You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பி.எஸ். ஞானதேசிகன் காலமானார் - மூப்பனார், ஜி.கே. வாசனுக்கு பக்க பலமாக இருந்தவர்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த பி.எஸ். ஞானதேசிகன் காலமானார். அவருக்கு வயது 71.
கடந்த நவம்பர் 11ஆம் தேதி நெஞ்சு வலியின் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவருடைய இதயத் துடிப்பு குறைந்து வந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று அவர் காலமானார். அவர் ஏற்கெனவே மாரடைப்பின் காரணமாக, பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.
சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏவும் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்ற ஞானதேசிகன், வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். பிறகு அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1996இல் காங்கிரசில் இருந்து பிரிந்து ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் தனி கட்சியைத் தொடங்கியபோது அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளராக ஞானதேசிகன் செயல்பட்டு வந்தார். 2001லும் 2007லும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டார்.
2011லிருந்து 2014வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகச் செயல்பட்டார். பிறகு சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக 2014 அக்டோபரில் அவரே தனது பதவியை ராஜினாமா செய்தாார்.
இதன் பிறகு ஜி.கே. வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது அதில் இணைந்து, அக்கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்தார். ஜி.கே. மூப்பனார் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டவராக அறியப்பட்ட ஞானதேசிகன், மூப்பனாரின் மறைவுக்கு பிறகு ஜி.கே. வாசனுக்கு நெருக்கமானவராகவும் அவரது நம்பிக்கைக்குரியவராகவும் விளங்கி வந்தார்.
பிஎஸ். ஞானதேசிகனுக்கு திலகவதி என்ற மனைவியும் விஜய், பிரசாந்த் என இரு மகன்களும் இருக்கிறார்கள்.
த.மா.கா மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு: ஞானதேசிகன் மறைவு காரணமாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனிசரிக்கப்படும் என்றும் தமிழ்நாடு முழுவதும் தமாகா கட்சிக் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
ஞானதேசிகனின் உடல் சென்னை பெசன்ட் நகர் இடுகாட்டில் சனிக்கிழமை தகனம் செய்யப்படவுள்ளது.
தலைவர்கள் இரங்கல்: ஞானதேசிகனின் மறைவு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "இந்திய, தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய அவர் நம் நெஞ்சங்களில் என்றும் நீங்கா இடம் கொண்டவர்," என்று குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- இந்தோனீசியா சூலவேசி தீவில் 6.2 அளவில் நில நடுக்கம்: 34 பேர் பலி, சுனாமி ஏற்படுமா?
- Ind Vs Aus 4வது டெஸ்ட்: களமிறங்கிய தமிழ்நாடு வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர்
- “கொரோனா தொற்று மாதக்கணக்கில் நோய் எதிர்ப்பு திறனை வழங்கலாம்”
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறந்த வீரர்களாக இருவர் தேர்வு, ஒரு காளை உயிரிழப்பு
- அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேறியது: பதவி நீக்கம் இருக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: