மத்திய பட்ஜெட் 2021-22: தனி நபர்களுக்கு பெரிதாக சலுகைகள் அறிவிக்கப்படாதது ஏன்?

பட்ஜெட்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கெளதமன் முராரி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளாதாரமும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த வீழ்ச்சியில் இருந்து மீள எல்லா நாடுகளும் கடுமையாகப் போராடி வருகின்றன.

இந்தியப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் நுகர்வு மிகப் பெரிய பங்களிக்கிறது. கடந்த 2020 - 21 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூட இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் தனியார் இறுதி நுகர்வுச் செலவீனம் (Private Final Consumption Expenditure) 54 சதவீதத்துக்கு மேல் இருந்தது.

கொரோனா பெரும்தொற்று காரணத்தால் வேலையிழப்பு, ஊதியம் குறைப்பு, தொழில் வாய்ப்புகள் குறைவு போன்ற பல காரணத்தால் மக்கள் கையில் போதுமான பணம் புழங்கவில்லை. எனவே நுகர்வு கணிசமாகக் குறைந்தது. நுகர்வு குறைவால், வியாபாரம் குறைந்து, உற்பத்தி சரிந்து, புதிய வேலைவாய்ப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் இந்திய பொருளாதாரத்தின் நுகர்வை அதிகரிக்கும் விதத்தில், இந்த 2021 - 22 பட்ஜெட்டில் தனி நபர்களுக்கு சலுகைகள், வரி வரம்பில் மாற்றம், நிலையான கழிவுகளின் அளவு அதிகரிப்பு என பலதும் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தனி நபர்களுக்கு எந்த ஒரு பெரிய சலுகைகளும், வரி வரம்பு மாற்றங்களும் அறிவிக்கப்படவில்லை.

ஏன் மத்திய அரசு தனி நபர்களுக்கு புதிய சலுகைகளை அறிவிக்கவில்லை?

இதற்கு மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார் சென்னையில் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கும் பிரகலா வெல்த் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சொக்கலிங்கம் பழனியப்பன்.

1. அரசுக்குப் போதுமான வருமானம் இல்லை:

அரசுக்கு வரும் வரி வருவாய் ஏற்கனவே மிகவும் குறைந்துவிட்டது.

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

2. கடந்த ஆண்டு தான் அறிவித்தார்கள்:

ஏற்கனவே கடந்த செப்டம்பர் 2019 காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்துவிட்டார்கள். கடந்த நிதி ஆண்டில் தனி நபர்களுக்கான வருமான வரியில் மாற்றம் கொண்டு வந்துவிட்டார்கள். அது போக நிலையான கழிவுகளையும் அதிகரித்துவிட்டார்கள்.

3. அதிகரிக்கும் செலவீனங்கள்:

இந்தியாவில் சுமாராக 25 கோடி பேர் தான் இந்த வருமான வரி தொடர்பான விஷயங்கள் குறித்து கவலைப்படுகிறார்கள். மீதமுள்ள 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வருமான வரி தாக்கல் செய்யும் அளவுக்குக் கூட வருமானம் இல்லை எனலாம். இந்த ஏழை எளிய மக்கள் பெரும்பாலும் அரசின் நலத் திட்டங்களைச் சார்ந்துதான் வாழ்ந்து வருகிறார்கள். அத்திட்டங்களை நடத்த அரசுக்கு தொடர்ந்து நிதிச் செலவீனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த மூன்று காரணங்களால் தான் அரசால் இந்த முறை தனி நபர்களுக்குப் போதுமான சலுகைகளை கொடுக்க முடியவில்லை.

இதனால் பொருளாதாரம் ஏதாவது பாதிக்கப்படுமா?

இதுகுறித்து பதிலளித்த சொக்கலிங்கம், "ஒரு பக்கம் அரசுக்கு வருமானம் இல்லை என்பதால் சலுகைகள் பெரிதாக அறிவிக்கப்படவில்லை என்பது நியாயமாகத் தோன்றினாலும், மறுபக்கம் நிலையான கழிவுகள் போன்ற சலுகைகளை அதிகரித்திருந்தால் அது நேரடியாக நுகர்வை அதிகரித்து வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவி இருக்கும். மறைமுகமாக ஜிஎஸ்டி போன்ற வரி வருவாய்களை அதிகரித்திருக்கும். இது ஒட்டுமொத்தமாக பொருளாதார சுழற்சியை வேகப்படுத்த உதவியிருக்கும்," என்கிறார் சொக்கலிங்கம் பழனியப்பன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: