வி.கே. சசிகலா அரசியலில் இருந்து விலகல்: என்ன நடந்தது, எதிர்கால திட்டம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளப்போவதாக புதன்கிழமையன்று அறிவித்திருக்கிறார். இதன் பின்னணியில் என்ன நடந்தது, சசிகலாவின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்த ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதியன்று விடுதலை செய்யப்பட்டார். அந்தத் தருணத்தில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு, பிப்ரவரி 8ஆம் தேதியன்று சென்னை திரும்பினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டாகப் பிளவுபட்டிருந்த நிலையில், சசிகலாவின் வரவுக்குப் பிறகு இணைப்பு நடக்கலாம் என பேசப்பட்டது. இந்த இணைப்பு குறித்து பா.ஜ.க. வலியுறுத்துவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், தில்லியில் பிரதமரைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சரும் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி சசிகலாவையோ, அ.ம.மு.கவையோ சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்துவிட்டார்.
ஆனால், சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோது, முதல்வரையும் துணை முதல்வரையும் தனியாகச் சந்தித்தார். அப்போது தினகரனையோ, அ.ம.மு.கவையோ அ.தி.மு.கவுடன் இணைக்க விருப்பம் இல்லாவிட்டாலும், கூட்டணியிலாவது இணைத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியதாகச் சொல்லப்பட்டது. இந்தப் பேச்சில் சசிகலா குறித்து ஏதும் சொல்லப்படவில்லை.
இதற்குப் பிறகு புதன்கிழமையன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் , சசிகலாவையோ தினகரனையோ சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லையென தெரிவித்தார். இந்த நிலையில்தான் அன்று இரவிலேயே அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"பா.ஜ.கவைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே சசிகலாவை தனியாகவும் தினகரனைத் தனியாகவும்தான் பார்த்தார்கள். சசிகலா அரசியலில் ஈடுபடுவதையோ, மீண்டும் அ.தி.மு.கவிற்குள் வருவதையோ பா.ஜ.க. விரும்பவில்லை. சிறை தண்டனை பெற்ற ஒருவர் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதை பொதுமக்கள் பெரிதாக விரும்பமாட்டார்கள் என சொல்லிவந்தார்கள். இது சசிகலா, தினகரன் ஆகிய இருதரப்புக்குமே பல்வேறு வழிகளில் தெரிவிக்கப்பட்டது. அதன் உச்சகட்டமாகத்தான் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பான அறிக்கை வெளியாகியிருக்கிறது" என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத அ.ம.மு.கவுக்கு நெருக்கமான ஒருவர்.
ஆனால், புதன்கிழமையன்று இப்படி அறிக்கை வடிவில் அவர் தனது முடிவை தெரிவிப்பார் என்பதை தினகரன் தரப்பு எதிர்பார்க்கவில்லையென்பது உண்மை. இப்படி ஒரு அறிக்கையை அவர் எழுதி,வெளியிடப்போகிறார் என்று தெரிந்ததுமே அவரை வந்து சந்தித்த தினகரன் சற்றுப் பொறுத்திருக்கும்படி கேட்டும், சசிகாலா அதனை ஏற்கவில்லை. அறிக்கையை வெளியிட்டுவிட்டார்.
சசிகலாவின் அறிக்கை வெளியான உடனேயே பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் எல். முருகன் அதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டதையும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். "தினகரனை பா.ஜ.க. தனியாகப் பார்ப்பதற்குக் காரணமே, அவர் துவக்கத்திலிருந்தே தன் சொந்தங்களை அரசியலில் இருந்து ஒதுக்கிவைத்ததுதான்" என்கிறார்கள் அவர்கள்.
இதற்கிடையில், அ.தி.மு.கவின் பொதுக் குழு தொடர்பாக சசிகலாவும் தினகரனும் தொடர்ந்த வழக்கு ஒன்றும் நிலுவையில் இருக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா காலமான பிறகு, அக்கட்சியின் புதிய பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா தேர்வுசெய்யப்பட்டார். அவர், பின்னர் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரனை நியமித்தார்.
அதன் பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட, அவர் சிறையில் இருந்த சமயத்தில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி சென்னையில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஒருங்கிணைப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. அந்தப் பொதுக்குழுவில் வி.கே. சசிகலா, தினகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இந்தப் பொதுக் குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலாவும் டி.டி.வி. தினகரனும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை நகர சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், விசாரணைக்கு வராமல் இருந்தது. சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய பின்னர் இந்த வழக்கை உடனே விசாரிக்கவேண்டும் என சசிகலா தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு மார்ச் 15ஆம் தேதி விசாரணைக்கு வருமென அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் அரசியலைவிட்டே ஒதுங்குவதாக சசிகலா அறிவித்திருக்கிறார். இந்நிலையில், இந்த வழக்கின் கதி என்னவாகும் என்பதும் தெரியவில்லை. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் தேதி நெருங்கும்போது இது தொடர்பாக சசிகலா ஏதாவது அறிவுறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அரசியலைவிட்டு ஒதுங்கப்போவதாக தெரிவித்திருப்பதால், இந்த வழக்கையும் அவர் தொடர்ந்து நடத்த விரும்ப மாட்டார் என்றே கருதப்படுகிறது.
"சசிகலாவைப் பொறுத்தவரை அவர் முழுமையாக ஒதுங்கவில்லையென்றே நினைக்கிறேன். அவர் துவக்கத்திலிருந்தே எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள் என்று சொல்லிவருகிறார். எந்த இடத்திலும் தினகரன் பெயரையோ, அ.ம.மு.க. பெயரையோ சொல்லவில்லை. அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என்ற நிலையிலிருந்து எல்லோரும் ஒன்றாக இருங்கள் என்று பேசுவதைப் போலத்தான் பேசிவருகிறார்.
அவரைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிவரும்வரை பொறுத்திருப்பார். அ.தி.மு.க. தோல்வியடையும்பட்சத்தில், தொண்டர்களின் கோபம் எடப்பாடியை நோக்கிப் பாயலாம். சசிகலா ஒற்றுமையாக இருக்கச் சொல்லி வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை என்ற பேச்சு எழலாம். அப்போது அவர் களமிறங்கக்கூடும். மாறாக, அ.தி.மு.க. வெற்றிபெற்றுவிட்டால் அவர் இப்போது அறிவித்திருக்கும் ஒதுங்கலே நிரந்தரமாகிவிடும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், சசிகலாவின் சகோதரரான திவாகரன், தினகரனைக் கடுமையாகத் தாக்கி தொலைக்காட்சி ஊடகங்களிடம் பேசிவருகிறார். சசிகலாவின் இன்றைய நிலைக்கு தினகரனே காரணம் என்றும் சசிகலாவை வெளியேற்றி அந்த இடத்துக்குத் தான் வந்துவிட வேண்டும் என்று அவர் நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்ததாகவும் திவாகரன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, தினகரனுக்கும் திவாகரனுக்கும் முட்டிக்கொண்டதையடுத்து அம்மா அணி என்ற பெயரில் சசிகலாவின் படத்தை வைத்து அலுவலகம் ஒன்றைத் திறந்தார் திவாகரன். இதைக் கேள்விப்பட்ட சசிகலா, தன் படத்தையும் பெயரையும் பயன்படுத்தக்கூடாது என வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இதற்குப் பிறகு அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார் திவாகரன். ஆனால், அதற்குப் பிறகு அந்தக் கட்சியை தொடர்ந்து நடத்துவதில் அவர் தீவிரமாக இல்லை. இந்த நிலையில்தான் தினகரனைக் கடுமையாகத் தாக்கி பேசிவருகிறார் திவாகரன்.
ஆனால், இனி தினகரனின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை பா.ஜ.கவையே அ.ம.மு.க. பெரிதும் நம்பியிருக்க வேண்டும். அப்படியே அ.தி.மு.க. - அ.ம.மு.க. இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டால்கூட அந்தக் கூட்டணியில் இருந்தபடி தினகரன் போட்டியிட மாட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
மிக விரைவிலேயே பா.ஜ.கவின் மேல் மட்டத்திலிருந்தே தினகரனை கூட்டணியில் இணைக்க வேண்டுமென வெளிப்படையான அழைப்பு வரலாம் என்ற நம்பிக்கையும் தினகரன் தரப்பிடம் காணப்படுகிறது.
பிற செய்திகள்:
- தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன? எவ்வளவு விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது?
- எரிந்து கொண்டிருந்த கப்பலில் தனித்துவிடப்பட்ட பூனைகளை காப்பாற்றிய கடற்படையினர்
- நிலவுக்கு செல்ல விருப்பமா? - இலவச பயணம், 2 கட்டுப்பாடுகள்
- சசிகலா, அ.ம.மு.கவுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்க 100 % வாய்ப்பில்லை: ஜெயக்குமார்
- முஸ்லிம்கள் உடலை புதைக்க இரணை தீவு - இலங்கையில் தீராத சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












