நரேந்திர மோதியுடன் மோதும் ‘மண்ணின் மகள்’ மமதா - மேற்கு வங்க தேர்தலில் யாருக்கு வெற்றி?

    • எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி

ஒரு மதிய நேரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவிலிருந்து தெற்கே 160 கி.மீ தூரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 10 வருடமாக பணிபுரிய நீங்கள் அவருக்கு (மமதா பானர்ஜி) வாய்ப்பு கொடுத்தீர்கள். இப்போது எங்களுக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள் என்று பிரசாரத்தின்போது மக்களிடையே வாய்ப்பு கேட்டார் மோதி. மேற்கு வங்கத்தில் பிராந்திய கட்சியான அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா. அவரது தலைமையிலான கட்சிதான் ஓராண்டாக மேற்கு வங்கத்தை ஆண்டு கொண்டிருக்கிறது.

இயல்பான பேச்சாளரான மோதி, வங்க மொழியில் பேசியபோது, அவரது உரை கூட்டத்தில் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மமதா பானர்ஜிக்கு எதிராக வார்த்தைப்போரை தொடுத்தார் மோதி.

மமதா பானர்ஜியை அவரது ஆதரவாளர்கள் பெங்காலி மொழியில் "அக்கா" (மூத்த சகோதரி) என்று அழைக்கிறார்கள்.

பிரதமர் மோதியும் அவ்வாறே மமதாவை குறிப்பிட்டு, "மமதா தீதி... ஓ மமதா தீதி. நீங்கள் எங்களை வெளியாட்கள் என்கிறீர்கள், ஆனால், வங்காள நிலம் யாரையும் வெளியாட்களாகக் கருதுவது இல்லை. இங்கு யாரும் வெளியாட்கள் இல்லை," என்றார்.

66 வயதாகும் மமதா பானர்ஜி, உள்ளூர் அரசியல் மற்றும் கூட்டாட்சி என இரு விஷயங்களுக்கு தனது தேர்தல் பிரசாரத்தில் முன்னுரிமை கொடுத்தார்.

"இந்தியாவில் அந்நியர்கள் என முன்வைக்கப்படும் வாதம் கூட்டாட்சி அரசியலில்தான் நிலை கொண்டிருக்கிறது." என்கிறார் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான த்வாய்பயன் பட்டாச்சார்யா.

இதை கருத்தில் கொண்டே பாஜக "குறுகிய, வேற்றுமை மற்றும் பிரித்தாளும்" அரசியலை கொண்டு வர முயற்சிக்கிறது என்றும் மமதா குற்றம்சாட்டி வருகிறார்.

மேற்கு வங்காளத்தை பொறுத்த வரை, 4 வாரங்களில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டி சற்று வலுவாகவே இருக்கும். இந்திய மாநில தேர்தல்களில் ஒரு முக்கியமான தேர்தலாகவும் இது கருதப்படுகிறது.

ஒன்பது கோடியே இருபது லட்சம் மக்கள்தொகை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தை, மோதியின் கட்சி இதுவரை ஆட்சி செய்யவில்லை.

மாநிலத்தில் 34 ஆண்டுகள் ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சியை பின்னுக்குத் தள்ளி அந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய மமதா, அதில் இருந்து தொடர்ந்து அவரது கட்சியே ஆட்சியில் உள்ளது. தற்போது அவரது கட்சி 295 சட்டமன்ற உறுப்பினர்களில் 211 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, ஒரு வலுவான கொள்கை கொண்ட கட்சியாக அது இல்லை. பெரும்பாலான பிராந்திய கட்சியை கவரும் தலைவரை வழிபடும் கட்சியாகவே இருக்கிறது. அக்கட்சி தொண்டர்கள், மமதாவை "நெருப்பு கடவுள்" என்று அழைக்கின்றனர்.

2016ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக வெறும் 3 இடங்களை மட்டுமே வென்றது. ஆனால் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 42 இடங்களில் 18 இடங்களில் வென்றது பாஜக. மேலும் 40 சதவீத வாக்குகளையும் பெற்றது.

மமதாவின் கட்சி 22 இடங்களில் வென்றிருந்தது. இது 2014ஆம் ஆண்டு பெற்ற வெற்றியை காட்டிலும் 12 சீட்டுகள் குறைவு.

அது மமதாவிற்கு ஒரு எச்சரிக்கை அழைப்பாக இருந்தது. என்கிறார் அரசியல் பார்வையாளர் ரஜத் ராய். "2021 தேர்தல் மம்தாவின் இருப்புக்கான ஒரு தேர்தல்" என்கிறார் அவர்.

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றால் அது அக்கட்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும். இந்தியாவின் புகழ்பெற்ற தலைவராக மோதி இருந்தாலும், மாநில தேர்தலில் வெல்வதற்கு பாஜக தடுமாறுகிறது.

மூன்று வாக்காளர்களில் ஒருவர் இஸ்லாமியர்களாக இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில், பாஜக வெற்றி பெற்றால் அது ஒரு முக்கிய மாற்றமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் 2024ஆம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் பாஜக வலுவாக இருக்கும் என்பதை காட்டுவதாக அது இருக்கும்.

"இந்த தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கான ஒரு போர். பாஜக வெற்றி பெற்றால், இந்து பெரும்பான்மை அரசியல் தனது கடைசி கோட்டையில் நுழைந்து விட்டது என்று அர்த்தம்," என அரசியல் ஆய்வாளர் பிரஷாந்த் கிஷோர் கூறுகிறார். இவர்தான் மமதாவின் பிரசார ஆலோசகராகவுள்ளார்.

இதுவே மமதா வென்றால், அவர் தேசிய தலைவராக உருவெடுக்க வாய்ப்பாக அமையும். ஏனென்றால் அவர் வலிமைவாய்ந்த தேசிய கட்சிக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளார். அதேபோல பாஜகவிற்கு எதிரான அணிகளின் தலைவராகவும் உருவெடுக்கலாம்.

இதுவரை எதிர் தரப்பினர் யாராலும் மோதிக்கு எதிராக வெற்றி பெற முடியவில்லை. மமதா வென்றால், அதற்கு விடையாக அவர் இருப்பார். எனவே டெல்லியில் உள்ள `சென்டர் ஃபார் பாலிசி ரிசர்ச்சின்` ஆய்வாளராக இருக்கும் நீலஞ்சன் சிர்கார் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தை பொறுத்தவரை நீங்கள் எங்கு பயணம் செய்தாலும், நலத்திட்டங்களை பெற திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் மக்களிடம் லஞ்சம் கேட்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நலத்திட்டங்கள் மூலம் கிடைத்த பணத்தை வங்கியிலிருந்து எடுத்து வரும் சமயத்தில் வெளியே காத்திருந்து லஞ்சம் வாங்குகின்றனர் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் என சிலர் புகார் தெரிவிக்கின்றனர். `அரசு அரசியல்மயமாக்கப்பட்டதுதான்` மேற்கு வங்கத்தில் உள்ள பிரச்னை என ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அரசியல் எதிரிகளிக்கு இடையே நடைபெறும் சண்டைகள் குறித்தும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரின் இரக்கமற்ற தன்மை குறித்தும் பேசுகின்றனர்.

மாநிலத்தில் பாஜகவின் பொருளாதார பிரிவின் தலைவராக இருக்கும் தன்பத் ராம் அகர்வால், "எதிர்ப்பவர்கள் தாக்கப்படுகின்றனர் அரசியலை குற்றமயமாக்குவது, ஒரு நோய் போன்றது" என்கிறார்.

இருப்பினும் பலர் மமதா மீது வெறுப்பாக இல்லை. அவரை தனிப்பட்ட முறையில் ஊழல் செய்யாத மற்றும் பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய தலைவராக அவர் கருதப்படுகிறார். அவரின் பத்து ஆண்டு கால ஆட்சியில், மகிழ்ச்சியை அளிக்கும் ஆட்சியாக தோன்றிய உணர்வு, நின்று போயிருக்கலாம். ஆனால் மமதாவின் சுவாரஸ்யமான மக்கள் மதிப்பு அப்படியேதான் உள்ளது. அதேபோல அவருக்கு எதிரான மக்களின் கோபம் சத்தமற்றதாக ஆக்கப்பட்டுவிட்டது.

"மக்களுக்கு உள்ளூர் தலைவர்கள் மீது கோபம் உள்ளது" என்று ஒப்புக் கொள்ளும் பிரஷாந்த் கிஷோர், "மமதா தன்னை "சகோதரி" என ஆதரவாளர்களும் மக்களும் அழைக்கும் வழக்கத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறார்" என்றார்.

"அந்த இமேஜ் அரசுக்கு எதிரான மனப்பான்மையை வெல்லும். அவர் வெறுக்கப்படவில்லை. அவரின் கட்சி பாஜகவின் முயற்சிகளுக்கு பிறகும் கலைந்து விடவில்லை" என்கிறார் பிரசாந்த் கிஷோர்.

கடந்த 18 மாதங்களில் மமதா தான் தோல்வியடைந்த பகுதிகளில் மீண்டும் செல்வாக்கை பெற முயற்சித்து வருகிறார்.

அவரால் உருவாக்கப்பட்ட மக்கள் குறை தீர்ப்பு உதவி எண்ணுக்கு 70 லட்சம் பேர் அழைத்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து சுமார் கோடி பேர் "அரசாங்கம் உங்கள் வீட்டு வாசலில்" என்ற திட்டத்தை பெற்றுள்ளனர். சாதி தொடர்பான திட்டங்களில் சுமார் 10 ஆயிரம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ததாக அரசு தெரிவிக்கிறது. கிராமப்புற சாலைகள் வேகமாக சரிசெய்யப்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, சைக்கிள், மாணவிகள் கல்வியை தொடர பண வசதி, சுகாதார காப்பீடு, ஆகிய திட்டங்கள் மம்தாவின் ஜனரஞ்சகமான நடவடிக்கைகளில் மாற்றமில்லை என்பதற்கு சான்று. அவர் பெண் வாக்காளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். அவரின் வேட்பாளர்களில் 17 சதவீதம் பேர் பெண்கள்.

அதிக வளர்ச்சியை பெற பாஜக தனது எதிர்கட்சியினரின் ஆட்களை இழுத்தது. அறிவிக்கப்பட்ட 282 வேட்பாளர்களில் 45 பேர், பிற கட்சியை சேர்ந்தவர்கள். அதில் 34 பேர் மமதாவின் கட்சியை சேர்ந்தவர்கள். மமதாவின் கட்சியில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருந்தவர்கள் பலர்.

மறுபுறம் மமதாவை எதிர்க்கும் அளவிற்கு பாஜகவில் உள்ளூர் தலைமை இல்லை. மேலும் திரிணாமூல் காங்கிரஸை விமர்சிப்பதை தவிர கட்சிக்கு பெரிதாக எதையும் பேசவில்லை என்கின்றனர்.

"கோல்டன் பெங்கால்" என்ற அவர்களின் திட்டம் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மீது கோபமாக இருந்தவர்களின் வாக்கை பெறும். அதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் அடக்கம்.

மேலும் மேற்கு வங்கத்தில் செல்வாக்கை இழந்த கம்யூனிஸ்ட் கட்சி முஸ்லிம் க்ளெரிக் கட்சியுடனும், காங்கிரஸுடனும் கூட்டணி வைத்துள்ளது.

பெரும்பாலானோர் மேற்கு வங்கத்தில் ஒரு நெருக்கமான போட்டியாகவே இருக்கும் என கருதுகின்றனர்.

மமதாவை "வங்காளத்தின் மகள்" என்று வர்ணிக்கும் பதாகைகளை தாங்கி நிற்கிறது மேற்கு வங்கம்.

தான் வெளி நபர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் கூறுவது போன்ற பதாகை அது. அதன் அர்த்தம் "இந்த நெருக்கடியான போரில் உங்களின் ஆதரவு அவருக்கு தேவை," என்கிறார் பிரஷாந்த் கிஷோர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: