அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேறியது: பதவி நீக்கம் இருக்குமா?

பட மூலாதாரம், Drew Angerer/Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது அந்நாட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டமான கேபிடலில் வன்முறையில் ஈடுபடும்படி தமது ஆதரவாளர்களைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கண்டனத் தீர்மானத்துக்கு ஆதரவாக 232 வாக்குகளும், எதிராக 197 வாக்குகளும் கிடைத்தன.
பதவிக்காலம் முடியும் முன்பாக பதவி நீக்கப்படுவாரா?
பல மணி நேரம் நடந்த கடுமையான விவாதங்களுக்குப் பிறகு இந்த கண்டனத் தீர்மானம நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வின்போது அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் 'நேஷனல் கார்டு ட்ரூப்ஸ்' என்ற தேசிய பாதுகாப்புத் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அமெரிக்க வரலாற்றிலேயே தமக்கு எதிராக இரண்டாவது முறை கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் முதல் அதிபர் டொனால்டு டிரம்ப்தான். இதுவரை மூன்று அதிபர்களுக்கு எதிராகத்தான் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கண்டனத் தீர்மானம் பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ள நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் செனட் அவையில் விசாரணை நடக்கும். அங்கே அந்தக் குற்றச்சாட்டுகள் ஏற்கப்பட்டால் மீண்டும் அவர் அதிபர் பதவிக்கு வருவதற்குத் தடை விதிக்கப்படும்.
ஆனால், ஜனவரி 20ம் தேதி அவர் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக அவர் பதவி நீக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. காரணம், அதற்கு முன்பாக மீண்டும் செனட் கூடாது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப் தோல்வி அடைந்து, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
அடுத்த வாரம் ஜோ பைடன் அதிபராகப் பதவி ஏற்பதற்கு முன்பாக, தலைநகர் வாஷிங்டன் டிசியிலும், 50 மாநிலத் தலைநரங்களிலும் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கக் கூட்டரசு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. எச்சரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு வெளியிட்ட ஒரு விடியோவில் டிரம்ப் தமது ஆதரவாளர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், தம் மீது நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானம் குறித்து அவர் அந்த விடியோவில் எங்கும் அவர் குறிப்பிடவில்லை. "வன்முறைக்கும் அட்டூழியத்துக்கும் நமது நாட்டில் இடமில்லை.... என்னுடைய உண்மையான ஆதரவாளர்கள் எவரும் அரசியல் வன்முறையை கையில் எடுக்க மாட்டார்கள்" என்று கூறி உருக்கமாகப் பேசினார் அவர்.
டிரம்ப் மீது என்ன குற்றச்சாட்டு?
கண்டனத் தீர்மானம் முன்வைக்கும் புகார்கள் அரசியல்ரீதியிலானவை. குற்றவியல் ரீதியிலானவை அல்ல.

பட மூலாதாரம், Getty Images
அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு முன்பாக ஜனவரி 6-ம் தேதி கூடிய கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், கேபிடல் கட்டடத்தில் நுழையும்படி ஆதரவாளர்களைத் தூண்டினார் என்பதுதான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டனத்தீர்மானம் முன்வைக்கும் குற்றச்சாட்டு.
அந்த உரையில் தமது ஆதரவாளர்களிடம் "அமைதியாகவும், நாட்டுப்பற்றோடும்" தங்கள் குரலை கேட்கும்படி செய்யவேண்டும் என்று அவர் கூறினார். ஆனால், அதை மட்டும் கூறவில்லை. திருடப்பட்ட தேர்தல் என்று அவர் சுமத்திவரும் பொய்யான குற்றச்சாட்டை மீண்டும் வைத்த அவர், அந்த தேர்தலுக்கு எதிராக 'நரகம் போல சண்டையிடுங்கள்' என்று நேரடிப் பொருள்தரும் 'fight like hell' என்ற தொடரையும் பயன்படுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தப் பேச்சுக்குப் பிறகு, அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து அதிபர் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து சான்றளிக்கும் நடைமுறைக்கு குந்தகம் விளைவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்புக்காக ஓடும் நிலையை ஏற்படுத்தினர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
"அதிபர் தேர்தல் முடிவுகள் மோசடியானவை என்றும், அவற்றை ஏற்கக்கூடாது என்றும் மீண்டும் மீண்டும் அவர் பொய்யான அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருந்தார் என்று கண்டனத் தீர்மானத்தின் பிரிவு" ஒன்று கூறுகிறது.
"அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், அதன் அரசாங்க நிறுவனங்களுக்கும் மோசமான ஆபத்தை ஏற்படுத்தினார் அதிபர் டிரம்ப், ஜனநாயக அமைப்பின் மீதான நம்பிக்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினார், அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நடப்பதில் தலையிட்டார்" என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் இந்த கண்டனத் தீர்மானத்தில் இடம் பெற்றிருந்தன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








