வேளாண் சட்டங்கள்: மோதி அரசு மண்டியிட்டதா அல்லது இதுவும் ஒரு வியூகமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
,"விவசாய சீர்திருத்தச் சட்டங்களை அமல்படுத்துவது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படலாம். இந்தக் காலகட்டத்தில், விவசாயிகள் அமைப்புகளும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் வேளாண் அமைப்புகளின் பிரச்சனைகளை விரிவாக விவாதித்துத் தகுந்த தீர்வை எட்ட முடியும்."
- மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒரு பகுதி.
புதிய விவசாய சட்டத்தை அமல்படுத்துவதில் மோடி அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு முற்றிலும் புதியது.
ஆர்.எஸ்.எஸ். தலையீட்டுக்குப் பிறகுதான் இது நடந்துள்ளது என்று சிலரும் புதிய வேளாண் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என்று சிலரும் கூறுகிறார்கள்.
மேலும் சிலர், இதை மோடி அரசாங்கத்தின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று வர்ணிக்கின்றனர். அடுத்த சில மாதங்களில் பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இந்தப் போராட்டம், அந்த மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அரசு இதை எதிர்கொள்ளத் துணியவில்லை என்பது அவர்கள் கருத்து.
இந்தச் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் என்று பிரதமர் ஓயாமல் கூறி வருகிறார். 'மனதின் குரல்' (மன்கி பாத்) நிகழ்ச்சியிலும் மத்திய வேளாண் துறை அமைச்சரின் கடிதத்தைப் படிக்குமாறு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தும் அவர் வலியுறுத்தியதை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னாள் உறுப்பினரான அகாலிதளம் கூட செவிமடுக்கவில்லை. இந்நிலையில், இச்சட்டங்களை 12 முதல் 18 மாதங்களுக்கு ஒத்திவைக்க மோடி அரசு ஒப்புக்கொண்டுள்ளது அரசின் மீது பல கேள்விகளை எழுப்புகிறது.
தில்லி எல்லையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே 10 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது, ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
ஆர் எஸ் எஸ்-ன் பங்கு
இத்தனைக்கும் பிறகு, மோடி அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து எவ்வாறு பின்வாங்கியது?

பட மூலாதாரம், TWITTER / ASHWINI MAHAJAN
இந்தக் கேள்வியை ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் தேசிய இணை அமைப்பாளர் அஸ்வினி மகாஜனிடம் பிபிசி எழுப்பியது.
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காகவே உள்ளன என்பது சுதேசி ஜாக்ரான் மன்ச் அமைப்பின் கருத்து. ஆனால் விவசாயிகளின் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என்பதும் இன்னும் பிற கோரிக்கைகளும் முக்கியத்துவ வாய்ந்தவை என்றும் இந்த அமைப்பு கருதுகிறது.
பிபிசியிடம் பேசிய அஸ்வினி மகாஜன், "அரசாங்கம் இந்தச் சட்டங்கள் குறித்த வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதையே இந்த முடிவு காட்டுகிறது. தன் நிலைப்பாட்டில் இருந்து விலகுவதாக இதை நான் கருதவில்லை. கடந்த காலங்களில் கூட அரசாங்கம் சில முடிவுகளை எடுத்து, அந்த முடிவுகளுக்குச் சில ஆட்சேபனைகள் எழுந்ததால், அரசாங்கம் அவற்றைத் திரும்பப் பெற்றது. மரபணு மாற்றப்பட்ட பயிர், நிலம் கையகப்படுத்தும் சட்டம், RCEP இல் புதிய ஒப்பந்தம் போன்றவை சில எடுத்துக்காட்டுகள்" என்று கூறுகிறார்.
இதில் ஆர்.எஸ்.எஸ். வகித்த பங்கு தொடர்பான கேள்விக்கு அவர், "இந்த முடிவு வரவேற்கத்தக்கது. இதில் ஆர் எஸ் எஸ் அமைப்புக்குப் பங்கு எதுவும் இல்லை. எனினும், எங்கள் தரப்பிலிருந்து பல வகையான ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. முறைசாரா உரையாடல்களும் பல மட்டங்களில் நடக்கின்றன." என்று அவர் பதிலளித்தார்.
இதற்கு முன்னும் அரசு பல சட்டங்களில் பின்வாங்கியுள்ளது
ஒரு சட்டம் குறித்து, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றுவது இது முதல் முறை அல்ல என்பது உண்மைதான்.
முன்னதாக, விவசாய நிலம் கையகப்படுத்தும் சட்டத்திலும் மத்திய அரசு பின்வாங்கியது. அந்த நேரத்தில், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து, மத்திய அரசை மேல் தட்டு மக்களுக்கான அரசு என்ற பொருள் படும், 'சூட்-பூட் அரசு' என்று குறிப்பிட்டார். இது தவிர, இது என்.ஆர்.சி., புதிய தொழிலாளர் சட்டம் என எதிலும் அரசாங்கம் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை.
அஸ்வினி மகாஜன் மேலே குறிப்பிட்ட மூன்று சட்டங்களும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அமைப்புகளால் ஆட்சேபிக்கப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.
அரசுக்கு வேறு வழியில்லை
பழைய பாஜக தலைவர் சுதீந்திர குல்கர்னியும் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான அரசாங்கத்தின் புதிய நிலைப்பாடு குறித்து பிபிசியிடம் பேசிய சுதீந்திர குல்கர்னி "இந்த ஏற்பாடு, பிரதமர் நரேந்திர மோதியின் இயல்புக்கு முற்றிலும் எதிரானது. நரேந்திர மோதி, முன் வைத்த காலை பின் வைக்கமாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த முடிவு, அந்தப் பிம்பத்துக்கு மாறானது" என்று தெரிவித்தார்.
மேலும், இந்த முடிவு அழுத்தம் காரணமாகவே எடுக்கப்பட்டது என்றும் அரசுக்கு வேறு வழியே இல்லாமல் போனது என்றும் அவர் கூறுகிறார். இரண்டு மாதங்களாக, விவசாயிகள் தெருக்களில் அமர்ந்து, அமைதியாக, வன்முறை இல்லாமல் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து எதிர்வினைகள் வருகின்றன. உச்சநீதிமன்றக் குழு அமைக்கப்பட்டும் விவசாயிகள் அசரவில்லை. இறுதியாக, டிராக்டர் பேரணி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்வது பற்றி பேசப்படுகிறது - இதனைக் கண்ட அரசு, விவசாயிகள் எதற்கும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை புரிந்து கொண்டது என்றும் குல்கர்னி கூறுகிறார்.

பட மூலாதாரம், VISHWA SAMWAD KENDRA
அரசாங்கம் இந்த முடிவை எடுப்பதற்கு முதல் நாள் ஆர்.எஸ்.எஸ். இரண்டாம் நிலைத் தலைவர் பைய்யாஜி ஜோஷி விவசாயிகளின் போராட்டம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் "இந்த பிரச்சினைக்கான தீர்வு குறித்து இரு தரப்பினரும் சிந்திக்க வேண்டும். நீண்ட போராட்டங்கள் பயனளிக்காது. போராட்டத்தால் யாருக்கும் இடர்ப்பாடுகள் இருக்கக்கூடாது. எனவே இரு தரப்பினரும் உடன்படும் ஒரு சுமுகத் தீர்வு காணப்படவேண்டும்" என்று கூறியிருந்தார்.
குடியரசு தின டிராக்டர் பேரணி
அவுட்லுக் பத்திரிகையின் அரசியல் செய்தியாளரான பாவனா விஜ் அரோரா நீண்ட காலமாக பாஜக குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
அவர், ஆர்.எஸ்.எஸ். அழுத்தம் தவிர, ஜனவரி 26 ம் தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்துவதாக கூறியுள்ள டிராக்டர் பேரணியில் பிரச்சனை செய்ய முயற்சிகள் நடப்பதாக கிடைத்த புலனாய்வுத் துறைத் தகவல்களும் இந்த முடிவுக்குப் பின்னால் இருப்பதாக கூறுகிறார். ஜனவரி 22 ம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை முக்கியமானது என்று அரசாங்கம் கருதுகிறது. விவசாயிகள் அரசாங்கத்தின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டால், ஜனவரி 26 ம் தேதி டிராக்டர் பேரணி நடத்தக்கூடாது என்று விவசாயிகளுக்கு அரசு கோரிக்கை வைக்கலாம்" என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், PANKAJ NANGIA / ANADOLU AGENCY VIA GETTY IMAGES
அரசின் அதிரடி முடிவு
ஆனால் மூத்த பத்திரிகையாளர் அதிதி ஃபட்னிஸ் மத்திய அரசின் இந்த முடிவை ஒரு அதிரடி வியூகம் என்று குறிப்பிடுகிறார். மேலும் இதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு இருப்பதாகத் தாம் கருதவில்லை என்றும் இவர் கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ்ஸின் கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வந்தது என்றால், அதை ஏற்றுக் கொள்வதில் அரசுக்கு இவ்வளவு தாமதம் ஏன்? என்று இவர் கேட்கிரார்.
தனது கருத்தை விளக்கும் அதிதி, "அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. விவசாயிகளின் எந்தவொரு கோரிக்கையையும் அரசாங்கம் ஏற்கவில்லை. அவர்கள் இந்தச் சட்டங்களை 18 மாதங்களுக்கு ஒத்திவைக்கின்றனர். இந்த 18 மாதங்களில், பல மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்துவிடும்.
விவசாயிகளின் கோரிக்கை இந்தச் சட்டங்களைத் திரும்பப்பெறவேண்டும் என்பதும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்கவேண்டும் என்பதுமாகும். ஆனால், அரசு, சட்டத்தையும் திரும்பப் பெறவில்லை, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதமும் அளிக்கவில்லை" என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Reuters
அவர் தொடர்ந்து, "விவசாயிகளின் உண்மையான கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாத நிலையிலும் போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டால், அது அரசுக்கான வெற்றியே ஆகும். விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெறாததும் இது, அரசியல் ரீதியாக நாடு முழுதும் மெல்லப்பரவத் தொடங்குவதுமே அரசுக்குச் சிக்கலான விஷயம். அரசு இதை முன்னரே செய்திருக்கலாம். இந்தப் போராட்டத்தால் அரசுக்கு லாபம் எதுவுமில்லை, மாறாக பின்னடைவே ஏற்பட்டது" என்று கூறுகிறார்.
"இது விவசாயிகள் போராட்டம் அல்ல, குலாக்குகள் போராட்டம்" - பாஜக எம்.பி.
இருப்பினும், பாஜக மாநிலங்களவை உறுப்பினரான ராகேஷ் சின்ஹா ஜனநாயக வழிமுறையின் ஒரு பகுதியாகவே அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறுகிறார்.
பிபிசியுடனான உரையாடலில் அவர், "இந்தப் போராட்டத்தை முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வர, இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன. அமைதியான முறையில் பேச்சு வார்த்தை மூலமாகவோ அல்லது, இந்திரா காந்தியின் காலத்தில் நடந்தது போல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ தான் இதற்குத் தீர்வு காண முடியும்.
எங்கள் அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தான் பிரச்சினையைத் தீர்ப்பதை விரும்புகிறது. பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை வந்தபோது, அரசாங்கம் ஒரு புதிய தீர்வைக் கண்டறிந்தது. சட்டத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஏற்பாட்டைக் கையில் எடுத்துள்ளது. சட்டத்தைத் திரும்பப் பெறவில்லை. " என்று விளக்குகிறார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், "நாங்கள் ஜனநாயக வழிமுறையால் விவசாயிகள் போராட்டத்தை வெல்ல முயற்சித்தோம். இது விவசாயிகளின் போராட்டமே அல்ல. இது ரஷ்ய புரட்சிக்குப் பிறகு புதிய அரசின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க நடந்த குலாக்குகளின் (Kulak - பெரு விவசாயிகள்) போராட்டம் போன்ற ஒன்று.
அப்பாவி மக்களையும் விவசாயிகளையும் மூளைச்சலவை செய்து அரசுக்கு எதிராகப் போராடத் தூண்டிய குலாக்குகள் இயக்கம் போலதான் இங்கும், விவசாயிகளைத் தவறாக வழிநடத்தி, அரசை நிலை குலையச் செய்யும் முயற்சி நடந்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளில் நாங்கள் அவர்களுக்கு உண்மைகளை விளக்கி அவர்களைத் தெளிவடையச் செய்வோம். விஷயத்தையும் விளக்குவோம். " என்கிறார்.
ஆனால் சில வல்லுநர்கள் இந்த ஒன்றரை ஆண்டுகளில், அமலாக்கத் துறை மற்றும் பிற அரசு அமைப்புகள் மீண்டும் போராட்டம் மூளாமல் செய்துவிடாதா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், ராகேஷ் சின்ஹா, "நாட்டின் 11 கோடி விவசாயிகள் எங்களுடன் உள்ளனர், 'குலாக்குகள்' மட்டுமே எதிர்க்கின்றனர். இந்த குலாக்குகளுக்கு பின்னால் இருந்து இயக்கும் சக்திகள், இந்தியாவைச் சீர்குலைக்க விரும்பும் வெளிநாட்டு சக்திகள்" என்று கூறுகிறார். .
இந்தப் புதிய சட்டங்களின் அடிப்படையில் எங்கு தேர்தல்கள் நடந்தாலும் நாங்கள் அங்கு வெற்றி பெறுவோம். இதில் மாற்றுக்கருத்தே இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
ஏற்க மறுத்த விவசாயிகள்
கடைசியாக கிடைத்த தகவல்படி சட்டத்தை 18 மாதம் நிறுத்திவைக்கும் மத்திய அரசின் சமாதான யோசனையை ஏற்கமுடியாது என்று போராடும் விவசாயிகள் மறுத்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
போராடும் விவசாய சங்கங்கள், இந்த திட்டத்தை நிராகரித்துள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா சங்கம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
பிற செய்திகள்:
- சசிகலாவுக்கு என்ன பிரச்சனை? இப்போது எப்படி இருக்கிறார்? டிடிவி தினகரன் விளக்கம்
- ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: அமெரிக்க அதிபரின் முதல் உரை
- அமெரிக்க வரலாற்றில் டொனால்டு டிரம்ப் விட்டுச்சென்ற மரபு என்ன?
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த மின்னல் வேக முதல் உத்தரவுகள் என்னென்ன?
- ஜோ பைடன் ஆட்சியில் பதவி வகிக்கப்போகும் இந்திய வம்சாவளியினர் யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












