விவசாயிகள் போராட்டம்: அடங்க மறுக்கும் விவசாயிகள் - தடுப்புகளை பலப்படுத்தும் காவல்துறை

பட மூலாதாரம், Getty Images
கடந்த திங்கட்கிழமை காலை முதல், காஸிபூர், சிங்கு மற்றும் டிக்ரி ஆகிய டெல்லியின் மூன்று எல்லைகளையும் அடைத்து, காவல் துறை தடுப்புகளை வைத்துள்ளது. இதனால், இந்த மூன்று வழிகளிலும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இது தவிர, இந்த மூன்று இடங்களிலிருந்தும் தில்லி செல்லும் பாதையிலும் ஏராளமான தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று இடங்களில் தான் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது.
மூன்று எல்லைகளிலும் நிலைமை என்ன, விவசாயிகள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்……
எல்லைகளில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
காஸிபூர் எல்லையில் விவசாயிகளின் போராட்டம் நடக்கும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்திலிருந்து டெல்லி செல்லும் அனைத்துச் சாலைகளும் பல அடுக்குத் தடுப்புகளால் மூடப்பட்டுள்ளன. நடைபாதைகள் கூட மூடப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து செய்தி சேகரித்து வரும் மூத்த பத்திரிகையாளர் பிரபாகர் மிஸ்ரா, "நான் இன்று காலை இரண்டு மணி நேரம் பயணம் தடைபட்டு நின்று விட்டேன். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் உதவி கோரினேன். அவரும் உதவ முன்வந்தார். ஆனால் நெரிசல் குறைவதாக இல்லை. அந்தப் பகுதியில் சிக்கித் தவித்த மற்றவர்களுடன் நானும் காத்திருந்தேன்" என்று கூறுகிறார்.

டெல்லியில் இருந்து உத்தர பிரதேசம் செல்லும் ஒரே ஒரு பாதை மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அது, ஆனந்த் விஹார் வழியாக காசியாபாத்துக்கு வரும் வழி. ஆனால் இங்கேயும், சாலையின் ஒரு பக்கம் மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படுவதால், வாகனங்கள் பல கிலோமீட்டருக்கு வரிசையில் நிற்கின்றன.
இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கான காரணத்தை வெளியிட டெல்லி காவல் துறை அதிகாரிகள் முன்வரவில்லை. அங்குள்ள காவல்துறையினர் "மேலிடத்து உத்தரவு" என்று மட்டுமே பதிலளிக்கின்றனர்.
காஸிபூர் எல்லையில் சில இளைஞர்கள் இந்தப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைக் கண்காணிக்கவே தாங்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
காஸிபூர் எல்லையில் விவசாயிகள் மீண்டும் அணி திரண்டதால், அங்கு கூட்டம் அதிகரித்து வருகிறது. அங்குள்ள விவசாயிகள், இந்தக் கூட்டம் மேலும் அதிகமாகக்கூடாது என்றும் கூடாரங்கள் அமைக்கப்படக்கூடாது என்பதற்காகவே காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகக் கூறுகிறார்கள்..
இந்த பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் டெல்லியில் பணிபுரிபவர்கள். இவர்கள் பெரும்பாலும் வசுந்தரா, வைஷாலி, இந்திராபுரம், கௌஷாம்பி ஆகிய இடங்களில் வசிக்கின்றனர். சாலைகள் மூடப்பட்டதால், மக்கள் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
நொய்டா செக்டர் 62-ல் இருந்து ரயில்வே தேர்வெழுதிவிட்டுத் திரும்பிய மனீஷ் யாதவ் பிபிசியிடம், "நான் இந்தப் பகுதியைச் சேர்ந்தவன் தான். எனக்கு நடந்து போகும் பாதை தெரியும். ஆனால் சிலர் நீண்ட நேரமாகக் காத்திருந்து தவிக்கின்றனர்." என்று தெரிவிக்கிறார்.
- காஸிபூர் எல்லையிலிருந்து சமீராத்மஜ் மிஷ்ரா, பிபிசி-க்காக
"தடுப்புகள் எங்களை ஒன்றும் தடுக்காது"

டிக்ரி எல்லையில் காவல்துறை, கான்கிரீட் தடுப்புகளை நிறுவியுள்ளனர். மேலும், வாகனங்கள் கடக்க முடியாதபடி கூர்மையான இரும்புக் கம்பிகளும் சாலையில் புதைக்கப்பட்டுள்ளன. இது தவிர, இணையத் தடையும் பிப்ரவரி 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் போராடி வரும் விவசாயிகள் இதை ஒரு சதியாகவே கருதுகிறார்கள்.
கிசான் சோஷியல் ஆர்மி அமைப்பைச் சேர்ந்த அனூப் சனௌத், "நாங்கள் ஒரு தொலைபேசி அழைப்பின் தூரத்தில் தான் இருக்கிறோம் என்று கூறும் அதே அரசு தான், எல்லைகளில் வைக்கப்படுவது போன்ற தடுப்புகளை இங்கு வைத்திருக்கிறது." என்று கூறுகிறார்கள்
மேலும் அனூப் பேசும்போது, "நாங்கள் அமைதியாக எங்கள் கோரிக்கைகளை முன்வைக்க அமர்ந்திருக்கிறோம். இது தொடரும். ஆனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைக்க நாங்கள் முன்னேறிச் செல்ல விரும்பினால், இந்த தடுப்புகள் எங்களைத் தடுக்காது. எங்கள் விஷயத்தில் அரசாங்கம் சதி செய்கிறது." என்கிறார்.
"விவசாயிகள் போராட்டக்களப்பகுதியில் பிப்ரவரி 2ஆம் தேதி நள்ளிரவுவரை இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான தகவல்களைக் கூட எங்களால் வழங்க முடியவில்லை. இப்போது விவசாயிகள் போராட்ட இயக்கத்தின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தில் எங்கள் குரல் அடக்கப்படுகிறது. இது ஒரு வழியில், ஜனநாயகப் படுகொலை. ஆனால், இந்த அழுத்தங்கள் அனைத்தையும் மீறி, நாங்கள் உறுதியாக நிற்போம், எங்கள் போராட்டம் தொடரும். " என்கிறார் அனூப்.
பிபிசியிடம் பேசிய டெல்லி காவல்துறை இணை ஆணையர் (வடக்கு எல்லை) எஸ்.எஸ்.யாதவ் சிங்கு எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், பணியமர்த்தப்பட்டுள்ள காவலர்களின் எண்ணிக்கையை அவர் வெளியிட மறுத்துவிட்டார். அது பற்றிய விவரங்கள் பதற்றம் ஏற்படுத்தக்கூடிய செய்தியாகலாம் என அவர் கருதுகிறார்.
- டிக்ரி எல்லையிலிருந்து பி பி சி நிருபர் தில்நவாஸ் பாஷா
சிங்கு எல்லையில் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும் மக்கள்

சிங்கு எல்லையிலும் காவல்துறை தடுப்புகளை நிறுவியுள்ளது. டெல்லியில் இருந்து சிங்கு எல்லையை நோக்கிச் செல்லும் பாதையில், சிங்கு எல்லையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லைக்கு அருகிலுள்ள சாலை முழுவதுமாகத் தோண்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில வாகனங்கள் மட்டுமே தடுப்புக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் ஊடக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கிசான் சங்கர்ஷ் சமிதியின் மேடை சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் மேடைக்கு முன்னரே உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த மேடையில் தான் கற்கள் வீசப்பட்டன. இந்த மேடைக்கு முன்னால், சிமென்ட் மற்றும் கம்பிகளாலான தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
சிங்கு எல்லைக்குச் செல்லும் அனைத்து வழித்தடங்களும் மூடப்பட்டுள்ளன. நரேலாவிலிருந்து போராட்டத்தில் பங்கேற்க வந்துள்ள 46 விவசாயிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ எல்லையில் டிரம்ப் அறிவித்தது போன்ற ஒரு தடுப்பைத் தான் இப்போது டெல்லி மற்றும் ஹரியானாவின் எல்லையில் மோதி அரசு அமைத்து வருகிறது என்று சிங்கு எல்லையில் உள்ள விவசாயிகள் சங்க தலைவர் சுர்ஜித் சிங் டேர் கூறினார்.
கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவின் தலைவர் சத்நாம் சிங் பன்னு, "இணையச் சேவைக்கும் போக்குவரத்துக்கும் தடை விதிப்பதன் மூலம், விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்திகள் வெளிவருவதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது" என்கிறார்.
மேலும் அவர், "இது தவிர, மோதி அரசாங்கம் தனது பிரசாரக் கருவிகளின் மூலம் போராட்டம் பலவீனமடைந்துள்ளதாகக் காட்ட முயற்சிக்கிறது, ஆனால் அது உண்மையல்ல. ஹரியானா மற்றும் பஞ்சாபிலிருந்து விவசாயிகள் தொடர்ந்து வருகிறார்கள்." என்றும் கூறுகிறார்.
சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தலைவர் சத்நாம் சிங் அஜ்னாரா, "அரசாங்கம் அனைத்து மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதில் மின்சாரத் தொடர்பைத் துண்டித்தல், தண்ணீர் விநியோகத்தை நிறுத்துதல், இணையச் சேவையை முடக்குதல் ஆகியவை அடங்கும். இப்போது அரசாங்கம் போராட்டக்களம் உள்ள பாதையில் போக்குவரத்தைத் தடை செய்கிறது. இந்த அரசாங்கம் இதையெல்லாம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் "அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், முதலில் அதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்." என்று கூறுகிறார்.
சத்நாம் சிங் பன்னு பிபிசியிடம், "டிக்ரி, சிங்கு மற்றும் காஸிபூர் போன்ற எல்லைகள் ஒவ்வொந்றிலும் இத்தகைய தடுப்புகள் நிறுவப்படுகின்றன. அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை விவசாயிகளின் மன உறுதியைக் குறைக்கும் முயற்சியாகும், ஆனால் விவசாயிகள் உற்சாகமாக உள்ளனர். மூன்று சட்டங்களையும் ரத்து செய்து, குறைந்த பட்ச ஆதரவு விலைக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கினால் மட்டுமே இது முடிவுக்கு வரும். அப்போது தான் நாங்கள் திரும்பிச் செல்வோம்" என்று கூறுகிறார்.
இரண்டு மாதங்களாக, விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படவில்லை, ஆனால் ஜனவரி 26 க்குப் பிறகு, அரசாங்கத்தின் போக்குவரத்து முடக்கம் போன்ற நடவடிக்கைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று சிங்கு எல்லையைச் சேர்ந்த உள்ளூர்வாசி சாகர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சிங்கு எல்லையில் சோனிபத்தைச் சேர்ந்த நூறு பெண்கள் குழு ஒன்று ட்ராக்டரில் வந்துள்ளது.
இந்தப் பெண்கள் பிபிசியிடம் பேசுகையில், மோதி அரசாங்கத்தால் விவசாயிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்றனர். விவசாயிகள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை நாங்கள் இங்கிருந்து அசையமாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.
- சிங்கு எல்லையிலிருந்து பிபிசி-க்காக குஷால் லாலி
பிற செய்திகள்:
- "இந்த பட்ஜெட் பொருளாதாரத்தை மீட்காது": ஜோதி சிவஞானம்
- உதவிக்கு யாரும் இல்லாதவரின் சடலத்தை சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ - குவியும் பாராட்டுகள்
- ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் துவங்கியது; கூட்டத்தொடரைப் புறக்கணிக்க தி.மு.க. முடிவு
- மூளையில் பொருத்திய சிப் மூலம் வீடியோ கேம் விளையாடும் குரங்கு - ஈலோன் மஸ்கின் புதிய அறிவிப்பின் பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












