பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தொடரும் கைதும் பின்னணியும்

பொள்ளாச்சி பாலியல்
    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு.

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளி ஆக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது. அவர்கள் பொள்ளாச்சியைச் சேர்ந்த சில இளைஞர்களாக அறியப்படுகிறது.

இவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது சகோதரரிடம் அது பற்றி கூறவே, தங்கையை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த அவரது சகோதரர் அவர்களை விசாரித்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர்கள் வைத்திருந்த செல்போன்களில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் காணொளிகள் இருந்துள்ளன.

இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டவுடன் திருநாவுக்கரசு, சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடையதாக கருதப்படும் மணிவண்ணன் என்பவரை காவல்துறையினர் தேடி வந்த வேளையில், அடுத்த சில வாரங்களிலேயே அந்த நபர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்படும் காணொளிகள், பொதுமக்கள் மத்தியில் பரவி வந்த நிலையில், இதில் அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளும் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பின்னர் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்ட வேளையில், சிபிஐ விசாரணை கொரோனா பொதுமுடக்க காலத்தில் தீவிரம் அடைந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சமீபத்தில் சிபிஐ வசம் சில காணொளி ஆதாரங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தங்களின் வாக்குமூலத்தின்போது தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஐந்து நபர்கள் மட்டுமின்றி மேலும் சிலரின் பெயரை பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து பொள்ளாச்சியைச் சேர்ந்த ஹேரேன்பால், பாபு, அருளானந்தம் ஆகியோரை சிபிஐ கண்காணித்து வந்தது.

பொள்ளாச்சி பாலியல்

நீதிமன்றத்தில் ஆஜர்

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் ஹேரேன்பால், பாபு, அருளானந்தம் ஆகியோரை பொள்ளாச்சியில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

முதல்கட்ட விசாரணைகளுக்கு பிறகு புதன்கிழமை காலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் சுமார் 10 மணி அளவில் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட மூவரும் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்டனர்.

காலை 11 மணி அளவில் நீதிபதி நந்தினி தேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட மூவரிடமும் சில கேள்விகள் கேட்கப்பட்டன. "உங்களை எதற்காக சிபிஐ கைது செய்துள்ளனர் என தெரியுமா?" என நீதிபதி கேட்க மூவரும் அமைதியாக நின்றனர். "காரில் கடத்திச் சென்று ரிஷ்வந்த் வீட்டில் வைத்து நீங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்" என நீதிபதி குறிப்பிட்டார். பிறகு, ஜனவரி 20ஆம் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி பாலியல்

மகளிர் அமைப்புகள் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஈடுபட்ட மேலும் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தகவல் வந்ததும் ஏராளமான பெண்கள் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு கூடினர்.

திமுக மகளிரணி மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் நீதிமன்ற வாசலில் ஒன்றுகூடி அதிமுகவுக்கு எதிராகவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

அடுத்த சில நிமிடங்களில் நீதிமன்ற வளாகத்தின் மற்றொரு வாசல் வழியாக கைது செய்யப்பட்ட மூவரும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

யார் இந்த அருளானந்தம்?'

அருளானந்தம் குறித்து பொள்ளாச்சியில் விசாரித்தபோது மிகக் குறைந்த காலகட்டத்தில் அரசியல் செல்வாக்கு மிக்க கட்சி நிர்வாகியாக இளம் வயதில் உருவெடுத்தவர் என அவரை அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. ஆனைமலை சாலையில் உள்ள குஞ்சம்பாளையத்தில் டாஸ்மாக் மதுபான கடை நடத்தி வரும் இவர், ஃபைனான்ஸ் கம்பெனியும் நடத்தி வருவதாக தெரிய வருகிறது.

இவரது வீட்டிற்கு அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் சிலர் வந்து சென்றதாகவும் நம்பத்தகுந்த நபர்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அருளானந்தத்தோடு கைது செய்யப்பட்டுள்ள ஹேரேன்பால் மற்றும் பாபுவும் அதிமுகவின் ஆதரவாளர்களாக இருந்து வந்துள்ளனர். கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனர்களில் இவர்கள் மூவரின் படங்களும் இடம் பெற்றிருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் குரல்களை ஆய்வு செய்ய சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்தது. இந்த நிலையில் மேலும் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்களின் வாக்குமூலங்கள், முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் சிபிஐயின் விசாரணை தீவிரம் அடையும் எனவும், பெள்ளாச்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் நிர்வாகிகளின் வாரிசுகள் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளிவருகின்றன. எனவே இந்த வழக்கு மீதான மக்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :