இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களின் ரஷ்ய பயிற்சி நிறைவு

பட மூலாதாரம், ISRO
இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உத்தேசித்துள்ள ககன்யான் திட்டத்தின்கீழ், விண்கலனில் பயணம் செய்ய தேர்வாகியிருக்கும் நான்கு இந்திய விமானப் படை அதிகாரிகள் தங்களின் விண்வெளி பயிற்சியை ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு அருகே உலுள்ள ஸ்வியோஸ்ட்னி கொரொடொக் நகரில் நிறைவு செய்திருக்கிறார்கள்.
விண்வெளி வீரர்களை தாழ் வட்டப்பாதையில் சுழலும் விண்கலன் மூலம் வின்வெளிக்கு அனுப்புவது தான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.
"இந்தியா சார்பாக ககன்யானில் பயணம் செய்யவிருக்கும் விண்வெளி வீரர்களைச் சந்தித்தோம். அவர்கள் ககாரின் காஸ்மொனாட் பயிற்சி மையத்தில் தங்களின் பயிற்சியை நிறைவு செய்துவிட்டார்கள். எதிர்காலத்தில் இரு தரப்பு விண்வெளித் திட்டங்களைக் குறித்து இந்திய தூதரிடம் விவாதித்தோம்" என ரஷ்ய விண்வெளி நிறுவன தலைவர் டிமிட்ரி ரொகொசின் கூறியதாக ஏ.என்.ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து, இந்தியாவின் இஸ்ரோ அமைப்பும், ரஷ்யாவின் க்ளாவ்கோஸ்மாஸ் (Glavkosmos) என்கிற அமைப்பும் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்திய விமானப் படையின் ஒரு குரூப் கேப்டன் மற்றும் மூன்று விங் கமாண்டர்களைக் கொண்ட நான்கு பேர் இதற்காக தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்கள்.

பட மூலாதாரம், ISRO
இவர்களுக்கான பயிற்சி கடந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய நிலையில், கொரோனா பெருந்தொற்று தாக்கம் காரணமாக, அவர்களின் பயிற்சி தற்காலிகமாக தடைபட்டது.
ரஷ்யாவில் தங்களின் பயிற்சியை நிறைவு செய்த பின், இந்த அதிகாரிகளுக்கு இந்தியாவில் பிரத்யேக விண்கலன் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் முன்பே கூறி இருந்தனர்
பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கு 10,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.
இந்த மாத தொடக்கத்தில் இந்திய அணு சக்தி மற்றும் விண்வெளித் துறையின் அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோவின் ககன்யான் திட்டம், எதிர்காலத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பாதையில் சரியாக செல்கிறது என கூறினார்.

பட மூலாதாரம், NASA
இந்திய விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் இத்திட்டத்தின் நோக்கம் என அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறினார்.
"இஸ்ரோ அமைப்புக்கு விண்கலனை ஏவுவது, விண்கலத்தை நிர்வகிப்பது, பூமியில் இருக்கும் அடிப்படைக் கட்டமைப்பு போன்ற தொழில்நுட்ப விவகாரங்களில் பழுத்த அனுபவம் இருக்கிறது. விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தற்போதிருக்கும் விண்வளி முறைகளை மனிதர்கள் மதிப்பிடவும் நடவடிக்கை எடுத்திருக்கிறது இஸ்ரோ. பல இந்திய விஞ்ஞானிகள், பல சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் மிகவும் முக்கிய பணிகளை மேற்கொண்டு வருவது இந்தியாவுக்கு பெருமையான ஒன்று" எனவும் அதில் அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- சீமான் வளர்ந்தது எப்படி? திராவிட இயக்கப் பாசம் முதல் தமிழ் தேசியம் வரை
- பெட்ரோல், டீசல் மூலம் இந்திய அரசுக்கு கிடைக்கும் வரி 300 சதவீதம் அதிகரிப்பு
- "மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ உடனடி அமல்" - அமித் ஷாவின் அதிரடி வாக்குறுதி
- "1996" தேர்தல்: 4ஆவது முறையாக முதல்வரான கருணாநிதி - சுவாரஸ்ய வரலாறு
- இந்தியா-பாகிஸ்தான் சமரசத்துக்கு செளதி அதிக அக்கறை காட்டுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












