அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய இருவர் கைது

பொங்கல் விழாவை ஒட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி நடக்கும் இடத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கருப்புக் கொடி காட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் போட்டியைக் காண காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வந்திருந்தனர்.
430 மாடுபிடி வீரர்களும், 788 காளைகளும் பங்கேற்ற இந்தப் போட்டியில் 4ம் சுற்று முடியும் வரை 24 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுவை முதல்வர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரும் வந்துள்ளனர்.
ராகுல், உதயநிதி பரிசுகள்

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சார்பில் 2 மோட்டார் பைக்குகளும், உதயநிதி ஸ்டாலின் சார்பில் 10 தங்கக் காசுகளும் போட்டியில் வெல்லும் வீரர்களுக்காக வழங்கப்பட்டது.
இந்த விழாவை ஒட்டி கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எனினும், இதை மீறி, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று முழக்கமிட்டபடியே கருப்புக் கொடி காட்டிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா: கடும் கட்டுப்பாடுகள்
இந்த ஆண்டு ஜல்லிக் கட்டுப் போட்டிகள், கொரோனா உலகத் தொற்று நிலவுவதை கருத்தில் கொண்டு கடும் கட்டுப்பாடுகளோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்தே அனுமதித்தனர்.
போட்டியில் கலந்துகொள்ள கூடிய காளைகளின் உரிமையாளர் அனுமதி சீட்டுடன் ஒரே நபர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறைந்தளவு பார்வையாளர்களே அனுமதிக்ககப்படுகின்றனர்.
காளை வெளியேறும் வாடிவாசலுக்கு முன்பாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பாக தென்னை நார்கள் பரப்பிவிடப்பட்டுள்ளன.
போட்டி நடைபெறும் பகுதியில் இருபுறமும் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டியின் போது மாடுபிடிவீரர்கள் முக கவசம் அணியவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போட்டி முழுவதும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெறுவதால் கிராமம் சார்ந்த காளைகளுக்கு மரியாதை போன்றவையோ, அரசியல் கட்சியினர் தொடர்பான விளம்பரங்களோ, அறிவிப்புகளோ அனுமதிக்கப்படவில்லை.

அவசரகால மருத்துவ தேவைக்காக 10 மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
போட்டியின் முடிவில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளை உரிமையாளருக்கு பைக் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர் ,குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது.

ஒவ்வொரு சுற்றிலும் தலா 50க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












