திறன்பேசியால் பாதை மாறும் சிறார்கள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கடந்த வாரம் வேளாங்கண்ணி அருகே ஆதரவற்ற நிலையில் இருந்த ஒரு சிறுமியை பொதுமக்கள் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கோவையில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி, ஃபேஸ்புக் மூலம் நட்பான நபரை பார்ப்பதற்காக வேளாங்கண்ணிக்கு வந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. அவர் மட்டுமின்றி வேளாங்கண்ணிக்கு அழைத்துச் செல்வதற்காக வந்த டாக்சி ஓட்டுநர் அச்சிறுமியை ஊட்டிக்கு கடத்திச் சென்று மூன்று நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது.

இதேபோன்று, திருச்சியில் இருந்து கடத்தி வரப்பட்ட சிறுமி, மேட்டுப்பாளையத்தில் சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்டார். நண்பர்களோடு ஆன்லைன் வகுப்புக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு அவர் வீட்டைவிட்டு வெளியேறியது விசாரணையில் தெரியவந்தது. பக்குவமில்லாத வயதில் ஸ்மார்ட்போன்கள் கையில் கிடைப்பதன் விளைவாகவே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக கருதப்படுகிறது.

கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காக குழந்தைகளுக்கு பெற்றோர் வாங்கித் தரும் ஸ்மார்ட்போன்கள், அவர்களின் எதிர்காலத்துக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கண்காணிப்பதில் பெரும் சிரமங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் பெற்றோர்கள்.

"எனது மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி படிப்பு முடியும் வரை அவருக்கு ஸ்மார்ட்போன் வாங்கித்தரக் கூடாது என முடிவு செய்திருந்தேன். ஆனால், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்புகளுக்காக இணைய வசதியோடு புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இப்போது வாங்கி கொடுத்துள்ளேன். பொதுமுடக்க காலத்தில் கல்விக்காக மட்டுமே குழந்தைகள் கையில் ஸ்மார்ட்போன் கொடுத்தாலும், அது வயதுக்கு மீறிய விஷயங்களை அவர்கள் தெரிந்துகொள்ள வழிவகுக்கிறது. குறிப்பாக, இணையத்தில் தோன்றும் விளம்பரங்கள் அவர்களின் கவனத்தை திசைத் திருப்பும் வகையில் உள்ளன. இது, குழந்தைகளின் பழக்கவழக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது" என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த இல்லத்தரசி ரத்தினம்.

"ஆன்லைன் வகுப்புகளுக்காக மாணவர்கள் பெயரில் மின்னஞ்சல் உருவாக்க வேண்டியுள்ளது. பதினெட்டு வயதுக்கு மேல் இருந்தால் மட்டுமே மின்னஞ்சல் முகவரி பெற முடியும். பத்து வயதாக இருந்தாலும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர் என பொய்யான வயதை பதிவு செய்து தான் மின்னஞ்சல் உருவாக்கப்படுகிறது. மாணவர்களின் பெயரில் தான் மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும் என ஆசிரியர்களும் வலியுறுத்துகின்றனர். இதனால், ஆபாச விளம்பரங்கள் உட்பட அனைத்தும் கட்டுப்பாடின்றி திரையில் தோன்றுகின்றன. குறிப்பாக, குரல் தேடலில் தப்பான உச்சரிப்புகள் இருந்தால் கூட தேவையற்ற தகவல்கள் வந்து குவிந்து விடுகின்றன. காலை 8.30 மணி முதல் மாலை வரை ஒரு மணி நேர இடைவேளையில் அடுத்தடுத்து வகுப்புக்குள் நடத்தப்படுகின்றன. இதனால் குறிப்பிட்ட நேரம் மட்டும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க முடிவதில்லை. நாள் முழுவதும் அவர்கள் பக்கத்திலே இருந்து ஆன்லைன் வகுப்புகளில் மட்டுமே இருக்கிறார்களா என கண்காணிப்பதும் சாத்தியமில்லாதது" என்கிறார் இவர்.

கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு தனது மகன் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே செல்போன் பயன்படுத்தி வந்த நிலையில், இப்போது சுமார் 8 மணி நேரம் செல்போன் பயன்படுத்துவதாக தெரிவிக்கிறார் ஜவுளித்துறையில் பணியாற்றி வரும் ஈரோட்டைச் சேர்ந்த ரமேஷ்.

"ஊரடங்கு காலத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பவே பயமாக இருந்தது. அதனால், தொலைக்காட்சியிலும், செல்போனிலும் குழந்தைகள் அதிக நேரம் செலவழிக்க தொடங்கினர். எனது மகன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்புக்காக சில மணி நேரம் மட்டுமே செல்போனை பயன்படுத்தினாலும், ஆன்லைன் விளையாட்டுக்காக தான் அதிக நேரம் செலவழிக்கிறார். இவ்வாறு, மணிக்கணக்கில் செல்போனை மட்டுமே பயன்படுத்துவதால் அவர்களின் பழக்கங்களிலும் சில மாறுதல் ஏற்படுகிறது. குறிப்பாக, பெற்றோர்களிடமே அதிகமாக கோபப்படுகின்றனர். கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு நண்பர்கள் அருகில் இல்லாததால் தான் செல்போன் பயன்பாடும் அதிகரித்துள்ளது என நான் கருதுகிறேன். எனவே, கொரோனா அச்சம் நீங்கிய பின்னர் குழந்தைகளை வெளியில் கூட்டிச் சென்று மீண்டும் நண்பர்களோடு பழக வைத்து, மைதானத்தில் விளையாட வைக்கவேண்டும்" என்கிறார் இவர்.

பெண் குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதும், சமூக வலைதளங்களின் திடீர் அறிமுகமும் பெற்றோர்கள் மத்தியில் பயத்தை உருவாக்கி வருவதாக கூறுகிறார் கோவையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ.

"எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் ஆன்லைன் வகுப்புகளுக்காக தனித்தனி ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளேன். ஆன்லைன் வகுப்புகள் மட்டுமின்றி பாடங்கள் குறித்த கூடுதல் தகவல்களை பெறவும் அவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கட்டத்தில் சமூகவலைதளங்களில் ஆர்வம் அதிகமாகி அதில் மட்டுமே அதிக நேரம் செலவழிக்கின்றனர். இதனால், குழந்தைகளின் கவனிப்புத் திறனும், கற்றல் திறனும் பாதிப்படைகிறது."

"பலதரப்பட்ட தகவகல்களையும் சிறிய வயதிலேயே தெரிந்து கொள்வதால் பழக்கவழக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. உதாரணமாக, மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு அதைப்போன்ற ஆடைகளை விரும்பி அணிகின்றனர். மேலும், ஆசிரியர்களிடமும், சக நண்பர்களிடமும் நேரடி தொடர்பில் இல்லாததால் அவர்களுக்கான பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்துகொள்ளவும் முடிவதில்லை. பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கும் தயங்குகிறார்கள். ஆகவே, இந்த பொதுமுடக்க சூழல் குழந்தைகளின் தொழிநுட்ப அறிவை வளர்த்துள்ள போதும், அவர்களை சமூகத்திலிருந்து தனியாக பிரித்து வைத்துள்ளது என்பது தான் உண்மை" என்கிறார் இவர்.

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளை கண்காணிப்பதற்கு தகவல் தொழில்நுட்பம் குறித்த அறிவை பெற்றோர்கள் வளர்த்துக்கொள்வது இன்றைய சூழலில் அவசியம் என்கிறார் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் மூர்த்தி கனகராஜ்.

"கணினியில் எப்படி தனித்தனி அக்கவுண்டுகள் உருவாக்குகிறோமோ அதேபோல் செல்போனிலும் பொதுப்பயன்பாடு மற்றும் குழந்தைகள் பயன்பாடு என இரு ப்ரொஃபைல்களை உருவாக்கி, பயன்பாட்டில் சில கட்டுப்பாடுகளை உருவாக்கி வைக்க வேண்டும். புதிதாக வரும் செல்போன்களில் 'கிட்ஸ் மோட்' என்ற வசதி சேர்க்கப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கு தேவையான அம்சங்கள் மட்டுமே இருக்கும். இந்த வசதி கொண்ட செல்போனை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பது சிறந்தது"

"மேலும், புதிய செயலிகள் தரவிறக்கம் செய்வதை தடுக்க ப்ளேஸ்டோரில், 'பேரண்டல் கன்ட்ரோல் செட்டிங்' வசதியை பயன்படுத்தலாம். இதே வசதி கூகுள், மொசில்லா போன்ற தேடுதல் தளங்களிலும் உள்ளன. அவற்றை தேர்வு செய்து பதிவிறக்க வசதியை கட்டுப்படுத்தலாம். இவை மட்டுமின்றி செல்போனின் செயல்பாடுகளை கண்காணிக்க 'ஆக்டிவிட்டி மானிட்டரிங்' செயலிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தியும், 'கிட்ஸ் லாக்' வகை செயலிகளை பயன்படுத்தியும் குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை கண்காணிக்கலாம்" என்கிறார் மூர்த்தி கனகராஜ்.

செல்போன் தொடர்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், கொரோனா காலத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறார் குழந்தைகள் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவர் தினேஷ் பெரியசாமி

"சமூக வலைதள செயலிகள் உள்ள செல்போனை ஆன்லைன் வகுப்புகளுக்காக கொடுத்துவிட்டு குழந்தைகள் மீது பெற்றோர்கள் குறைகூறுவதை ஏற்கமுடியாது. எனவே, ஆன்லைன் வகுப்புக்காக கணினி அல்லது லேப்டாப்பை வழங்குவது தான் நல்லது. செல்போன் பயன்பாட்டில் தனிமனித சுதந்திரம் அதிகமாக இருக்கும். எத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் கண்காணிப்பு என்பது சாத்தியமில்லாதது. எனவே, மாறி வரும் கலாசாரத்தில் தான் குழந்தைகள் வாழ்கிறார்கள் என்பதை உணர்ந்து எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை பெற்றோர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். அதேநேரத்தில் 'இதை நீ செய்தால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது' என்பதை பெற்றோர்கள் தெளிவாக தங்களின் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்."

"குழந்தைகள் தவறு செய்தால், அவர்கள் மீது குற்றம் சுமத்தாமல், வாக்குவாதம் செய்யாமல், அனைவரும் சமம் என்ற மனநிலையோடு அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும். 'அவன் எனக்கு மெசேஜ் செய்கிறான்' என குழந்தை சொன்னால், 'நீ பேசியதால் தான் அவன் பேசுகிறான்' என அவரை திட்டக் கூடாது. அவருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி உறுதுணையாக இருக்க வேண்டும்"

"பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே வெளிப்பைடையான கலந்துரையாடல் தான் இன்றைய தேவையாக உள்ளது. மேலும், குழந்தைகளுக்கு சொல்லும் அறிவுரைகளின்படி பெற்றோர்களும் இருக்க வேண்டும். வீட்டில் பெற்றோர்கள் சண்டையிட்டு கொண்டேயிருந்தால், குழந்தைகள் அன்பை வெளியில் தேடிச் சென்றுவிடுவர். எனவே, குழந்தைகள் மீது நம்பிக்கை வைத்து அன்பை பகிர்வதும், வெளிப்படையாக பேசுவதும் தான் அவர்களுக்கு பெற்றோர்கள் வழங்கும் பாதுகாப்பு" என்கிறார் மருத்துவர். தினேஷ் பெரியசாமி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: