மத்திய பட்ஜெட் 2021: நிர்மலா சீதாராமன் பட்ஜெட் மூலம் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள மாநிலங்களை இலக்கு வைக்கிறதா பாஜக?

மத்திய பட்ஜெட் 2021

பட மூலாதாரம், Pib india

படக்குறிப்பு, பொதுமக்களை பாதிக்காமல் அவர்கள் தேவையை பூர்த்தி செய்யும் பட்ஜெட் இதுவென பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.
    • எழுதியவர், விக்னேஷ். அ
    • பதவி, பிபிசி தமிழ்

அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு இன்று இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கணிசமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் அதிகமான திட்டங்கள் மற்றும் நிதியைப் பெற்றுள்ள மாநிலம் தமிழ்நாடுதான்.

தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் இரண்டு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தற்போது ஆளும் கட்சி கூட்டணி மற்றும் ஆளும் கட்சி ஆகவும் மற்றவற்றில் முக்கிய எதிர்க்கட்சி ஆகவும் உள்ளது.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வென்று அசாம் மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சி அமைத்தது பாஜக.

2019இல் நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, இடதுசாரிக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய எதிர்க்கட்சியாக விளங்குகிறது பாரதிய ஜனதா கட்சி.

ஆனால், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜக தனிப்பட்ட அளவில் வலுவான கட்சியாக இல்லை. தமிழகத்தில் தற்போது ஆளும் அஇஅதிமுகவின் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது.

2016ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஒரே ஒரு தொகுதியில் வென்று கேரள சட்டப்பேரவைக்கு தனது முதல் உறுப்பினரை அனுப்பிய, பாஜக, இந்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் மேலும் அதிகமான இடங்களை கைப்பற்றும் நோக்கில் பணியாற்றி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பலன் கிடைக்குமா?

ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவிப்பதால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது. ஆனால் தமிழகத்தில் மிகவும் பரவலான எதிர்ப்பு உள்ள சேலம் - சென்னை விரைவுச் சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக தமிழகத்திற்கு நல்லது செய்வதாக தெரிவித்தாலும், சேலம் -சென்னை விரைவுச் சாலை திட்டத்தால் அவை அனைத்தும் மக்களிடம் அடிபட்டு விடும் என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்.

"இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு கேரளாவில் நிலம் கையகப்படுத்தல் என்பது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அது உண்மைதான். பல லட்சம் கோடி ரூபாய்க்கு நெடுஞ்சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டால், அவை அமைப்பதற்கான நிலம் எந்த அளவுக்கு தேவைப்படும் என்பதை எண்ணிப் பாருங்கள்."

union budget 2021

பட மூலாதாரம், Ilangovan Rajasekaran facebook page

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அந்த திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்காமல் மக்கள் மத்தியில் இவற்றை வைத்து ஆதரவை பெற முடியாது," என்று இளங்கோவன் ராஜசேகரன் கூறுகிறார்.

"மக்கள் வரவேற்பை பெறும் வகையில் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கான நிதி ஒதுக்கீடுதான். ஆனால், அதை செய்யப்போவதாக மாநில அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. தன் பங்குக்கு மத்திய அரசு இப்பொழுது நிதி அளிக்கிறது. அவ்வளவுதான்."

வேளாண் கடன் தள்ளுபடி, புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் உண்டான சேதாரங்களுக்கான நிவாரணத்தொகை, கொரோனா முடக்கநிலை காரணமாக பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நடப்பு மூலதனம் (working capital) பெறுவதற்கான வழி உள்ளிட்டவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. நீண்ட நாட்களாக வலியுறுத்தப்படும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புதிதாக உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவிப்பதால் பாரதிய ஜனதா கட்சிக்கு அரசியல்ரீதியாக எந்த பலனும் கிடைக்காது என்று அவர் கூறுகிறார்.

நெடுஞ்சாலை திட்டங்கள் - தமிழ்நாட்டுக்கு அதிக பணம்

நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக அதிகபட்சமாக தமிழகத்திற்கு 1.03 லட்சம் கோடி ரூபாயும், அதற்கு அடுத்ததாக கேரளாவுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயும், அசாம் மாநிலத்துக்கு 34 ஆயிரம் கோடி ரூபாயும் மேற்கு வங்க மாநிலத்துக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நிர்மலா சீதாராமன் இந்திய பட்ஜெட்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களில் மதுரை மற்றும் கேரள மாநிலம் கொல்லம் இடையிலான பொருளாதார மண்டல நெடுஞ்சாலைத் திட்டமும், தச்சூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் இடையிலான பொருளாதார மண்டல நெடுஞ்சாலைத் திட்டமும் அடக்கம். இவற்றுக்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலை திட்டங்களில் மிகவும் முக்கியமானது கன்னியாகுமரி மற்றும் மும்பை இடையிலான 600 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலைத் திட்டம்.

மேற்கு வங்க மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 675 கிலோமீட்டர் நீளத்துக்கான நெடுஞ்சாலைப் பணிகள் தொடங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏற்கனவே இருக்கும் கொல்கத்தா மற்றும் சிலிகுரி இடையிலான நெடுஞ்சாலை மேம்பாடும் உள்ளடங்கும்.

34 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில் ஏற்கனவே 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் அடுத்த 3 ஆண்டுகளில் 1300 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை தெரிவிக்கிறது

இவை மட்டுமல்லாது வேறு சில துறைகளிலும் தமிழகத்துக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

தமிழ்நாடு பெறும் பிற திட்டங்கள் என்ன?

118.9 கிலோ மீட்டர் நீளமுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக 63,246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடித் துறைமுகங்கள் கணிசமான முதலீடுகள் செய்யப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ள ஐந்து ஊர்களில் மூன்று ஊர்கள் அடுத்து தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் உள்ளன.

இவை கேரளாவிலுள்ள கொச்சி மீன்பிடி துறைமுகம், சென்னை மீன்பிடித் துறைமுகம், மேற்கு வங்கத்தில் உள்ள பெத்துவாகட் மீன்பிடித் துறைமுகம் ஆகியவை தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களிலும், ஆந்திரத்தில் உள்ள விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவில் உள்ள பாராதீப் ஆகியவை விரைவில் தேர்தலை எதிர் கொள்ளாத மாநிலங்களிலும் அமைந்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: