You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Ind Vs Aus 4வது டெஸ்ட்: இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நடராஜன் அதிரடி
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 15) காலை இந்திய நேரப்படி ஐந்து மணிக்கு, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் மைதானத்தில் நடந்து வருகிறது.
தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் நடராஜன் இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அதிரடியைத் தொடர்ந்து வருகிறார்.
இந்தப் போட்டியில் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் இன்னொரு தமிழ்நாடு வீரரான வாஷிங்டன் சுந்தரும் தனது முதல் சர்வதேச டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
இதற்கு முன்பு நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்றிருக்கிறது. மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது. எனவே இந்த நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, தொடரை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்திருக்கிறது.
தொடரும் நடராஜ தாண்டவம்
ஐபிஎல் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த தமிழ்நாடு வீரர் நடராஜன் இந்திய அணியின் இந்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் நெட் பௌலராகவே தேர்வானார்.
அதாவது இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் பயிற்சி அளிக்க பந்து வீசும் பணி அது.
ஆனால், வீரர்கள் தொடர் காயம் காரணமாக, அதிருஷ்டவசமாக சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்று தனது அதிரடி பௌலிங்கால் போட்டிகளை வெல்லும் பௌலராக அடையாளம் காணப்பட்டு பெருமை பெற்றார்.
இதையடுத்து டிவென்டி 20 போட்டியிலும் மிளிர்ந்த அவர், மீண்டும் டெஸ்ட் போட்டியில் நெட் பௌலராகத் தொடர்ந்தார். ஆனால், மீண்டும் அணி வீரர்களின் காயம் காரணமாக விளையாட வாய்ப்பு கிடைத்து, நான்காவது டெஸ்ட் போட்டியில் தனது சர்வதேச டெஸ்ட் பயணத்தைத் தொடங்கினார் நடராஜன். முதல் போட்டியிலேயே அவரது பௌலிங் அனல் கக்குகிறது.
தொடக்கத்திலேயே விக்கெட்
இந்த ஆட்டத்தில் முதல் ஓவரை வீசிய மொஹம்மத் சிராஜ், ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னரை தன் ஆறாவது பந்தில் பெவிலியனுக்கு அனுப்பினார்.
ஒன்பதாவது ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூர், மார்கஸ் ஹாரிஸின் விக்கெட்டை சொற்ப ரன்களில் வீழ்த்தினார்.
வாஷிங்டன் சுந்தருக்கு முதல் விக்கெட்
ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் 35-வது ஓவரில் வீழ்த்தி மார்னஸ் ஸ்மித் இணையை உடைத்தார்.
பிறகு மார்னஸ் மற்றும் மேத்யூ வேட் களத்தில் விளையாடி வந்தனர்.
வலுவான பேட்ஸ்மென்களை சோதிக்கும் விதத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர்.
முக்கிய ஜோடியை அவுட் ஆக்கிய நடராஜன்
மார்னஸ் - ஸ்மித் இணைக்குப் பிறகு, மார்னஸ் உடன் கை கோர்த்து நிதானமாக விளையாடி வந்த மேத்யூ வேடின் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்.
இன்றைய இன்னிங்ஸில் இதுவரையான ஆட்டத்தில் மேத்யூ வேட் - மார்னஸ் இணை தான் அதிகபட்சமாக 179 பந்துகளை எதிர்கொண்டு 113 ரன்களை எடுத்தது.
நடராஜன் வீசிய 64-வது ஓவரில் மேத்யு வேட் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். வேட் 87 பந்துகளுக்கு 45 ரன்களை எடுத்தார்.
இந்த இன்னிங்ஸில், இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த மார்னஸின் விக்கெட்டையும் நடராஜன் வீழ்த்தியிருக்கிறார். 204 பந்துகளில் 108 ரன்களை அடித்த மார்னஸ், நடராஜன் வீசிய 66-வது ஓவரில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
இதுவரை நடராஜன் 14 ஓவர்கள் வீசி 2 ஓவர்களை மெய்டன் செய்து, 33 ரன்களை விட்டுக் கொடுத்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா 67 ஓவர் முடிவில் 213 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. கெமரூன் க்ரீன் & டிம் பெயின் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கேப்டன் அஜிங்க்யா ரஹானே
அஜிங்க்யா ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. கடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா டிரா செய்ய பெரிதும் உதவிய அஸ்வின், ஹனும விஹாரி, முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, முக்கிய யார்கர் ஜஸ்ப்ரித் பும்ரா என பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இந்த நான்காவது டெஸ்டில் பங்கெடுக்கவில்லை.
அஸ்வின், ஜடேஜா, பும்ராவுக்கு மாற்றாக ஷர்துல் தாக்கூர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை களமிறக்கியிருக்கிறது இந்தியா. கடந்த டெஸ்டில் விளையாடிய மொஹம்மத் சிராஜ் இந்த டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கியிருக்கிறார்.
பிற செய்திகள்:
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறந்த வீரர்களாக இருவர் தேர்வு, ஒரு காளை உயிரிழப்பு
- ராகுல் காந்தி: "தமிழ் கலாசாரம், உணர்வை மோதி அரசால் அழிக்க முடியாது"
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 2 பேர் கைது
- அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேறியது: பதவி நீக்கம் இருக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: