You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேர்தல் பிரசாரம் செய்ய தி.மு.கவின் ஆ. ராசாவுக்கு தடை - நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் இருந்தும் நீக்கம்
தமிழக முதலமைச்சரின் தாயார் பற்றி தி.மு.கவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ. ராசா அவதூறாக பேசியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரித்த இந்திய தேர்தல் ஆணையம், அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட 48 மணி நேரத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசும்போது, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியையும் ஒப்பிடும்போது குறிப்பிட்ட உவமானத்துக்கு பயன்படுத்திய சொற்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.
"ஜனநாயகத்தை காப்பாற்ற சிறையில் இருந்தவர் ஸ்டாலின். மாவட்டப் பிரதிநிதி, பொதுக் குழு, செயற்குழு உறுப்பினர் எனப் படிப்படியாக உயர்ந்து தலைவரானவர். ஆட்சி நிர்வாகத்திலும் எம்.எல்.ஏ., மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என உயர்ந்தார். இப்போது முதல்வராகப் போகிறார். அவர் திணிக்கப்பட்டவர் அல்ல. முறைப்படி பெண் பார்த்து, நிச்சயம் செய்து, திருமணம் நடத்தி, சாந்தி முகூர்த்தம் நடத்தி, 300 நாட்கள் கழித்து சுகப்பிரசவத்தில் பிறந்தவர் ஸ்டாலின்.
ஆனால், ஜெயலலிதா இறக்கும்வரை இ.பி.எஸ்-ஐ யாருக்கும் தெரியாது. இவர் ஊர்ந்துபோய் முதல்வரானார். அதிகாரத்தில் இருப்பதால் அவருக்குப் புகழ். ஓராண்டாக கொடுத்த விளம்பரத்தால் பத்திரிகைகள் அவரை மிகப் பெரிய தலைவரைப் போல சித்தரிக்கின்றன. இ.பி.எஸ்ஸுக்கு என்ன தகுதி, தியாகம் இருக்கிறது. பொதுவாழ்வில் அவர் எட்டியிருக்கிற தொலைவு என்ன? ஒன்றும் கிடையாது. நல்ல உறவில் ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறைப் பிரசவம் இ.பி.எஸ். நல்ல குழந்தைக்குத் தாய்ப்பால் போதும். குறைப்பிரசவ குழந்தையைக் காப்பாற்ற டெல்லியிலிருந்து மோதி என்கிற டாக்டர் வருகிறார்" என்று பேசினார் ஆ. ராசா.
இதில், நடுவில் உள்ள சில பகுதிகள் நீக்கப்பட்டு, ஆ. ராசாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவத் துவங்கியது. அ.தி.மு.கவினரும் பா.ஜ.கவினரும் இதனைக் கடுமையாக கண்டிக்கத் துவங்கினர். ஏற்கெனவே, மு.க. ஸ்டாலினின் அந்தஸ்தையும் எடப்பாடி கே. பழனிசாமியின் அந்தஸ்தையும் ஒப்பிட்டு ஆ. ராசா பேசியிருந்த பேச்சும் கண்டனத்திற்குள்ளாகியிருந்தது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.கவின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஆ.ராசா விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு ஃபேக்ஸ் மூலமாக ஆ.ராசா தனது விளக்கத்தை அனுப்பினார்.
என்னுடைய பேச்சு தொடர்பாக சில விளக்கங்களை முன்வைக்கிறேன். முதல்வர் குறித்து நான் அவதூறாக பேசியதாக அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தவறான பிரசாரத்தை செய்து வருகின்றன. கடந்த 29ஆம் தேதி ஊட்டியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது முதல்வர் உணர்ச்சிவசப்பட்டதை பார்த்த பிறகு, நான் அவரிடம் மன்னிப்பை வேண்டினேன். அது எல்லா செய்தி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. அதில் முதல்வரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. இதற்காக என்னுடைய மன்னிப்பையும் தெரிவித்து விட்டேன்.
தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக நான் எதையும் பேசவில்லை. என் மீது அ.தி.மு.க தரப்பில் கொடுக்கப்பட்ட மார்ச் 27ஆம் தேதியிட்ட புகாரின் நகல் எனக்கு தரப்படவில்லை. அதனால் எனக்கு எதிராக என்ன குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்பதை என்னால் அறிய இயலவில்லை. எனவே, அந்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை என்னால் அளிக்க இயலவில்லை. அந்தப் புகார் மனு நகலை எனக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸின்படி, அவதூறாகப் பேசியதாக என் மீது சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் இந்திய தண்டனைச் சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழும், மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் ஒரு பிரிவின்படியும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிகிறேன். அதன் மீது முழுமையாகவும் பக்க சார்பற்ற விசாரணையும் நடத்தப்பட்டால் நான் இழிவாக பேசியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தவறானது என தெரிய வரும்.
மேலும், இந்த விவகாரத்தில் இப்போது தேர்தல் ஆணையம் எதை கண்டறிந்தாலும் யோசனை தெரிவித்தாலும் அது என் மீதான வழக்கின் விசாரணைக்கு புறம்பானதாக அமையும். எனவே, எனது மொத்த உரையின் நகலை பெற்று அது பரிசீலிக்கப்படும்பட்சத்தில் எனது மீதான குற்றச்சாட்டுகள் நான் பேசிய அர்த்தத்துக்கு மாறாக பொருள் கொள்ளப்பட்டுள்ளதும் அரசியல் ஆதாயத்துக்காக அது ஊதிப்பெரிதுபடுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரிய வரும் என நம்புகிறேன்.
தமிழில் சிமிலி அல்லது உவமானம் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான். அதன்படியே எனது பேச்சின்போது, முதல்வர் பழனிசாமியும் ஸ்டாலினும் உருவான அரசியல் பரிணாமம் பற்றிப்பேசும்போது, சாமானியர்கள் புரிந்து கொள்ளும் வகையில் புதிதாக பிறந்த குழந்தையுடன் ஒப்பிட்டு உவமானப்படுத்திப் பேசினேன்.
அதுவும், ஸ்டாலின் தலைவராவதற்கு எப்போதுமே உழைத்திருக்கவில்லை என முதல்வர் கூறியதற்கு பதில் தரும் வகையிலேயே அந்த உவமானத்தை முன்வைத்தேன். எனவே, ஆணையத்தின் குழு, என்னுடைய பேச்சின் முழு உரையையும் பரிசீலனை செய்யுமானால், அந்த நடவடிக்கை, எனக்கு ஏற்பட்ட அவமதிப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக சுமத்தப்பட்ட களங்கத்தை துடைக்கும் என நம்புகிறேன்' என ராசா குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அதன் உத்தரவை வெளியிட்டுள்ளது. அதில், ஆ. ராசா கொடுத்திருந்த விளக்கத்தைச் சுட்டிக்காட்டி, அவரது பதில் திருப்தியானதல்ல என தெரிவித்துள்ளது. மேலும், ஆ. ராசா தேர்தல் ஆணையத்திலிருந்து பல தகவல்களைக் கேட்டிருப்பதன் மூலம் காலம் கடத்தவே முயற்சிக்கிறார் என்றும் அதனை அனுமதிக்க முடியாது என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆகவே, இது தொடர்பாக பின்வரும் மூன்று உத்தரவுகளைத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது: 1. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக தேர்தல் ஆணையம் ஆ. ராசாவைக் கண்டிக்கிறது. 2. தி.மு.கவின் நட்சத்திர பிரசாரகர் பட்டியலில் இருந்து ஆ. ராசாவின் பெயர் நீக்கப்படுகிறது. 3. அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்கப்படுகிறது.
மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது கவனமாக இருக்கும்படியும் பெண்களின் கண்ணியம் குறித்து ஆபாசமாகவோ, அவதூறாகவோ பேச வேண்டாமென்றும் உத்தரவில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
- புதுச்சேரியில் பரிதவிக்கும் திருநங்கைகள்: கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள்
- கோவைக்கு வந்த யோகி ஆதித்யநாத்: கடைகள் மீது கல்வீச்சு, என்ன நடந்தது?
- வட மாவட்டங்களை குழப்புகிறதா வன்னியர் இடஒதுக்கீடு? ராமதாஸை கொதிக்க வைத்த ஓ.பன்னீர்செல்வம்
- எப்படி இருக்கிறது வட தமிழ்நாடு? தேர்தலைத் தீர்மானிக்கும் சிக்கல்களின் நிலவரம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: