல்கள் தீவிரமாகும் நிலை வந்தபோது மத்திய துணை ராணுவப்படையினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கட்டாயப்படுத்தப்பட்டனர்.
"நந்திகிராமின் நிலையைப் பார்த்து மட்டும் நான் கவலைப்படவில்லை. இந்த நாட்டின் ஜனநாயக நிலையைப் பார்த்து கவலைப்படுகிறேன். அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனாலும், திரிணாமூல் காங்கிரஸ் நந்திகிராமில் 90 சதவீத வாக்குகளைப் பெறும்," என்று கூறியிருக்கிறார் மமதா.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் நந்திராம் தொகுதி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம், அங்கு முதல்வர் மமதா பானர்ஜி களம் காணுகிறார். அந்த தொகுதியில் மமதா பானர்ஜியின் விசுவாசியாக முன்பு இருந்து பிறகு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த சுவெந்து அதிகாரி, மமதாவை எதிர்த்து களம் காண்கிறார்.
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சுவெந்து அதிகாரி இதே நந்திகிராம் தொகுதியில் இருந்தே எம்எல்ஏ ஆனார்.
இந்த நிலையில், தற்போதைய தேர்தலில் தமது சொந்த தொகுதியான பவானிபூரை விட்டுவிட்டு, சுவெந்து அதிகாரியை வீழத்தும் நோக்குடன் நந்திகிராமில் மமதா களம் காண்கிறார்.
இதே நந்திகிராம் தொகுதியில், விவசாயிகள் நில அபகரிப்பு தொடர்பாக மம்தா பானர்ஜி நடத்திய போராட்டங்கள் தான், அவரது மாநில அரசியல் வாழ்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது.
ஆக இந்த தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் தோற்பவரின் அரசியல் எதிர்காலத்தை அஸ்தமனமாவதற்ககே கூட அதிக வாய்ப்பு உண்டு என்று அம்மாநில அரசியலில் பேசப்படுகிறது. இத்தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி 30 சதவீதம் உள்ளது.
நந்திகிராமில் மொத்தம் 355 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவை அனைத்துமே பதற்றமான வாக்குச்சாவடிகள் என அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். மேலும், 22 கம்பெனி துணை ராணுவ படையினரையும் தேர்தல் ஆணையம் களமிறக்கி இருக்கிறது. மற்ற 10,619 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த 651 கம்பெனி மத்திய படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலில், நந்திகிராமில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் பாஜக தொண்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மமதா பானர்ஜி. அவர்கள் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயல்வதாக மமதா குற்றம்சாட்டினார். ஒரு கட்டத்தில் அவர் ஆளுநர் ஜக்தீப் தன்கரை தொலைபேசியில் அழைத்து, ஜனநாயக முறையில் நந்திகிராமில் தேர்தல் நடத்தும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்து விட்டது என்று குற்றம்சாட்டினார்.
அதோடு உள்ளூர் மக்களை பாஜகவினர் வாக்களிக்க விட மறுக்கிறார்கள் எனவும் ஆளுநரிடம் முறையிட்டார் மம்தா. இதுவரை தேர்தல் தொடர்பாக 63 புகார்களைக் கொடுத்துள்ளதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் மமதா பானர்ஜி கூறினார்.
திரிணாமூல் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டெரிக் ஓ பிரெய்ன், நந்திகிராமில் பாஜக பணியாளர்கள் 6, 7, 20, 49, 27, 162, 21, 26, 13, 262, 256, 163 ஆகிய வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றிவிட்டதாகவும், அவர்கள் (பாஜகவினர்) வாக்களிக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிப்பதாகவும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன், நாடாளுமன்றத்தில் மோதி அரசை கடுமையாக விமர்சித்து பலரின் கவனத்தை ஈர்த்த மஹுவா மொய்த்ரா, இன்று காலை இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியதிலிருந்து 150 இவிஎம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அப்பிரச்னை கூடுமானவரை தீர்க்கப்பட்டுவிட்டது என தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளதாக என்டிடிவியில் செய்தி வெளியாகியுள்ளது.
பாஜக சார்பில் இத்தேர்தலில் போட்டியிடும் தன்மொய் கோஷின் கார் கற்கலால் தாக்கப்பட்டது. திரிணாமூல் காங்கிரஸ் தான் இந்த தாக்குதலை நடத்தியது என பாஜக குற்றம்சாட்டியுள்ளது. அந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதியம் ஒரு மணி வரையில், மேற்கு வங்கத்தில் 58 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரதமரின் மமதா எதிர்ப்பு பரப்புரை
இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பாஜக பரப்புரை கூட்டம் செளத் 24 பராகனாஸில் உள்ள ஜாய் நகரில் நடந்தது. அதில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசினார். அப்போது மமதான பானர்ஜியின் நந்திகிராம் போட்டி தொடர்பாக பேசிய மோதி, நந்திகிராமில் தான் தோற்று விடுவோம் என்ற அச்சம் மமதா பானர்ஜிக்கு வந்து விட்டது என்று கூறினார்.
பவானிபூர் தொகுதியை விட்டு விட்டு நந்திராமில் போட்டியிட வந்த மமதா, அங்கு சென்ற பிறகுதான் தான் எடுத்த முடிவு தவறானது என்பதை உணர்ந்திருப்பார் என்று மோதி குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- "160-170 தொகுதிகளில் வெல்வோம்" - நம்பிக்கையுடன் களம் காணும் எம்.ஆர். விஜயபாஸ்கர்
- "திமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்" - விழுப்புரம் பரப்புரையில் அமித் ஷா
- சர்க்கஸ் நடத்துகிறாரா நிர்மலா? கடுமையாக சாடும் எதிர்கட்சிகள்
- தேர்தல் பிரசாரம் செய்ய ஆ. ராசாவுக்கு 48 மணி நேரம் தடை
- காவிரிப் படுகையின் சிக்கல்கள் சட்டமன்றத் தேர்தலில் என்ன தாக்கம் செலுத்தும்?
- புதுச்சேரியில் பா.ஜ.கவின் எஸ்எம்எஸ் பிரச்சாரம்: ஆதார் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: