தமிழர் உரிமை குழுவினர் மீது சட்ட நடவடிக்கை - இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர

இலங்கை

பட மூலாதாரம், Shangary

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் உரிமை போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் போலீஸ் சட்டப் பிரிவு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக போலீஸ் உயர் அதிகாரியொருவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக எவ்வாறான முறையில் நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பல போலீஸ் நிலையங்களில், குறித்த பேரணியை தடுத்து நிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருந்தது.

ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, மக்களை தூண்டி விடுதல் மற்றும் கொரோனா பரவல் ஆகிய காரணங்களை முன்னிலைப்படுத்தி நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருந்தது.

இலங்கை

பட மூலாதாரம், Shangary

இந்த நீதிமன்ற உத்தரவு தொடர்பாக பேரணியில் கலந்து கொண்டவர்களிடம் காவல்துறையினர் தெரிவித்தபோதிலும், அவற்றை பொருட்படுத்தாது, பேரணி இறுதி வரை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த பேரணி தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கருத்து தெரிவித்துள்ளார்.

''பெருமளவில் கூட்டம் சேர்ந்துள்ள மக்களை கலைப்பதற்காக கண்ணீர் புகை பிரயோகம், நீர் தாரை பிரயோகம் நடத்துவதையே, சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எதிர்பார்த்தார்கள். நாம் நீதிமன்றத்திடமிருந்து தடை உத்தரவுகளை பெற்றோம். பேரணியில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் எம்மிடம் உள்ளன. பேரணியில் சென்ற வாகனங்களின் பதிவு எண்கள் எம்மிடம் உள்ளன. அந்த நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, குறித்த வாகனங்கள் அனைத்தையும் அரசுடமைக்குவதற்கான நடவடிக்கைகளை எம்மால் எடுக்க முடியும். அனைவரையும் சட்ட ரீதியாக சிறைக்கு அனுப்புவதற்கான நிலைமை காணப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். ஓரிரு தினங்களில் அவர்களுக்கு எதிராக நாம் வழக்கு தொடருவோம்" என்றார் அமைச்சர் சரத் வீரசேகர.

சிறுபான்மை இனத்தவர்களின் உரிமையை வலியுறுத்தி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த 3ம் தேதி அம்பாறை - பொத்துவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி, கடந்த 7ம் தேதி யாழ்ப்பாணம் - பொலிகண்டி பகுதியில் நிறைவடைந்திருந்தது.

தமிழர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணியில், ஆரம்ப நாள் முதலே முஸ்லிம்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

இலங்கை

பட மூலாதாரம், Shangary

தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கம், மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர்கள், முஸ்லிம்கள் இணைந்து நடத்திய இந்த போராட்டம், அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

வடக்கு - கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்கள், அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், மாணவர்கள், காணாமல் போனோரின் உறவினர்கள், முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை வலுப்படுத்தியிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவுகள் பெற்று பேரணியை தடுக்க முயற்சித்த போதிலும், அதனை செய்ய முடியாது போனமையினால், வாகன பேரணியின் போது, வழிகளில் ஆணிகளை வீசி போராட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சித்திருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டோர் குற்றஞ்சுமத்தியிருந்தனர்.

இந்த போராட்டம் ஐந்து தினங்களாக நடைபெற்று, இறுதி தினத்தில் மாபெரும் கூட்டமொன்றை ஒன்றிணைந்து, யாழ்ப்பாணத்தில் போராட்டம் நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: