You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து: "தமிழ் வரலாற்றை அறிய ஊக்குவிப்பேன்"
பொங்கல் திருநாளையொட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விடுத்துள்ள பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில், தமிழ் வரலாறு, அதன் தாங்கும் திறன் மற்றும் வலிமையை அறிய சக கனடியர்களை ஊக்குவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டில் பெருமளவில் இந்திய சமூகத்தினர் வாழ்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சீக்கியர்கள் மற்றும் தமிழ் சமூகத்தினர். அங்கு வாழும் தமிழ் சமூகத்தினர் இந்தியா மட்டுமின்றி இலங்கை வம்சாவளி தமிழர்களாகவும் உள்ளனர்.
அந்த நாட்டில் பன்முக கலாசாரத்தை போற்றும் வகையில் அவற்றின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. வழக்கமாக அந்தந்த கலாசார நிகழ்வுகளின்போது அந்த சமூகத்தினரின் பாரம்பரிய ஆடையில் தோன்றி நிகழ்ச்சியை கொண்டாடுவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக, பொது நிகழ்ச்சிகளை தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ இந்த ஆண்டு பொங்கல் தின வாழ்த்துகளை வெளியிட்டிருக்கிறார்.
அதில், "இந்த வாரம், கனடாவிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகம், தை பொங்கலைக் கொண்டாடுகிறது," என்று அவர் கூறியிருக்கிறார்.
"நான்கு நாள் திருவிழாவின் போது, குடும்பத்தினரும் நண்பர்களும் வழக்கமாக ஆண்டின் சிறந்த அறுவடைக்கு நன்றி செலுத்துவதோடு, ஒரு இனிமையான அரிசி பொங்கலைப் பகிர்ந்து கொள்கிறார்கள். COVID-19 பரவலைத் தடுக்க பொது சுகாதார வழிகாட்டுதல்களை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவதால் இந்த ஆண்டு விஷயங்கள் வித்தியாசமாக இருக்கும். இந்த விழாவின் மையமாக அமைதி மற்றும் சமூக மதிப்புகளை உயிர்ப்பிக்க மக்கள் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும்."
"கனடாவில் ஜனவரி மாதம், தமிழ் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் சிறந்த மற்றும் மேலதிக உள்ளடக்கமாக நாட்டை கட்டியெழுப்ப தமிழ் கனடியர்கள் வழங்கும் பங்களிப்பை நாங்கள் அங்கீகரிக்கிறோம். கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள துடிப்பான தமிழ் சமூகத்தின் வரலாறு, தாங்கும் சக்தி மற்றும் வலிமை பற்றி மேலும் அறிய அனைத்து கனடியர்களையும் நான் ஊக்குவிக்கிறேன். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டதை கண்டித்தும், அதை மீண்டும் நிலைநாட்ட வலியுறுத்தியும் சமீபத்தில் எல்லா தமிழ்-கனடியர்களும் ஒன்றுபட்டதை பார்த்தோம். அந்த நினைவுச்சின்னம் நல்லிணக்கத்துக்கான அவசியம் என்ற நினைவூட்டலாகும்.
"எங்கள் குடும்பத்தின் சார்பாக, சோபியும் நானும் இங்கே கனடாவிலும் உலக அளவிலும் தைப்பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியம் ஏற்பட எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
"இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்," என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.
பிற செய்திகள்:
- இந்தோனீசியா சூலவேசி தீவில் 6.2 அளவில் நில நடுக்கம்: 34 பேர் பலி, சுனாமி ஏற்படுமா?
- Ind Vs Aus 4வது டெஸ்ட்: களமிறங்கிய தமிழ்நாடு வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர்
- “கொரோனா தொற்று மாதக்கணக்கில் நோய் எதிர்ப்பு திறனை வழங்கலாம்”
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறந்த வீரர்களாக இருவர் தேர்வு, ஒரு காளை உயிரிழப்பு
- அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேறியது: பதவி நீக்கம் இருக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: