இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னை: “பயமே எங்கள் வாழ்க்கையாகிவிட்டது” – செத்து பிழைக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள் #TamilNaduOnWheels

    • எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
    • பதவி, பிபிசி தமிழ்

(தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வெவ்வேறு துறையை சேர்ந்த நான்கு பெண் பைக்கர்கள், பிபிசி தமிழ் குழுவினரோடு சுமார் 1,300 கி.மீ., பயணித்து சாமானியர்களின் வாழ்வாதார பிரச்னைகளை பேசி, அந்த கதைகளை கேட்டு காணொளி வாயிலாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த வரிசையில், இந்தப் பயணம் குறித்து பிபிசி தமிழ் வெளியிடும் தொடர் கட்டுரைகளின் 4வது மற்றும் இறுதிப் பகுதி இது.)

இடம் - ராமேஸ்வரம், தமிழ்நாடு

ஒவ்வொரு நாளும் நீங்கள் பணிக்கு செல்லும்போது, நாம் மீண்டும் உயிருடன் திரும்பி வருவோமா என்ற அச்சம் இருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

ராமேஸ்வர மீனவர்களின் அன்றாட நிலையே இதுதான்.

"வீட்டில் இருந்து கிளம்பும்போது ஒவ்வொரு முறையும், உயிருடன் திரும்பி வந்து விடுவோம், கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்புவேன். ஆனால், நான் வீடு திரும்பும் வரை அது நிச்சயம் இல்லை. வீட்டிலும் அவர்கள் பயந்து கொண்டேதான் இருப்பார்கள். இப்படித்தான் என் வாழ்க்கை நகர்கிறது. பயம் எங்களுக்கு பழகிப் போய்விட்டது" என்கிறார் ராமேஸ்வரத்தை சேர்ந்த சபரி.

மீன் பிடிக்கச் செல்வது அவர்கள் தொழில். அவர்களின் வாழ்வாதாரம். ஆனால், அதனை சுமூகமாக செய்ய முடியாத நிலை.

"உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தினம் தினம் செத்துப் பிழைப்பது எங்கள் வாழ்க்கையாகி விட்டது" என்கிறார் அங்குள்ள மீனவர் ஒருவர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு, மீனவர்களின் படகுகளை பிடித்து வைக்கும் இலங்கை அரசு என மீனவர்கள் பிரச்னை குறித்து நாம் பல ஆண்டுகளாக செய்திகளில் பார்த்து வருகிறோம்.

ஆனால், அவர்கள் படும் துன்பங்களை பொதுமக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்த பிபிசி தமிழ் குழு ராமேஸ்வரம் பயணித்தது. மீனவர்களுடன் படகில் பிபிசி குழுவும் கடலுக்குள் சென்றது.

"பயமே எங்கள் வாழ்க்கை"

"முன்பெல்லாம் காலை 6 மணிக்கு மீன் பிடிக்கச் சென்று, மறுநாள் காலை 6 மணிக்கே கரை திரும்புவோம். ஆனால் இப்போது மாலை 3 மணிக்கு சென்று விட்டு மறுநாள் காலை 5-6 மணிக்குள் திரும்புகிறோம். இலங்கை பிரச்னையால்தான் இந்த நிலை" என்கிறார் நாம் பயணம் செய்த படகை இயக்கிய சபரி.

காலை வேளையில் சென்றால் இலங்கை கடற்படை கண்ணில் மாட்டி விடுவோமோ என அச்சமாக இருக்கும். மாலையில் அந்தப்பக்கம் அவ்வளவாக ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதனால் 24 மணி நேர மீன்பிடிப்பை கைவிட்டு, விட்டு இவ்வாறு செய்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

"ஒரு வேளை இலங்கை கடற்படையிடம் மாட்டிக் கொண்டால், விரைவாக படகை திருப்பி இந்தியா பக்கம் வந்து விட வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அவர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சில நேரத்தில் சுட்டாலும் சுட்டு விடுவார்கள்" என்று சபரி கூறும் போது அந்த மக்களின் அச்சத்தை நம்மால் உணர முடிகிறது.

" நாங்கள் இந்திய கடல் பகுதியில் இருக்கும்போது இலங்கை கடற்படையினர் எங்களை பிடித்தால் கூட, நாங்கள் யாரும் எதுவும் பேசமுடியாது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் எல்லாம். கையில் துப்பாக்கி வைத்திருப்பார்கள். அடித்தாலும் மிதித்தாலும் வாங்கித்தான் ஆக வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

"குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிற வேறு வழியில்லை"

சபரியை தொடர்ந்து படகில் பயணம் செய்த சுரேஷ் என்ற மீனவரிடம் பேசினோம். இலங்கை கடற்படையிடம் தனது படகை பறிகொடுத்த அவர், தற்போது தன் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்பதாகக் கூறுகிறார்.

"கடந்த மே மாதம்தான் புதுசா படகு எடுத்தேன். 45 லட்சம் ரூபாய் ஆச்சு. அதில் 15 லட்ச ரூபாய், வெளியில்தான் வட்டிக்கு கடன் வாங்கினேன். டிசம்பர் மாதம் நான் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி என் படகை இலங்கை கடற்படை எடுத்துக் கொண்டது. இப்போது தொழில் செய்யப் படகும் இல்லை. கடன் கட்ட வழியும் இல்லை" என்று வேதனைப்படுகிறார் சுரேஷ்.

சுமார் 39 நாட்கள் இலங்கை கட்டுப்பாட்டில் இருந்த சுரேஷும் அவரது மகனும் இந்தாண்டு ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டனர்.

தங்களின் செல்ஃபோன், படகு, ஜிபிஎஸ் கருவியைக் கூட இலங்கை கடற்படையினர் திருப்பிக் கொடுக்கவில்லை என்று சுரேஷ் கூறினார்.

"மற்ற படகுகளில் மீன் பிடிக்க வேலைக்குச் சென்றாலும், கடனை அடைக்கும் அளவுக்கு காசு இல்லை. அது சாப்பாட்டிற்கே சரியாக இருக்கிறது. கடன்காரர்கள் வீட்டுக்கு வந்து கடனை திரும்பித் தரும்படி மோசமாக பேசுகிறார்கள். இதனாலேயே இரவு நேரத்தில் கூட நாங்கள் வீட்டில் தூங்குவதில்லை. என் படகை திரும்பப் பெற மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்கிறார் சுரேஷ்.

நிதிச்சுமை காரணமாக தனது மகனுடைய கல்லூரி படிப்புக்கு கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டதாகவும் கூறுகிறார் சுரேஷ்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்வது ஏன்?

பல ஆண்டுகளாக இந்த விவகாரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடலில் எல்லையை எப்படி வரையறுப்பது என்று ஒரு பக்கம் வாதம் நடந்தாலும் , சிலர் தெரிந்தே இலங்கை கடல் பக்கம் சென்று மீன் பிடிப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி ஜேசுராஜாவிடம் கேட்டோம்.

"ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்திலேயே இலங்கை கடல் பகுதி வந்துவிடும். மொத்தம் 12 நாட்டிக்கல் மைல் வரைதான் இந்திய எல்லை.

இந்திய பகுதியில் மீன் வளங்கள் மிகவும் குறைவு. கச்சத்தீவு மற்றும் இலங்கை பகுதியில்தான் அதிக மீன்கள் கிடைக்கும். இங்கு மீன் இல்லை என்றால் மீனவர்கள் என்ன செய்வார்கள்" என்று கேள்வி எழுப்புகிறார் ஜேசுராஜா.

ராமேஸ்வரத்தில் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளை வைத்துள்ள குடும்பங்களுக்கு இந்த மீன்பிடி தொழில் மட்டுமே வாழ்வாதாரம்.

"அப்படி இருக்கையில் இங்கிருந்து இருக்கும் மீன்பிடி எல்லை மிகவும் குறைவாக இருக்கிறது. எல்லை தாண்டுவதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது, சிறை வைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, துப்பாக்கியால் சுடுவது போன்ற பிரச்னைகளால், மீன்பிடி தொழிலையே இங்கு பலரும் விட்டு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என்று அவர் தெரிவிக்கிறார்.

இரு நாட்டு மீனவர்களும், அரசும் பேசி இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு கொண்டு வராத பட்சத்தில், இன்னும் சில ஆண்டுகள் போனால், மீனுக்கு பெயர் போன ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழிலே இருக்காது என்று ஜேசுராஜா கவலை தெரிவித்தார்.

டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மீனவர்கள்

இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் நாங்கள் கடலுக்கு செல்கிறோம். ஆனால், டீசல் விலை உயர்வு எங்கள் மேல் விழுந்த இன்னொரு பெரிய இடி என்கிறார் எடிசன்.

"நான் ராமேஸ்வரம் கடற்கரைக்கு வந்து 33 ஆண்டுகள் ஆகின்றன. நான் இங்கு வரும்போது, டீசல் விலை லிட்டர் 3 ரூபாய் 36 காசுக்கு விற்றது. அப்போது, ஒரு கிலோ இறாலுடைய விலை 700 - 800 ரூபாய். ஆனால், இப்போது டீசல் விலை லிட்டர் 87 ரூபாய்க்கு விற்கிறது. இன்று இறால் ஒரு கிலோ 350 ரூபாய். எங்களுக்கு எப்படி கட்டுப்படி ஆகும்? அதிக வருமானம் வேண்டும். அப்போது தான் கட்டுப்படி ஆகும். எனவேதான் நாங்கள் இலங்கை பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

உதாரணமாக இன்று இறால் விலை 1200-1300 ரூபாய்க்கு விற்குமானால் நாங்கள் இலங்கை பகுதிக்கு போக வேண்டிய சூழலே இருக்காது" என்கிறார் மீன் தொழில் செய்யும் எடிசன்

"எல்லை குறைவாக இருக்கிறது. இறந்தாலும் பரவாயில்லை, குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்" என்கிறார் எடிசன்.

நியாயமான விலை வேண்டும்

தக்காளிக்கு அரசு விலை நிர்ணயம் செய்கிறது. ஆனால் மீன்களுக்கு உரிய விலை இல்லை. அதனால்தான் அதிக மீன்கள் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லை தாண்டிப் போவதாக மீனவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

டீசல் விலையை குறைத்து, எங்கள் மீன்களுக்கு உரிய விலையை அரசு நிர்ணயித்தால், இந்த பிரச்னை சற்று குறையும் என்பது அவர்கள் கருத்து.

டீசல் உயர்வு, மீன்களுக்கு உரிய விலை இல்லை, மீன்பிடி படகில் பயன்படுத்தப்படும் கருவிகளுக்கு ஜி.எஸ்.டி வரி போன்ற சுமைகளால் தங்கள் வாழ்கை சுமை அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ராமேஸ்வரம் என்றால் ராமநாதசுவாமி கோயிலுக்கு அடுத்து மீன்பிடி தொழிலுக்கு பெயர் போன இடம். இந்த நிலை மாறி வரும் ஆண்டுகளில் மீன்பிடி தொழில் அழிந்து விடுமோ என்ற அச்சம் இங்குள்ள மீனவர்களின் நெஞ்சங்களில் மேலோங்கியிருக்கிறது.

(செய்தி சேகரிப்பு உதவி - பிரபுராவ் ஆனந்தன்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: