சசிகலா வருகை: "உருட்டல் மிரட்டலுக்கு அஞ்ச மட்டேன்" - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi Palanisamy

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேர்தல் பிரசார பயணத்தை முடித்து விட்டு சேலம் மாவட்டத்துக்கு புதன்கிழமை மாலையில் வந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவரிடம் சசிகலா வருகை பற்றி கேட்டபோது, "நான் எந்த மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சமாட்டேன்," என்று பதிலளித்தார்.

அ.தி.மு.க கட்சியின் முக்கிய நபராக கருதப்பட்ட சசிகலா ஊழல் வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்துள்ளார். இதனால், அ.தி.மு.க கட்சியினரிடையேயும், அ.ம.மு.க கட்சியினரிடையேயும் சலசலப்பு இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேட்டி அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சேலத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம்:

கேள்வி: சசிகலா, அடக்குமுறைக்கு அஞ்சமாட்டேன் என்று கூறியுள்ளாரே?

பதில்: இது குறித்து சசிகலாவிடம் தான் கேட்க வேண்டும். ஜனநாயக நாட்டில் யாரையும் அடக்குமுறை செய்ய முடியாது.

கேள்வி: சசிகலா, மீண்டும் கட்சி பணியில் ஈடுபடுவேன், அதிமுக தலைமை கழகம் செல்வேன் என்று கூறியுள்ளாரே?

பதில்: இதற்கான பதிலை அமைச்சர் ஜெயகுமாரும், கட்சியின் மூத்த தலைவர் முனுசாமி அவர்களும் பதில் சொல்லி விட்டார்கள்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

கேள்வி: அண்மையில் அமைச்சர் வேலுமணி.பேசும்போது, அண்ணன் தம்பி பிரச்னை என்று பேசியுள்ளாரே?

பதில்: இது தவறான செய்தி. கட்சிக்குள் இருந்த பிரச்னையை பத்திரிகையாளர்கள் திரித்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

கேள்வி: சசிகலா வருகை அ.தி.மு.க கட்சிக்குள் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பதில்: நாங்கள் அ.தி.மு.க கட்சியை நடத்தி வருகிறோம். அ.தி.மு.க-வில் யார் இருக்கிறார்கள் என்பதை அமைச்சர் ஜெயகுமார் தெளிவுபட விளக்கி விட்டார். இவர் வந்தால் தாக்கம் ஏற்படுமா என்ற பதிலை நான் எப்படி சொல்வது.

கேள்வி: சசிகலா வருகையின் போது கலந்து கொண்டவர்களை தொடர்ந்து நீக்கி வருகிறீர்களே?

பதில்: கட்சி விரோத செயலில் ஈடுபட்டால் கட்சியில் இருந்து நீக்கவே செய்வார்கள். இது எல்லா கட்சியிலும் நடக்கிறது. எங்கள் கட்சியிலும் நடக்கிறது. அதிமுகவில் கட்சி விரோதமாக செயல்பட்டால் மற்ற கட்சிகளைபோல் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவர்.

கேள்வி: சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் சொத்துகள் அரசுடைமையாக்கப்படுகிறதே?

பதில்: மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. நீதிமன்றம் உத்தரவுபடி சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுகின்றன. அரசுக்கும், இதற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

பழனிசாமி

பட மூலாதாரம், TWITTER

கேள்வி: தே.மு.தி.க கட்சி தலைவி பிரேமலதா சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறரே?

பதில்: அது அவருடைய விருப்பம். அடுத்த கட்சியின் தலைவரின் கருத்துக்கு நாங்கள் கருத்து சொல்ல முடியாது.

கேள்வி: கூட்டணி கட்சிகளிடையே பேச்சு இழுபறியாக உள்ளதா?

பதில்: எப்படி இழுபறி என்று சொல்ல முடியும்? தொகுதிப் பங்கீட்டில் இழுபறி என்பதே கிடையாது. பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யப்படும். திமுகவில் கூட தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதை எல்லாம் இழுபறி என அழைக்கிறீர்களா?

கேள்வி: இட ஒதுக்கீடு கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: எந்தெந்த சூழ்நிலையில் எது செய்ய முடியுமோ அந்த சூழ்நிலையில் அது செய்யப்படும்.

கேள்வி: கருத்துக்கணிப்புகளில் பல்வேறு தகவல் வெளியிடப்படுகிறதே?

பதில்: நீங்கள் தான் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும். நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சி கடல் போல் காணப்படுகிறது. அதிமுக அதிகமான இடங்களில் வெற்றி பெறும். எங்களது கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும். அம்மா ஆட்சி தொடரும்.

தினகரன்

பட மூலாதாரம், TTV Dinakaran FB

கேள்வி: டி.டி.வி தினகரன், அ.தி.மு.க ஆட்சி தொடரும் என்கிறாரே?

பதில்: அவருடைய கட்சி எங்கு இருக்கிறது? அ.தி.மு.க வேறு. அ.ம.மு.க வேறு. அ.ம.மு.க பல்வேறு வகையில் மூக்கை நுழைத்து பார்க்கிறது. ஆனால் அமமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவுடன் இணைய நினைத்தால் தலைமை ஆலோசித்து முடிவு செய்யும்

கேள்வி: சசிகலாவும் "தி.மு.க பொது எதிரி" என்று சொல்லி இருக்கிறாரே?

பதில்: அது அவருடைய கருத்து. அதற்கு நாங்கள் எப்படி கருத்து சொல்ல முடியும்? அ.தி.மு.கவை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் அவர்களே தி.மு.க ஒரு தீய சக்தி என்று கூறினார், அவர்களை எதிரி கட்சியாக பார்க்கிறோம். அவர்களை எதிர்த்தே போட்டியிட்டு தொடர்ந்து போராடி வெற்றி பெற்று வருகிறோம்.

கேள்வி: உங்களது கட்சியினர் கூட சசிகலா குறித்து அதிகம் பேசுவதில்லை, டி.டி.வி தினகரன் குறித்து அதிகம் பேசப்படுகிறதே?

பதில்: கட்சியில் இருப்பவர்கள் குறித்துதான் கருத்து சொல்ல முடியும். அவர்தான் தலையிட்டு அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியை உடைக்கவும் செய்தார். 18 எம்எல்ஏக்களை பிரித்து தன் பக்கம் அழைத்துச் சென்றவர் டி.டி.வி. தினகரன். அவரது முயற்சி எடுபடவில்லை. அதன் பின்புதான் அமமுக என்று கட்சியைத் தொடங்கினார்.

கேள்வி: ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் தொடக்கப்படும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

பதில்: அவர் அறியாமையில் பேசி இருக்கிறார். ஏற்கெனவே உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏ, அமைச்சர்கள், முதலமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் 13 பேரின் ஊழல் வழக்குகள் நடந்து வருகிறது.

கேள்வி: வருவாய்துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றாரே?

பதில்: அவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நிதி நிலைமையைப் பொறுத்தே அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அரசு சார்பில் கூறப்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் கொரொனா காலத்தில் சம்பள பிடித்தம் செய்தார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சம்பளம் பிடித்தம் செய்யாமல் முழு ஊதியமும் வழங்கினோம். ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியுள்ளோம். மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை வழங்கியுள்ளோம். அரசு ஊழியர்களுக்கு அதிக சலுகையை அம்மா ஆட்சியே வழங்கியுள்ளது.

கேள்வி: தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், முதலமைச்சர் வெளியே வருகிறார். துணை முதலமைச்சர் வெளியே வந்து சந்திப்பதில்லை. என்று கருத்து சொல்லியுள்ளாரே?

பதில்: நாங்கள் இருவருமே அனைத்து இடங்களுக்கும் சொல்கிறோம். ஒன்றாகத்தான் இருக்கிறோம். இதை நீங்களே பார்க்கிறீர்கள். துரைமுருகன், அவருடைய கட்சியைப் பார்க்கட்டும். அழகிரி குறித்து பேசட்டுமே. திட்டமிட்டு விஷமத்தனமாக பிரசாரம் செய்கிறார்கள். அதிமுகவில் எள் முனை அளவுகூட பிரச்னை இல்லை.

தினகரன்

பட மூலாதாரம், Edappadi Palaniswamy Twitter

கேள்வி: முதலமைச்சரிடம் பேசுவதற்கு முன் பிரதமர் தன்னிடம் தான் முதலில் பேசுகிறார் என்று சொல்லி இருக்கிறாரே ஸ்டாலின்?

பதில்: இது அவர்தான் பதில் சொல்ல வேண்டும். எதிர்கட்சி தலைவரிடம் பிரதமர் பேசுவது குறித்து எனக்கு தெரியாது. அப்படி பேசி அவர் சாதித்தது என்ன? இவர்கள் 13 வருடம் மத்தியில் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களிடம் அடிக்கடி பேசினார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு என்ன கொண்டு வந்தார்கள்? நாங்கள், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரியை தமிழகத்துக்கு பெற்றுத் தந்திருக்கிறோம். எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் பல சாலைகளை மேம்படுத்தி இருக்கிறோம். இன்னும் பல திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு வருகிறோம். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதியுதவி பெற்றிருக்கிறோம்.

கேள்வி: வேலூரில் உங்கள் பிரசாரத்தில் துப்பாக்கியுடன் வந்திருக்கிறார்கள். உங்கள் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருக்கின்றனவா?

பதில்: எனக்கு அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் நான் அஞ்சமாட்டேன். இந்த கேள்விக்கே இடமில்லை.

BBC Indian sports woman of the year
காணொளிக் குறிப்பு, டூட்டி சந்த்: 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: