சசிகலா பற்றிய சர்ச்சை பேச்சுக்கு குருமூர்த்தி விளக்கம் - "மன்னார்குடி குடும்பம் மாஃபியாதான்"

குருமூர்த்தி

பட மூலாதாரம், S. Gurumurthy Twitter

வீடு பற்றி எரியும்போது கங்கை ஜலத்திற்காக காத்திருக்க முடியாது, சாக்கடை ஜலத்தையும் வாரி வீசலாம் என ஜெயலலிதாவின் தோழி சசிகலாவைக் குறிப்பிடும் வகையில் துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், சசிகலா ஆதரவாளர்கள் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க ஒரு மாஃபியா என தான் இன்னமும் நம்புவதாக குருமூர்த்தி விளக்கமளித்திருக்கிறார்.

தமிழில் வெளிவரும் அரசியல் வார இதழான துக்ளக்கின் 51வது ஆண்டு விழா பொங்கல் தினத்தன்று நடைபெற்றது. இதில் வாசகர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர் பதிலளிக்கும் நிகழ்வின்போது, அனந்தராமன் என்ற வாசகர், "பா.ஜ.க. - தினகரன் - சசிகலா கூட்டணி வரும் என்று சொன்னால் சரியா, தேர்தலுக்குப் பிறகு அதிமுக இணைய வாய்ப்பு உண்டா?" என்று கேட்டார்.

இதற்குப் பதிலளித்த குருமூர்த்தி, "1987ல் போஃபர்ஸ் ஊழல் வந்தபோது, எப்படியாவது ராஜிவ்காந்தியை பதவியை விட்டு அகற்ற பெரிய முயற்சியை இந்தியன் எக்ஸ்பிரஸ் எடுத்தது. அதில் சொந்த நலன் கிடையாது. அதற்காக பல சிரமங்களை எதிர்கொண்டவர்களில் ராம்நாத் கோயங்கா, அருண் ஷோரி, நான் போன்றோர் முன்னணியில் இருந்தோம்.

அப்போது சந்திராசாமி என ஒருவர் இருந்தார். அவர் பலே ஆசாமி. அவர் பெயரில் பல குற்றச்சாட்டுகள் இருந்தன. அவர் உதவியை ஏற்றோம். அதற்காக அவருக்கு பத்திரிகையில் முக்கியத்துவம் கொடுத்தோம். இதனால், அவருக்கு அரசியலில் முக்கியத்துவம் கிடைத்தது. அப்போது பத்திரிகையாளர்கள் அருண் ஷோரியிடம் கேட்டார்கள். "நீங்கள் தூய அரசியல் வேண்டுமென நினைக்கிறீர்கள். எப்படி சந்திராசுவாமியை ஏற்கிறீர்கள்? என்று கேட்டார்கள்.

அப்போது அருண் ஷோரி கூறிய பதில்தான் நான் இப்போது கூறப்போகும் பதில். யாரை வைத்து தி.மு.கவை விலக்குவது என்பதற்கு அருண் ஷோரி அப்போதே பதில் சொல்லிவிட்டார். அதாவது வீடு பற்றி எரிகிறபோது, கங்கை ஜலத்துக்கு காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம் என்றார். இதற்காக சந்திராசாமி வந்து சண்டை போட்டார். அதே மாதிரிதான் அது சசிகலாவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. ஒரு அணி என திரளும்போது, கங்கை ஜலத்திற்கு காத்திருக்க முடியாது. எல்லா ஜலத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் என தோன்றுகிறது" என்று பதிலளித்தார் குருமூர்த்தி.

இந்தப் பேச்சின்போது, சசிகலா மற்றும் அ.ம.மு.கவை சாக்கடை நீருடன் குருமூர்த்தி ஒப்பிட்டது பரபரப்பை ஏற்பட்டது. இது தொடர்பாக செய்தி வெளியிட்ட சில ஊடகங்கள், சசிகலாவை குருமூர்த்தி ஆதரிப்பதாகக் கூறின.

இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் குருமூர்த்தி, "இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென தனது வாசகர்களிடம் சொல்ல துக்ளக் முடிவெடுத்து விட்டது. அப்படி முடிவெடுத்த பிறகு நாங்கள் சாக்கடை என கருதுபவர்கள் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்குள் வந்தால், அந்தக் கூட்டணியை ஆதரிக்க மாட்டோம் எனச் சொல்ல முடியாது. அதனால்தான் சந்திராசாமி உதாரணத்தைக் கூறினேன். அதை வைத்துக்கொண்டு, நான் இன்னும் மாஃபியா எனக் கருதும் அ.ம.மு.கவை ஆதரிப்பதாகச் எப்படி சொல்ல முடியும்?

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

அமமுகவை நான் இன்னும் மன்னார்குடி மாஃபியா என்றே கருதுகிறேன். அவர்கள் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியின் அங்கமானால்கூட, சந்திராசாமியை சாக்கடை என்று கருதியதைப்போல, இவர்களை மாஃபியா என்றே கருதுகிறேன்.

துக்ளக்கைப் பொறுத்தவரை மன்னார்குடி குடும்பத்தை மாஃபியா என்றே கருதுகிறோம். அ.தி.மு.கவை அவர்கள் தி.மு.கவைப் போல குடும்பக் கட்சியாக மாற்றிவிடுவார்கள். இதுதான் எங்கள் நிலைப்பாடு. சாக்கடையோடு ஒப்பிடப்பட்ட சந்திராசாமியோடு ஒருவரை ஒப்பிடும்போது, அது எப்படி அவர்களை நான் ஆதரிப்பதாக புரிந்து கொள்ளப்படுகிறது?" என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

ஆனால், இந்தத் தருணத்தில் இது தொடர்பாக அ.ம.மு.க. சார்பில் கருத்துத் தெரிவிக்க யாரும் விரும்பவில்லை. டிடிவி தினகரன் உரிய நேரத்தில் இது தொடர்பாக விளக்குவார் என்று மட்டும் தெரிவித்தனர்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன், "சசிகலா - குருமூர்த்தி இடையே தனிப்பட்ட முறையில் பகை உண்டு. அதற்கான காரணம் நமக்குத் தெரியது. சசிகலாவோ, குருமூர்த்தியோ அதைப் பற்றி சொன்னால்தான் நமக்குத் தெரியும். ஆனால், அவர்கள் அதைப் பற்றிப் பேசுவதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் நடக்கும் பல அரசியல் நிகழ்வுகளுக்குத் தானே காரணம் என குருமூர்த்தி சொல்லி வருகிறார். சசிகலா சிறைக்குச் சென்றதற்கு தானே காரணம் என்றார்.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஓ.பி.எஸ்ஸை முதல்வராக நீட்டிக்கச் செய்ய முயற்சித்தார். பிறகு எடப்பாடி - ஓ.பி.எஸ். ஆகிய இருவரையும் இணைக்க தான் முயற்சி செய்ததாகச் சொன்னார். தன் வீட்டில்தான் அந்த பேச்சு வார்த்தை நடந்ததாகச் சொன்னார். அவரைப் பொறுத்தவரை எல்லாமே தன்னால்தான் நடந்தது என சொல்ல விரும்புகிறார்.

இப்போது அதி.மு.க. - அ.ம.மு.க. ஆகிய இரண்டையும் இணைக்க பா.ஜ.கவின் சார்பில் சில முயற்சிகள் நடக்கின்றன. இதில் குருமூர்த்திக்கு எந்தத் தொடர்பு இல்லை. ஆனால், இதைத் தெரிந்து கொண்டு, சசிகலாவை சேர்த்துக்கொண்டு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார். உண்மையில் அவர் உதவி வருபவர்களை அவமானப்படுத்துகிறார்.

தன்னை மீறி ஏதோ நடக்கிறது என்ற அவருடைய ஆற்றாமையின் வெளிப்பாடுதான் இது. டெல்லியில் நடந்துவரும் அ.தி.மு.க. - அ.ம.மு.க. இணைப்பு முயற்சிகளில் அவருக்கு எந்தவித பங்கும் இல்லை. ஒருவேளை இணைப்பு நடந்தால், அது தன்னால் நடந்ததாகக் காட்ட இதையெல்லாம் சொல்கிறார்" என்று கூறினார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன்சுவாமி, "குருமூர்த்திக்கு முன்பே நான்தான் சசிகலாவை ஆதரித்தவன். நேற்றுவரை ரஜினிகாந்தை ஆதரித்தார் அவர். அது குழப்பத்தில் முடிந்துவிட்டது. ரஜினிகாந்த் விளையாட்டைப் புரிந்துகொண்டுவிட்டார். அரசியல் ஒட்டுண்ணியான குருஜி, வேறு இடத்தில் ரத்தத்தை எதிர்நோக்குகிறார்" என்று கூறியிருக்கிறார்.

பொங்கல் தினத்தன்று துக்ளக் விழாவில் பேசிய குருமூர்த்தி, தமிழக அரசியல் தொடர்பாக வேறு சில கருத்துகளையும் தெரிவித்தார். இரு கழகங்களுக்கும் ஊழலில் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் கூறினார்.

"பா.ஜ.க. வேலை கையில் எடுத்திருப்பது மிக முக்கியமான விஷயம். கந்த சஷ்டி கவசத்தை மோசமாக பேசியதற்கு எந்தக் கட்சியும் பதிலளிக்கவில்லை. ஆனால், முருகன் அதைக் கையில் எடுத்தார். சூரப்பாவை பழிவாங்கியிருக்கிறார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்.

தமிழ்நாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பது இரண்டு கழகங்கள்தான். அவர்களுக்கு பரந்த நோக்கங்கள் இல்லை. தமிழ்நாட்டை குறுக்கிவிட்டார்கள்.. அதனை பரந்த மாநிலமாக மாற்ற கழகங்களால் முடியாது. திருத்தணிக்கு அப்பால் சிந்தனை செய்யாத மாநிலமாக மாற்றிவிட்டார்கள். இரண்டு கழகங்களும் நலியத்தான் செய்யும். தேசிய கட்சி வளர வேண்டிய காலம் வந்துவிட்டது. காங்கிரசிற்கு அதற்கு வாய்ப்பில்லை.

இந்தத் தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளுக்குத்தான் வாய்ப்பு. இரண்டும் ஊழல் மன்னர்கள். அதிமுக தேசியவாதத்தை ஏற்கிறது. தி.மு.க. ஏற்கவில்லை. எந்த அணியில் பா.ஜ.க இருக்கப்போகிறதோ அதற்குத்தான் ஆதரவு அளிக்க வேண்டும். தி.மு.க. அழியப்போகிற கட்சி. இந்தத் தேர்தலில் நம் கடமை தி.மு.கவை தோற்கடிப்பது.

ரஜினியை நான் கையை முறுக்கியதே கிடையாது. ஆனால், அரசியலில் அவருக்கு ஒரு பங்கு இருக்கிறது. அது ஒரு தொடர்கதை" என்றார் குருமூர்த்தி.

எம்.ஜி.ஆரால்தான் தமிழ்நாட்டில் தேசியமும் ஆன்மீகமும் நிலைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

"அ.தி.மு.க இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் தேசியம் இருந்திருக்காது, ஆன்மீகம் இருந்திருக்காது. இந்து மதத்தின் மீதான துவேஷம் குறைந்திருக்காது. தேசியத்தை நோக்கி தமிழ்நாட்டைத் திருப்புவதற்கு எம்.ஜி. ராமச்சந்திரன் செய்த வேலைக்கு நாம் எல்லோரும் நன்றியோடு இருக்க வேண்டும். அவருக்குப் பிறகு அது தேங்கிவிட்டது. 1989லிருந்து 2014வரை மத்தியில் கூட்டணி ஆட்சிதான் இருந்தது. தேசிய கட்சிகள், ஏதோ ஒரு வகையில் இந்த கட்சிகளை சார்ந்திருந்தன. அதனால், தமிழ்நாட்டில் மாறுதல் வர வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அது மாறியது 2014ல்தான்.

குருமூர்த்தி

பட மூலாதாரம், S. Gurumurthy Twitter

இப்போது இரண்டு கட்சிகளும் மங்குவதற்கு எல்லாவிதமான அறிகுறிகளும் தெரிகின்றன. அதற்குரிய சரியான தலைமை இல்லை. இரு கட்சிகளிடம் போட்டியிருக்கிறதே தவிர ஆளுமைகள் இல்லை. அதனால்தான் ரஜினியை எதிர்பார்த்தோம். இந்த இடைவெளியை நிரப்பும் திறன் காங்கிரஸுக்கு இல்லை. அவர்கள் தி.மு.கவை போல நடந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. அக்கட்சிக்கு தமிழ்நாட்டில் தேவை இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஜாதிக் கட்சிகள் வளர திராவிடம்தான் காரணம். அதற்கு முன்பு கிடையாது. ஜாதி இல்லாத தமிழ்நாட்டில் அதை புகுத்தியது திராவிடம்தான். ஜாதி பத்தி பேச வேண்டிய அவசியமே கிடையாது. பிராமண எதிர்ப்புதான், இந்து எதிர்ப்புதான் ஜாதி எதிர்ப்பாக உருவாகியது. ஜாதி எதிர்ப்புக் கட்சிக்கு இங்கு அவசியமே கிடையாது. இது உருவாகியதற்கு முழு பொறுப்பு திராவிட இயக்கம்தான். திராவிட இயக்கத்தின் வசீகரம் குறைந்தால், ஜாதி அரசியல் குறையும்" என கூறினார்.

துக்ளக் பத்திரிகையின் இந்த ஆண்டு விழாவில், பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அமைச்சர் ஜெயக்குமார் எதிர்வினை: இந்த நிலையில், குருமூர்த்தியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்திககு தான் ஒரு கிங் மேக்கர், சாணக்கியர் என்ற நினைப்புள்ளதாகவும், அந்த மாயையுடன் இல்லாத ஒன்றை அவர் பேசுவது அறிவிலியின் தன்மை என்றும் கூறியிருக்கிறார்.

டிடி.வி. தினகரனிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு இவ்வாறு குருமூர்த்தி பேசுவதாக தான் நினைப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: