பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு: மேலும் மூவர் கைது, அதிமுக-வில் இருந்து ஒருவர் நீக்கம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிதாக கைது செய்யப்பட்டவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான அருளானந்தம்
படக்குறிப்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிதாக கைது செய்யப்பட்டவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான அருளானந்தம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாசியை சேர்ந்த மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள் மூவரையும் ஜனவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, காணொளி எடுத்து பணம் பறித்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

இதனையடுத்து சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றச்சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மணிவண்ணன் என்பவரும் சரணடைந்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால், ஒரு வருடத்திற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் இருக்கும் நிலை உருவானது.

இந்த நிலையில், திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனின் பெற்றோர்கள், குண்டர் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இதனையடுத்து இருவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு

அதேநேரத்தில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி இடமிருந்து சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில், பொள்ளாச்சியை சேர்ந்த ஹேரேன் பால் (29 ), பாபு (எ) பைக் பாபு (27) மற்றும் அருளானந்தம் (34 ) ஆகியோர் சிபிஐ போலீசாரால் செவ்வாய்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அருளானந்தம் என்பவர் அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணியை சேர்ந்தவர் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக அ.தி.மு.க, அரசு சீரழித்துள்ளதாகவும், அதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் பொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள் என்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை ஆளும் அதிமுக அரசுடன் நேரடியாக தொடர்புபடுத்தி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "'அண்ணா அடிக்காதீங்கண்ணா ...' என்று கதறிய குரல் இன்னமும் இதயத்தைக் கிழிக்கிறது. முழுக்க முழுக்க அ.தி.மு.க மேலிடத்தின் ஆதரவுடன், அ.தி.மு.க., வில் தொடர்புடையவர்களால் இந்தப் பாலியல் கொடூரம் நிகழ்த்தப்பட்டது. சம்பந்தப்பட்டுள்ள ஆளுந்தரப்பினரைக் காப்பாற்றுவதற்கு எல்லா வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர்கள் - அ.தி.மு.க.,வினருடன் தொடர்புடைய பார் நாகராஜனைக் காப்பாற்ற அமைச்சர் தொடங்கி காவல்துறை வரை முயன்றனர். ஜாமீன் வழங்கி மாவட்ட ஆட்சியரே சந்தித்துப் பேசினார்" என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு

பட மூலாதாரம், Getty Images

மேலும், தற்போது சி.பி.ஐயால் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரில் அருளானந்தம் என்பவர் பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளர் என்றும் அவர் நகரச் செயலாளர் கிருஷ்ணகுமாரின் நிழல், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனால் வளர்க்கப்பட்டவர் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

"பிடிபட்டவர்களுக்கு உடனடி ஜாமீன் கிடைப்பதற்கு வழி வகுத்துவிடக்கூடாது. சி.பி.ஐ. விரைந்து விசாரணை நடத்தி, அ.தி.மு.க., வின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்து தண்டிக்கப்பட்டு, தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கம்

இந்த நிலையில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளர் பதவியிலியிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கே. அருளானந்தம் நீக்கி வைக்கப்படுவதாக அதிமுகவின் தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், அவர் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாகவும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அதிமுகவை சேர்ந்தவர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :