டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: "100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாயம்"

"டிராக்டர் பேரணிக்கு பிறகு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாயம்" - அதிர்ச்சி தகவல்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கடந்த 26-ந் தேதி அங்கு மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் வன்முறை மூண்டது.

இந்த பேரணியை தொடர்ந்து மீண்டும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த பேரணி மற்றும் வன்முறை சம்பவத்துக்கு பின் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இதுகுறித்து ஆய்வு செய்ய 6 பேர் குழு ஒன்றை அமைத்துள்ள விவசாயிகள், மாயமானவர்களின் விவரங்களை இந்த குழுவினர் சேகரித்து, அது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிப்பார்கள் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்து உள்ளது.

"டிராக்டர் பேரணிக்கு பிறகு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாயம்" - அதிர்ச்சி தகவல்

பட மூலாதாரம், Getty Images

இதைப்போல மாயமானவர்கள் பற்றி தகவல் அறிந்தால் தெரிவிப்பதற்கு அலைபேசி எண் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

இதற்கிடையே விவசாயிகளின் போராட்டக்களங்களில் பொதுமக்களை அனுமதிக்காத போலீசாரின் செயலுக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது போராட்டக்காரர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை நிறுத்துவதற்கான சதி என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சயீது முஷ்டாக் அலி கோப்பையை வென்று தமிழக அணி சாம்பியன்

தினேஷ் கார்த்திக்

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, தினேஷ் கார்த்திக்

சயீது முஷ்டாக் அலி இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதாக தினமணி வெளியிட்டுள்ளது.

"சயீது முஷ்டாக் அலி இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தமிழக கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பரோடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது.

21 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் என் ஜெகதீசன் களமிறங்கினர். ஜெகதீசன் 14 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

வெற்றி இலக்கு குறைவு என்பதால் ரன் ரேட் நெருக்கடி இல்லாமல் நிஷாந்த் மற்றும் பாபா அபராஜித் பாட்னர்ஷிப் அமைத்தனர். நிஷாந்த் 35 ரன்கள் சேர்த்த நிலையில் பதான் பந்தில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கார்த்திக் துரிதமாக விளையாடி 16 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். இதனால் தமிழக அணியின் வெற்றி இலக்கு எளிதானது. கார்த்திக் விக்கெட்டைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாருக் கான் வந்த வேகத்தில் அதிரடி காட்டி 7 பந்துகளில் 18 ரன்கள் குவித்து தமிழக அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபராஜித் 29 ரன்களும், ஷாருக் கான் 18 ரன்களும் எடுத்தனர்.

இதன்மூலம், தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடந்தாண்டு தமிழக அணி இறுதி ஆட்டம் வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"புதிய தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்"

ராஜீவ் ரஞ்சன்

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, ராஜீவ் ரஞ்சன்

தமிழக தலைமைச் செயலர் க.சண்முகம் நேற்றுடன் ஓய்வுப்பெற்றத்தை ஒட்டி 47-வது தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சண்முகம் அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"சண்முகம் ஓய்வை அடுத்து மூத்த ஐஏஸ் அதிகாரியான 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் 47-வது தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அவர் மத்திய அரசு அயல்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டார். ராஜீவ் ரஞ்சன் 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பிஎஸ்சி மற்றும் அறிசார் சொத்துரிமை பிரிவில் பிஎச்டி (டாக்டர்) பட்டம் வாங்கியுள்ளார். ஐஐஎம்மில் எம்பிஏ முடித்துள்ளார், லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் மையத்தில் பப்ளிக் பாலிசியில் எம்.எஸ்.சி பட்டம் பெற்றுள்ளார். 1985-ம் ஆண்டு தமிழக ஐஏஎஸ் கேடராக துணை ஆட்சியராக பணியைத்தொடங்கிய ராஜீவ் ரஞ்சன் படிப்படியாக பல முக்கிய பதவிகளை வகித்தார்.

2001 முதல் 2007 வரை 7 ஆண்டுகள் அயல்பணியாக மத்திய அரசுப்பணியில் பணியாற்றினார். 2007-ல் இணைச் செயலாளர் அந்தஸ்த்துக்கு உயர்வு பெற்றார். 2009 முதல் முதன்மைச் செயலராக பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். மத்திய அரசின் அயல் பணியில் 11 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ஜிஎஸ்டி கவுன்சில் சிறப்புச் செயலாளராக 2019 அக்டோபர் முதல் செயல்பட்டு வந்தார். இவர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெறுகிறார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: