75 வயது கடந்தவருக்கு வருமான வரியிலிருந்து விலக்கு: யாருக்கு பொருந்தும்?

வருமான வரி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய நிதிநிலை அறிக்கை கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில், 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், எல்லோருக்கும் இந்த விலக்குக் கிடைக்காது. யாருக்கெல்லாம் இந்த விலக்குக் கிடைக்கும்? என்பதை பார்க்கலாம்.

பிப்ரவரி ஒன்றாம் தேதியன்று மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் கணக்கு தாக்கல் செய்யும் சிரமத்தை குறைக்க முடிவு செய்திருக்கிறோம். ஆகவே, ஓய்வூதியம் மற்றும் வட்டி மட்டுமே பெற்றுக்கொண்டிருக்கும் மூத்த குடிமக்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தேவையில்லை. அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியே வரியைக் கணக்கிட்டு செலுத்திவிடும்" என்று குறிப்பிட்டார்.

நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு தொடர்பாக சிலர் சந்தேகங்களை எழுப்பினர். ஒருவர் சிறு சிறு வேலைகளைப் பார்த்து, கிடைக்கும் பணத்திற்கு முன்பே வருமான வரி பிடிக்கப்பட்டு, மீதிப் பணம் மட்டுமே அனுப்பப்பட்டால், கணக்கைத் தாக்கல் செய்யாமல் அவற்றைப் பெறுவது எப்படி என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

"இந்தச் சலுகை என்பது ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும் பணத்தை வங்கியில் முதலீடுசெய்துவிட்டு, வட்டி பெறுபவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். மற்றவர்களுக்குப் பொருந்தாது" என்கிறார் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

இந்த சலுகையின்படி, 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓய்வூதியமும் வட்டியும் மட்டும் பெற்றுக்கொண்டிருந்தால், அவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று அர்த்தமல்ல. "மாறாக, அவர்கள் செலுத்த வேண்டிய வரியை அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியே பிடித்தம் செய்து செலுத்திவிடும். மூத்த குடிமக்கள் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. அவ்வளவுதான்" என்கிறார் மூத்த வரி ஆலோசகரான வைத்தீஸ்வரன்.

இந்தச் சலுகையைப் பெறுவதற்கு ஒருவர்:

1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டில் 75 வயதைக் கடந்திருக்க வேண்டும்.

2. அவருக்கு வரி வருவாயைத் தவிர வேறு வருவாய் இருக்கக்கூடாது. ஆனால், எந்த வங்கியில் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறதோ, அதே வங்கியில்தான் வட்டியும் வர வேண்டும்.

3. எந்தெந்த வங்கிகளில் இந்த கணக்குகளை வைத்திருக்கலாம் என்பதை விரைவில் மத்திய அரசு அறிவிக்கும்.

4. மூத்த குடிமக்கள் இந்த வங்கிகளுக்குச் சென்று இதற்கான தகவல்களையும் ஒப்புதல்களையும் தர வேண்டும். அவை எந்த வடிவில், என்னென்ன தகவல்களுடன் இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்.

இந்தத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வங்கி, இந்த மூத்த குடிமக்களின் வருமான விவரங்களைக் கணக்கிட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வரி விலக்கை அளித்துவிடும். அதைத் தாண்டி, அவர்கள் வரி செலுத்த வேண்டியிருந்தால், அது அவர்கள் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படும். இதைத் தாண்டி மூத்த குடிமக்கள் எந்த வருமான வரிப் படிவத்தையும் தாக்கல் செய்யத் தேவையில்லை.

2018ஆம் ஆண்டு பட்ஜெட்டிலேயே மூத்த குடிமக்களுக்கு பல வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லையென்றால், மருத்துவச் செலவிற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. துவக்கத்தில் 10,000 ரூபாய் வரையிலான வட்டி வருவாய்க்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. பிறகு அந்தத் தொகை 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மேலும் மருத்துவக் காப்பீட்டிற்காக 50,000 ரூபாய்வரை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது.

தற்போதைய நிதி அமைச்சரின் அறிவிப்பின் அர்த்தம் இதுதான்: 75 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள், வரி செலுத்த வேண்டிய வரம்பில் இருந்தால் வரி செலுத்த வேண்டும். ஆனால், ஓய்வூதியம் மற்றும் வட்டித் தொகையில் மட்டும் வாழ்பவராக இருந்தால் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தேவையில்லை. இவை தவிர, வேறு வருவாய் ஆதாரங்களைக் கொண்டிருக்கும் மூத்த குடிமக்கள் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: