கொசு வடிவில் புதிய பூச்சியினம் - அளவு 2 மி.மீ, அரிய தகவல்கள்

பூச்சி இனம்

பட மூலாதாரம், CUBE

கோவை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிங்காநல்லூர் குளக்கரையில் கொசு வடிவிலான புதிய வகை பூச்சியினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'க்யூப்' என்ற சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பூச்சிகள், புதிய வகை மரபணு கோட்பாடுகளை கொண்டிருப்பது உறுதி செய்ப்பட்டுள்ளது.

சிங்காநல்லூர் பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், 'அஸ்பாண்டிலியா சிங்கநல்லூரென்சிஸ்' என இதற்கு பெயரிட்டுள்ளனர்.

இந்த புதிய வகை பூச்சியினம் குறித்து பிபிசியிடம் பேசிய பூனேவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு(மேற்கு மண்டலம்) மையத்தின் ஆராய்ச்சியாளர் துரை வசந்தகுமார், இவை மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவை என்கிறார்.

"கோவையில் கண்டுபிடிக்கப்படுள்ள இந்த புதிய வகை பூச்சியினங்கள் கொசு, ஈ, தேனீக்கள் போன்று இரு சிறகிப் பூச்சி (Diptera) வகையை சேர்ந்தவை என்பது புறத்தோற்ற ஆய்வில் தெரியவந்தது. இந்தியாவில் மொத்தம் 396 இருசிறகிப் பூச்சியினங்கள் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. உலக அளவில் மொத்தம் 6300 இருசிறகிப் பூச்சியினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மரபணு கூறுகளோடு, 'அஸ்பாண்டிலியா சிங்கநல்லூரென்சிஸ்' என்ற மரபணுவை ஒப்பிடுகையில், இவை புதிய வகை பூச்சியினம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என கூறுகிறார் இவர்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

"சிங்காநல்லூர் குளக்கரையில் அமைந்துள்ள இலந்தை மரத்தின் இலைகளில், 2016ஆம் ஆண்டில்தான் முதல்முறையாக இந்த வகை பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கொசுவைப் போன்ற வடிவில் இருக்கும் இவை, அளவில் கொசுவை விட சிறியதாகவே இருக்கின்றன. அதாவது, சுமார் 2 மி.மீ முதல் 3 மி.மீ வரை மட்டுமே இதனுடைய வளர்ச்சி இருக்கிறது."

"மேலும், கொசுக்களைப் போன்று தண்ணீரில் முட்டையிட்டு, வெளியே பறந்து செல்லாமல், இவை இலையிலேயே முட்டையிடுகின்றன. முதிர் பருவத்தை அடைந்ததும் இவை இலந்தை இலைகளையே உணவாக உட்கொண்டு, மரத்தை சுற்றியே வாழ்கின்றன. ஆனால், இந்தியாவின் இலந்தை மரங்கள் அதிகமாக இருக்கும் மற்ற பகுதிகளில் இந்த வகை இன்னும் கண்டறியப்படவில்லை. அதனால் தான் இவற்றை புதிய பூச்சியினம் என குறிப்பிடுகிறோம். இதனை, Zootaxa என்ற சர்வதேச அறிவியல் பத்திரிக்கையும் ஆய்வு செய்து, உறுதிப்படுத்தியுள்ளது." என தெரிவிக்கிறார் ஆராய்ச்சியாளர் துரை வசந்தகுமார்.

'அஸ்பாண்டிலியா சிங்கநல்லூரென்சிஸ்' எனப்படும் இந்த பூச்சிகள் பறக்கும் தன்மையில் மற்ற பூச்சிகளைப் போல் இல்லாமல் மிகவும் மெதுவாக பறப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பூச்சியினம்

பட மூலாதாரம், CUBE

இப்பூச்சிகள் குறித்த மரபணு சோதனைகளை மேற்கொண்ட எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மரபணு பொறியியல் துறை, இணைப் பேராசிரியர் செந்தில்குமார் பழனிச்சாமி, மற்ற பூச்சியினங்களின் மரபணுக்களை இவற்றோடு ஒப்பிடுகையில் 16 சதவிதம் மாறுபாடுகள் இருப்பதாக தெரிவிக்கிறார்.

"மரபணு பார்கோடிங் தொழிநுட்பத்தின் மூலம் இப்பூச்சியின் மரபணுக்கள் பிரிக்கப்பட்டு, அதன் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை பயோடெக்னாலாஜி தகவலுக்கான தேசிய மையத்தின் (NCBI) இணையதளத்தில் உள்ள சர்வதேச அளவிலான தகவல்களோடு ஆய்வு செய்ததில், மற்றொரு பூச்சியின வகையோடு 84 சதவிதம் மட்டுமே ஒற்றுப்போகிறது. இந்த தகவல்களோடு 2 சதவிதம் வேறுபாட்டாலே அவற்றை புதிய இனவகை என குறிப்பிடுகின்றனர். அந்த அடிப்படையில், கோவையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 'அஸ்பாண்டிலியா சிங்கநல்லூரென்சிஸ்'ன் மரபணுக்களில் 16 சதவிதத்திற்கு மாறுபாடுகள் இருப்பதால், இவற்றை நிச்சயமாக புதிய இனவகை என கூறலாம். இதைத்தான் சர்வதேச ஆராய்ச்சியாளர்களும் உறுதி செய்துள்ளனர்" என்கிறார் இவர்.

நகர்ப்புற பகுதியில் உள்ள நீர் நிலையின் அருகே புதிய வகை பூச்சியினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது சூழலியலாளர்கள் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. மேலும், நகர்ப்புறங்களில் உள்ள சதுப்பு நிலங்களின் முக்கியத்துவை இது உணர்த்துவதாக கூறுகிறார் 'க்யூப்' சுற்றுசூழல் அமைப்பின் செயலாளர் வின்னி ஆர்.பீட்டர்.

"நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக சிங்காநல்லூர் குளத்தின் பல்லுயிர்கள் குறித்த ஆய்வுகளை செய்து வந்தோம். 2015ம் ஆண்டில் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து 'க்யூப்' எனும் அமைப்பை உருவாக்கி சிங்காநல்லூர் குளத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துவங்கினோம். முதல்முறையாக இந்த குளத்தை தூர்வாரும்போது சுமார் ஐநூறு லாரிகள் அளவிற்கு குப்பையை வெளியே எடுத்தோம். ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை அப்புறப்படுத்தி, மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியோடு குளத்தை சுற்றியும் பாதுகாப்புகளை உருவாக்கினோம்"

பூச்சியினம்

பட மூலாதாரம், CUBE

"மியாவாக்கி மற்றும் தனியாக மரம் நடும் முறைகளில் இதுவரை சுமார் 15 ஆயிரம் நாட்டுவகை மரங்களை நட்டு வளர்த்து வருகிறோம். நகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த நீர் நிலையின் பல்லுயிர் பெருக்கத்தை தக்கவைக்க இந்த மரங்களும், தாவரங்களும் உதவின. இதனால், 2017ஆம் ஆண்டு, கோவை மாநகராட்சியால் நகர்ப்புற பாதுகாப்பு மண்டலமாக இது அறிவிக்கப்பட்டது"

"சிங்காநல்லூர் குளம் 'உயிர் பன்மைச் சூழல்' கொண்ட பகுதியாக விளங்கவேண்டும் என்பது தான் எங்களின் கனவு. அதனை நினைவாக்கும் விதமாக புதிய வகை பூச்சியினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'அஸ்பாண்டிலியா சிங்கநல்லூரென்சிஸ்' என்ற பெயர் கிடைத்திருப்பது கோவையின் மற்றொரு சிறப்பாகவே நாங்கள் கருதுகிறோம். உயிர் பன்மைச் சூழலின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்து செல்லும்விதமாக அரசு பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 'இயற்கை கல்வி திட்டம்' என்ற பெயரில் பல்வேறு உயிரினங்கள் குறித்து கற்பித்து வருகிறோம். அதாவது, பட்டாம்பூச்சியின் வளர்ச்சி பருவங்களை புத்தகத்தில் படங்களாக படிப்பதைவிட, நேரடியாகவே இங்கு மாணவர்கள் பார்த்துச் செல்கின்றனர். இதனால், இயற்கை குறித்த ஆர்வம் ஏற்படுவதோடு, அதனை பாதுகாக்கும் எண்ணமும் தோன்றும்" என்கிறார் வின்னி ஆர்.பீட்டர்.

இந்த அமைப்பின் சார்பில் சிங்காநல்லூர் குளக்கரையில் கண்டுபிடிக்கபட்டுள்ள மேலும் மூன்று வகை பூச்சிகளும், ஒரு எட்டுக்கால் பூச்சி வகையும் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இவர்.

பல்லுயிர் சூழல்மிக்க இந்த குளத்தில் கழிவுநீர் கலப்பது அதன் உயிர் சூழலை பாதித்து வருவதாக தெரிவிக்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர். சரவணக்குமார்.

பூச்சியினம்

பட மூலாதாரம், CUBE

"நொய்யல் நதியின் பிரிவாக சங்கனூர் பள்ளத்தை கடந்து வரும் நீர், சிங்காநல்லூர் குளத்தை வந்தடைகிறது. ஒருகாலத்தில் சுத்தமான தண்ணீரோடு காட்சியளித்த இந்த குளம் தற்போது, கழிவுநீர் கலப்பதால் அசுத்தமாக காட்சியளிக்கிறது. இருந்தும், இங்கு பல்வேரு வகையான மீன்களும், பறவைகளும், பட்டாம்பூச்சிகளும், அரியவகை பூச்சியினங்களும் காணப்படுகின்றன. இவற்றை பாதுகாத்து, உயிர் சூழலை தக்க வைக்க வேண்டும் என்றால் இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திட வேண்டும்"

"அதுமட்டுமின்றி, குளக்கரைகளை மேலும் வலுப்படுத்திட வேண்டும், பொழிவுறு திட்டத்தின் கீழ் நவீன பாதுகாப்பு வசதிகளை இங்கு உருவாக்கிட வேண்டும், மீன்பிடி தொழிலை கண்டிப்பாக இங்கு தடுத்து நிறுத்த வேண்டும், பொழுதுபோக்கு சுற்றுலாவைத் தடுத்து கல்விச் சுற்றுலா மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், இவற்றோடு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல்லுயிர் சூழலை பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைக்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர். சரவணக்குமார்.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: