தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: விஜயகாந்தின் 20 நாள் லண்டன் பயண திட்டம் - எப்படி இருக்கிறார் கேப்டன்?

பட மூலாதாரம், DMDK Party
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தீவிர பிரசாரம் செய்து வருகிறார். உடல் நலிவுற்ற நிலையில் அவர் தேர்தல் களத்துக்கு வருவது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. என்ன நடக்கிறது தே.மு.தி.கவில்?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, அ.ம.மு.க கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவுவுதால், `வெற்றி பெற்றே தீர வேண்டும்' என்ற முனைப்பில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தத் தேர்தலில் அ.ம.மு.க கூட்டணியில் 60 தொகுதிகளில் தே.மு.தி.க போட்டியிடுகிறது.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் அவதிப்படுவதால் அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேநேரம், விஜயகாந்த் முதன்முதலாக போட்டியிட்டு வென்ற விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் அவரது மனைவியும் தே.மு.தி.க பொருளாளருமான பிரேமலதா போட்டியிடுகிறார்.
ரெக்கார்டிங் வாய்ஸ்
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 24 ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் பிரசாரத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து இரண்டு நாள்கள் சேத்துப்பட்டு, புளியந்தோப்பு, வில்லிவாக்கம், பல்லாவரம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய இடங்களிலும் வாக்கு சேகரித்தார்.
இதன் பின்னர் திருத்தணி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் வேனில் இருந்தவாறே கைகூப்பி மக்களிடம் வாக்கு சேகரித்தார் விஜயகாந்த். அவர் மக்களைச் சந்திக்கும் இடங்களில் எல்லாம், ஒருவர் அவரைக் கைத்தாங்கலாக பிடித்துக் கொள்கிறார். அதன் பின்னர், கைகூப்பியவாறே நிற்கிறார். இதற்கு முந்தைய தேர்தல்களில் விஜயகாந்த் பேசிய பேச்சுக்களை எல்லாம் ரெக்கார்டிங் வாய்ஸாக ஒலிபரப்புகின்றனர் தேமுதிகவினர்.

பட மூலாதாரம், Twitter
இந்தக் கட்சிகளைப் பார்க்கும் பலரும், ` அவரை ஏன் பிரேமலதா சிரமப்படுத்த வேண்டும்? வீட்டிலேயே ஓய்வெடுப்பதுதான் கேப்டனுக்கு நல்லது' எனக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து தே.மு.தி.க முன்னணி நிர்வாகிகளிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``கொரோனா தொற்று இரண்டாவது அலை வீசிக் கொண்டிருப்பதாகத் தகவல் வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் விஜயகாந்த் பாதிக்கப்பட்டார். அதில் இருந்து அவர் குணமாகி விட்டாலும், மிகுந்த கவனத்துடன் குடும்பத்தினர் அவரைக் கவனித்து வருகின்றனர். பிரசாரப் பயணத்துக்கு அவரை அழைத்துச் செல்வதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன" என்கின்றனர்.
பிரசாரத்துக்கு ஏன் வருகிறார் விஜயகாந்த்?
தொடர்ந்து நம்மிடம் பேசியவர்கள், `` பிரசாரப் பயணத்தின்போது கேப்டனின் மகன் சண்முக பாண்டியன், டிரைவர், உதவியாளர் என மூன்று பேர் மட்டுமே அவருடன் பயணிக்கின்றனர். மக்களையும் தொண்டர்களையும் பார்க்கும்போது அவருக்குள் ஒருவித புது உற்சாகம் வருவதைப் பார்க்க முடிகிறது. அதேபோல், பழையபடி அவர் முன்னேறி வருவதாக உணர்கிறோம். நேற்று முன்தினம் மதுரவாயல் செல்லும்போது, ஸ்பீடு பிரேக்கரில் பிரசார வாகனம் ஏறி இறங்கியது. இதனால் கோபப்பட்டு டிரைவரை நோக்கி விஜயகாந்த் கைகளை உயர்த்தினார். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை.
அதேபோல், எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பியை பார்த்ததும், அவரது முகத்தில் செல்லமாக குத்துவிடுவதைப் போல கையைக் கொண்டு சென்றார். ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்த காலகட்டத்தில் இருந்தே கேப்டனின் முக்கியமான விசுவாசிகளில் ஒருவராக நல்லதம்பி இருந்தார். அதன் காரணமாக சைக்கிள் கடை நடத்தி வந்த அவரை 2011 சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ ஆக்கினார். கேப்டனுக்கு அவரைப் பார்த்தவுடன் அடையாளம் தெரிந்துவிட்டது. அதனால்தான் அவ்வாறு செய்தார்.
அதேபோல், தனக்கு செக்யூரிட்டியாக வருகிறவர்களின் மாஸ்க்குகளை கழட்டுமாறு கூறினார். அதில் உள்ளவர்கள் ஏற்கெனவே அறிமுகமானவர்கள்தானா என்பதை அறிய இவ்வாறு செய்தார். இதுபோன்ற சம்பவங்களால் அவரது குடும்பத்தினரும் உற்சாகத்தில் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக மதுரையில் கேப்டன் பிரசாரம் செய்ய இருக்கிறார். சொந்த ஊர் சென்றால் அவர் இன்னும் உற்சாகம் அடைவார் என நினைக்கின்றனர்" என்கின்றனர்.
லண்டன் பயணம் எப்போது?

பட மூலாதாரம், Getty Images
``தற்போது கேப்டனுக்கு வழக்கமான சிகிச்சை தொடர்ந்தாலும், பேச்சுப் பயிற்சி அளிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்காக, வாரம் ஒருமுறை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக லண்டனைச் சேர்ந்த மருத்துவர் குழு ஒன்றும் பேச்சுப் பயிற்சி அளித்து வருகிறது. இருப்பினும், மேல் சிகிச்சைக்காக கேப்டனை லண்டனுக்கு அழைத்துச் செல்ல உள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு 20 நாள் பயணமாக லண்டன் செல்லவும் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்" என்கின்றனர் கூடுதல் விவரங்களுடன்.
`விஜயகாந்தின் தேர்தல் பிரசாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என மூத்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் மக்கள் நெருக்கடிகள் மிகுந்த தேர்தல் களத்தில் விஜயகாந்தை ஈடுபடுத்துவது எந்தவகையிலும் சரியானதல்ல. இரண்டாவது அலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் கொரோனா பரவுகிறது. தேர்தல் களம் என்பது பயிற்சி பட்டறை கிடையாது. உடல்நலக்குறைவால் கலைஞர் வீட்டில் இருந்தபோது வைரமுத்து உள்ளிட்டவர்கள் சென்று கவிதை வாசித்து அவரை உற்சாகப்படுத்தி வந்தார்கள். அப்படி ஏதாவது ஒரு முயற்சியை விஜயகாந்த் குடும்பத்தினர் செய்தார்களா? இவர்களது அரசியல் ஆதாயத்துக்காக விஜயகாந்தைப் பயன்படுத்துகிறார்கள்" என்கிறார் சாவித்ரி கண்ணன் கொதிப்புடன்.
தே.மு.தி.கவுக்கு பிளஸ்ஸா?
தொடர்ந்து பேசுகையில், ``இதனால் தேர்தல் களத்தில் தே.மு.தி.கவுக்கு மைனஸ்தான் ஏற்படும். பிரசார வாகனத்தில் அவர் நடுக்கத்தோடு நிற்பதும் அவரை ஒருவர் தாங்கிக் கொண்டு நிற்பதையும் பார்க்கும்போது அவர் சிரமப்படுத்தப்படுவதை நன்கு உணர முடிகிறது.
அவர் முகம் காட்டுவதால் பிளஸ் ஆக மாறிவிடாது. விஜயகாந்த் களத்துக்குக் கொண்டு வரப்படுவதை, அதீத வாக்குகளைப் பெற வேண்டும் என்ற அவரது குடும்பத்தினரின் ஆசையாகவே பார்க்கிறேன். இதன்மூலம், தங்களின் நன்மதிப்பை அவர்கள் கெடுத்துக் கொள்கின்றனர். விஜயகாந்த், சுயமாக ஒரு விஷயத்தை உள்வாங்குகிறாரா என்பதிலும் சந்தேகம் உள்ளது. அவரை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதே நல்லது" என்கிறார்.
மன தைரியம் அதிகம்
`பிரசாரத்தில் விஜயகாந்தை ஏன் சிரமப்படுத்த வேண்டும்?' என தே.மு.தி.க மாநில துணைச் செயலாளரும் விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருமான பார்த்தசாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``அப்படியெல்லாம் எதுவும் இல்லை. லண்டன் மருத்துவர்கள் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர். அது முடிந்தவுடன் மீண்டும் நல்லபடியாக செயல்படுவார். அவர் ஓய்வெடுக்க வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். அவருக்கு மன தைரியம் அதிகம். விரைவில் பழையபடி வருவார்" என்றதோடு முடித்துக் கொண்டார் பார்த்தசாரதி.
பிற செய்திகள்:
- 'ஐ.நாவில் தமிழில் பேசியது ஒரு மகிழ்ச்சியான தருணம்' - தாராபுரத்தில் நரேந்திர மோதி பிரசாரம்
- "ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது" - தனியார் நிறுவனத்தை எச்சரிக்கும் சீனா
- ஆறு நாள் போரால் 8 ஆண்டுகளாக மூடிக்கிடந்த சூயஸ் கால்வாய்
- தமிழ்நாட்டில் நரேந்திர மோதி: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே மேடையில் பிரசாரம்
- தென் தமிழ்நாடு அரசியல் எப்படி உள்ளது? தொழில் வளர்ச்சி சிக்கல் என்ன செய்யும்?
- #GoBackModi ஹேஷ்டேக் பிரசாரம் தமிழ்நாட்டில் ஏன், எப்படித் தொடங்கியது?
- நரேந்திர மோதி இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் பரப்புரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








