கடலூர் அதிமுக அலுவலகம் சூறை, பிரசார வாகனத்தை சேதப்படுத்திய தொண்டர்கள் - என்ன நடந்தது?

- எழுதியவர், நட்ராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக தலைமை அதன் வேட்பாளர்களைக் கடந்த 10ஆம் தேதி அறிவித்தது. இதில் கடலூர் மாவட்டத்தில் அதிமுக சார்பாக போட்டியிடும் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் ஆகிய ஆறு தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய மூன்று பேர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர், மற்றும் கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.பழனிசாமி என்பவருக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து, வேட்பாளர் அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்து குறிஞ்சிப்பாடி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பழனிசாமி தேர்தல் பணிகளைச் செய்து வந்தார். இதற்கிடையே, இன்று வேட்புமனு தாக்கல் செய்ய பழனிசாமி தயாராக இருந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளரை அதிமுக தலைமை மாற்றயதாக புதிய அறிவிப்பு வெளிவந்தது. அதில், பழனிசாமிக்குப் பதிலாக கடலூர் மாவட்ட மகளிரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வி ராமஜெயம் என்பவரை குறிஞ்சிப்பாடி மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் 2011ஆம் ஆண்டு புவனகிரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
இதற்கிடையே, வேட்பாளர் மாற்றத்தால் ஆத்திரம் அடைந்த பழனிசாமியின் ஆதரவாளர்கள், கடலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். மேலும், அலுவலகத்தில் இருந்த மேசை, நாற்காலி, கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பிரசார வாகனத்தை அடித்து உடைத்தனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அங்கு மோதல் தீவிரமாகாமல் நிலைமையை கட்டுப்படுத்தி, அதிமுக அலுவலகத்தை மூட நடவடிக்கை மேற்கொண்டனர்.
"குறிஞ்சிப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை அப்பகுதி வேட்பாளராக திமுக மீண்டும் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த தொகுதியில் மிகவும் பிரபலமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு இணையாகப் போட்டி வேட்பாளராக பழனிசாமி இருக்க மாட்டார் என்பதால் அதிமுக தலைமை வேறு வேட்பாளரை அறிவித்திருக்கலாம். மேலும், உள்ளாட்சித் தேர்தலின் போது குறிஞ்சிப்பாடி பகுதி உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சரும், கடலூர் மாவட்ட மகளிரணி செயலாளருமான செல்வி ராமஜெயம் அறிமுகமான நபர் என்பதால் இவரைத் தேர்வு செய்திருக்கலாம்," என அரசியல் விமர்ச்சர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளராக இருந்த இராம.பழனிசாமியிடம் கட்சித் தலைமையின் மாற்றங்கள் குறித்து பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டபோது, எதைப் பற்றியும் பேச முடியாத அளவுக்கு மிகுந்த மன வேதனையில் இருப்பதாக தெரிவித்தார்.

பட மூலாதாரம், PALANISAMY
"கடந்த 1991ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவில் கிளைசெயலாளர், இளைஞரணி இணை செயலாளர், ஒன்றிய செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளில் கடந்த 30 ஆண்டுகளாக இருந்துள்ளேன். என்னை வேட்பாளராக அறிவித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது, எனது சொந்த தொகுதி மக்களுக்கு என்னாலான உதவியைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், தேர்தல் பிரசார பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன். வாக்கு சேகரிக்கும்போது தொகுதி மக்களும் எனக்காக ஆதரவை அதிக அளவில் வெளிப்படுத்தினர். மேலும், தேர்தல் பணிகளான சுவர் விளம்பரம் செய்வது, கூட்டணி காட்சிகளைச் சந்திப்பது என அனைத்திலும் ஈடுபட்டு வந்தேன்," என்றார் அவர்.
இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதால், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) தொகுதி மக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதால் அனைவரும் ஒத்துழைக்கும் படி கேட்டுகொண்டித்தேன். அப்போது தான் என்னை மாற்றி வேறு ஒருவரை இந்த தொகுதிக்கு நியமித்து இருப்பதாகச் செய்தி ஊடகம் மூலமாகத் தெரியவந்ததாக பழனிசாமி கூறுகிறார்.

பட மூலாதாரம், SELVI RAMAJAYAM
"பின்னர் இது குறித்து என்னிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், என் மீது வழக்கு ஒன்று இருப்பதால் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கூறியதாக தெரிவித்தார். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, எனது ஒன்றியத்திற்கு உட்பட திருமாணிகுழி ஊராட்சி வார்டில் விசிகவின் சின்னம் மாற்றியது தொடர்பாக அதிகாரியிடம் கேள்வி எழுப்பினேன். அப்போது என்னுடன் இருந்த கவுன்சிலருக்கு போட்டியிட வேட்பாளர்கள் இருவரும் தேர்தல் அதிகாரியிடம் பிரச்னையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை காரணமாகக் கூறி என்னை மாற்றியுள்ளதாக கூறுகின்றனர்.
நான் கொலைக் குற்றத்தில் ஈடுபடவில்லை, அரசியல் சமந்தமான வழக்கு மட்டுமே உள்ளது. கட்சிக்காக பேசச் சென்றபோது ஏற்பட்ட பிரச்னையைக் காரணம் காட்டி எதற்காக என்னை நீக்க வேண்டும்? வேறு எந்த வழக்கும் என் மீது இல்லை," என பழனிசாமி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த காரணத்தை வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முன்பே என்னிடம் கூறி இருந்திருக்கலாம். மேலும், தொகுதி உறுதியான பிறகு தேர்தல் வேலைகளைக் கவனித்துக் கொள்ளலாம் என்று முன்பே கூறியிருந்தால், நான் தேர்தல் பணியில் ஈடுபடாமல் இருந்திருப்பேன். ஆனால், தொகுதி மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எனது தொகுதியில் 98 சதவீதம் வெற்றிக்கு வாய்ப்பு ஏற்படுத்திய நிலையில், இது போன்று அறிவிப்பு வந்திருப்பது வேதனையாக இருக்கிறது," என்கிறார் பழனிசாமி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












