You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"திமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்" - விழுப்புரம் பரப்புரையில் அமித் ஷா
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணிக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள தனியார் கல்லூரியில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பரப்புரை கூட்டத்தில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். திருக்கோவிலூர் விஷ்ணுவும் சிவனும் அமைந்த சிறப்பான இடம் என்று குறிப்பிட்டு தனது உரையை தொடங்கினார் அவர்.
"இந்த தேர்தலை பாரதிய ஜனதா கட்சி நடத்தவில்லை, தேர்தல் ஆணையம் நடத்துகிறது. ஏப்ரல் 6 என்பது பாஜக நிறுவப்பட்ட நாள், அந்நாளில் தேசிய ஜனநாயக கூட்டணியானது இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.
"காங்கிரஸ் திமுக இரண்டும் லஞ்சம், ஊழல், ரௌடியிசம், நில அபகரிப்பு, சொந்த குடும்பத்தின் வளர்ச்சி என இதை மட்டுமே இரண்டு கட்சிகளும் நம்பி அரசியல் செய்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சி நிர்வாகத்தை, பிரதமர் மோதி வழியிலும் எம்ஜிஆர் வழியிலும் கொண்டு சென்று கொண்டிருக்கிறது," என்றார் அமித்ஷா.
"சமீபத்தில் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா மறைந்த தமிழக முதல்வரின் தாயாரைப் பற்றி மிகத் தரக்குறைவாக பேசியுள்ளார். இவர்கள் எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். முன்னதாக ஜெயலலிதா குறித்து இது போன்ற தவறான கருத்துக்களை பேசினார்கள். மகளீர், தாய்மார்கள் பற்றி அவதூறு பரப்பிக் கொண்டிருக்கும் திமுக கூட்டணிக்கு இந்த தேர்தலில் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்," என்றார் அமித் ஷா.
ஊழல் பற்றி பேசும் ஸ்டாலின், தமது கட்சியில் இருப்பவர்கள், 2ஜி ஊழல் செய்த விவகாரத்தில் தனது முதுகை திரும்பிப் பார்க்க வேண்டும். திமுக அரசியல் கட்சியாக செயல்படவில்லை, அது ஒரு வியாபார நிறுவனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று அமித்ஷா குற்றச்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக மக்கள் மீதும், தமிழ் மொழி மீதும் அதிக பற்று இருக்கிறது. உலகில் எங்கு சென்றாலும் அவர் தமிழில் உள்ள குறள் ஒன்றை மேற்கோள் காட்டிப் பேசி வருகிறார். தமிழக மக்கள் மீது அக்கறை கொள்வதில் மோதியுடன் எவரையும் ஒப்பிட முடியாது.
இலங்கையில் தமிழக மக்களுக்காக வீடு கட்டிக் கொடுத்தது மட்டுமல்லாமல், அங்கே சென்று அவர்களுடன் உணவருந்தி இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் சேதம் அடைந்த பல கட்டடங்கள், கோயில்களை நாம் புனரமைத்துக் கொடுத்திருக்கிறோம்," என அமித் ஷா தெரிவித்தார்.
"தமிழகத்திற்கு மோதி வழிகாட்டுதலின்படி பல்வேறு திட்டங்களை முதல்வர் மற்றும் துணை முதல்வர் செயல்படுத்தி, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கின்றனர். ஊழல் கட்சிகளான திமுக, காங்கிரஸ் தமிழகத்திற்கு எதுவும் செய்துவிட முடியாது," எனக் கூறி அமித்ஷா உரையை நிறைவு செய்தார்.
முன்னதாக பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், 'எம்.ஜி.ஆர் சொல்லியது போல கருணாநிதி ஒரு தீய சக்தி, திமுக அழிக்கப்படவேண்டிய ஒரு சக்தி, இந்த தேர்தலோடு திமுக ஒழிய வேண்டும். இது தான் நம் லட்சியமாக இருக்க வேண்டும். இந்த தேர்தல் நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும், விவசாயிக்கும் கோடீஸ்வரருக்கும் இடையே நடக்கும் தேர்தலாகும்.
நல்லவர்களுக்காக வேலை செய்யும் எடப்பாடி வேண்டுமா? ஒரு குடும்பத்திற்காக வேலை செய்யும் திமுக ஸ்டாலின் வேண்டுமா? இது முடிவு செய்யக்கூடிய தேர்தலாக இருக்கும். இந்தத் தேர்தலுடன் கருணாநிதியின் குடும்பம் தலை எடுக்கக்கூடாது. எந்தவிதமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை மறந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்," என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- ஒரு துளி மனித ரத்தம் கலந்து தயாரிக்கப்பட்ட சாத்தான் ஷூ - ஒரு வணிகப் பரபரப்பு
- கோவைக்கு வந்த யோகி ஆதித்யநாத்: கடைகள் மீது கல்வீச்சு, என்ன நடந்தது?
- சர்க்கஸ் நடத்துகிறாரா நிர்மலா? கடுமையாக சாடும் எதிர்கட்சிகள்
- தேர்தல் பிரசாரம் செய்ய ஆ. ராசாவுக்கு 48 மணி நேரம் தடை -
- வட மாவட்டங்களை குழப்புகிறதா வன்னியர் இடஒதுக்கீடு? ராமதாஸை கொதிக்க வைத்த ஓ.பன்னீர்செல்வம்
- மருமகளின் சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் - காணொளியை நீக்கிய ஃபேஸ்புக்
- ரஜினிக்கு தாதா சாஹிப் பால்கே விருது: இந்திய அரசு அறிவிப்பு
- புதுச்சேரியில் பரிதவிக்கும் திருநங்கைகள்: கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள்
மூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: