தமிழகத்தில் மீண்டும் புயல் வருமா?: கடலோர மாவட்டங்களுக்கு மீண்டும் கன மழை எச்சரிக்கை

புயல் எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images

(உலக, இந்திய மற்றும் தமிழக அளவிலான முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பக்கத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.)

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதால் டிசம்பர் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதிவரை தன் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு - தென்கிழக்கு திசையில் 710 கி.மீ. தூரத்திலும் கன்னியாகுமரிக்கு கிழக்கு - தென்கிழக்கு திசையில் 1,120 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுவதோடு, அதற்கடுத்து 24 மணி நேரத்தில் புயலாக மாறுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, டிசம்பர் 2ஆம் தேதியன்று தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி - மின்னலுடன் கூடிய அதி கன மழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி - மின்னலுடன் கூடிய கனமழையோ, மிக கன மழையோ பெய்யக்கூடும் என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இந்தப் புயலின் காரணமாக, செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளில் தென் தமிழகத்திலும் தமிழக, புதுச்சேரி கடலோரப் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அவ்வப்போது லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

"ஊழல்" அரசு ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்கு - அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

நீதிபதி கருத்து ஊழல்

பட மூலாதாரம், Getty Images

ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் முறைகேடாக சேர்த்த சொத்துகள் மட்டுமின்றி அவர்களின் ஒட்டுமொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அரசின் சார்பில் தனக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவின் இடத்தில் இருந்து தன்னை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்ய உத்தரவிடுமாறு அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனுவுக்கு அரசு தரப்பு அளித்த பதிலில், மனுதாரர் அரசு பள்ளியில் ஆசிரியர். அவரது மகன் அரசு மருத்துவர். இவர்களுக்கும் இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களின் பெயரிலும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பத்தில், இவர்கள், "குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசு ஊழியர்" என்பதை மறைத்து அரசின் இலவச பட்டாக்களை பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ராஜாவும் அவரது மகனும் அரசு ஊழியர்கள் என்பதை மறைத்து அரசின் இலவச வீட்டு மனை பட்டா பெற்றுள்ளனர். இதனால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குடும்பத்தினர் பெயரில் 5 பட்டாக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த விவரம் நீதிமன்றத்துக்கு தெரியவந்ததும் மனுதாரர் மனுவை திரும்பப் பெறுவதாகக்கூறி, மனு தாக்கல் செய்துள்ளார் என்று தெரிவித்தனர்.

மேலும், "ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகையை இந்த குடும்பத்தினர் ஏமாற்றி பெற்றுள்ளனர். அந்த மனைகளில் அவர்கள் வீடுகளை கட்டி உள்ளனர். இதுபோன்ற அரசு ஊழியர்களின் நடவடிக்கையால் ஊழல் வழக்குகள் அதிகரிக்கின்றன. அரசு ஊழியர் என்பவர் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் மனுதாரர் தவறான முன்னுதாரணமாக உள்ளார். எனவே இந்த வழக்கில் வருவாய் துறை செயலர் சமூக நலத்துறை செயலர் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்து அரசு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவு நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

விசாரணையில் கடுமை காட்டிய நீதிபதிகள்

இந்த வழக்கு திங்கட்கிழமை நீதிபதிகள் கிருபாகரன்,புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாதம் ஒரு லட்சம் ஊதியம் வாங்கும் அரசு ஊழியர் இது போன்ற செயலில் ஈடுபட்டது ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அரசு ஊதியம் வாங்கும் ஒரு ஊழியர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை சமூக விரோத செயலாக நீதிமன்றம் பார்க்கிறது என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும், "பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படுபவர்கள் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி அவர்கள் சமூக விரோதிகள். முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட வேண்டும். முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமல்லாமல் முழு சொத்தையும் பறிமுதல் செய்து உத்தரவிட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படும்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

"அரசு ஊழியர் ஒருவருக்கு ஐந்து பட்டாக்கள் வழங்கிய தாசில்தார் மீது வெறும் பணி இடைநீக்க நடவடிக்கை மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இது கண்துடைப்பு செயலாகும். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், அந்த தாசில்தாரின் வங்கி கணக்கு விவரங்கள் சொத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். "பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் சாதிக்கலாம் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாக உள்ளது. அரசு ஆசிரியர் தன் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் ஏன் படிக்க வைக்கிறார்கள்? அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் "சங்கம்" என்ற பெயரில் ஜாதி சார்ந்த சங்கங்களும் மதம் சார்ந்த சங்கங்களும் வைத்துள்ளனர். இதற்கு யார் அனுமதி கொடுத்தது?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

"இந்த விவகாரத்தில், மனுதாரர் மற்றும் மனுதாருக்கு பட்டா வழங்கிய தாசில்தார் தொடர்பாக முழுமையாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 7ஆம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது," என்று நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர்.

லவ் ஜிகாத்: புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்கைப் பதிவு செய்தது உத்தர பிரதேச காவல் துறை

ஜா

பட மூலாதாரம், Getty Images

சட்ட விரோத மத மாற்ற தடை சட்டம் -2020-க்கு (Prohibition of Unlawful Religious Conversion Ordinance, 2020) ஒப்புதல் வழங்கப்பட்டு ஒரே நாளில் உத்தர பிரதேசத்தில் இருக்கும், பரேலி மாவட்டத்தில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம், கட்டாய மத மாற்றத்தைத் தடுக்க கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் வரை சிறை, 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தீகாராம் என்பவர், தன் மகளுக்கு முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இஸ்லாம் மதத்துக்கு மாற கட்டாயப்படுத்துவதாகவும், பரேலியில் தேவரானியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தேவரானியா காவலர்கள், இந்த வழக்கை, புதிய சட்டவிரோத மத மாற்ற தடுப்புச் சட்டம் 2020 பிரிவு 3 & 5-ன் கீழ் பதிவு செய்து இருப்பதாகவும், கொலை மிரட்டல் போன்றவைகளுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும், பரேலி பிராந்தியத்தின் டிஐஜி ராஜேஷ் பாண்டே கூறி இருக்கிறார்.

தேவரானியா பகுதியில், ஷரிஃப் நகரில் வாழும் அந்த இளைஞரை தற்போது காணவில்லை. அவரைப் பிடிக்கும் வேலையில் காவலர்கள் இறங்கி இருப்பதாகவும் தெரிவித்தார் ராஜேஷ் பாண்டே.

அந்த இளைஞர் மற்றும் தீகாராமின் மகள் இருவரும் மாணவர்களாக இருந்த போது பேசிப் பழகினார்கள் என்கிறது தீகாராமின் புகார்.

ஒரு கட்டத்தில் அந்த இளைஞர், தன் மகளை கட்டாயப்படுத்தி இஸ்லாத்துக்கு மாறச் சொல்வதாகவும், இதைக் கண்டித்து பல முறை அந்த இளைஞர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது என்றும், அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார் தீகாராம்.

தன் மகளை மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிடுகிறார் தீகாராம்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச தலைவர் அலோக் குமார், நேற்று (29 நவம்பர் 2020) உத்திரப் பிரதேச அரசின் இந்த செயலைப் பாராட்டி இருக்கிறார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் டிசம்பர் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

தமிழத்தில் கூடுதல் தளர்வுகளுடன் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், தற்போதுள்ள நோய்ப் பரவல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை பொதுமுடக்கம் மேலும் நீட்டிப்பு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.1) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அந்த மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 2) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை, முதுநிலை வகுப்புகள்) வரும் 7ஆம் தேதி முதல் நடைபெற அனுமதிக்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 3) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 4) வரும் நாட்களில் நோய்த் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, வரும் டிசம்பர் 14ஆம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

5) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. 6) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் பொருட்காட்சி அரங்கங்களை பயன்படுத்தவும், உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1.12.2020 முதல் 31.12.2020 வரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனினும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம் என்றும், வரும் நாட்களில் நோய்த் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.7) அதேபோன்று, வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பாஸ் முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியின் எல்லைப் பகுதியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக விவசாயிகள் போராட்டம்

டெல்லியின் எல்லைப் பகுதியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 'டெல்லி சலோ' என்ற போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

டெல்லியை நோக்கி செல்லும் இந்த போராட்டம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஞாயிறன்று அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என விவசாயிகள் ஒப்புக் கொண்டனர். இருப்பினும் அரசாங்கம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பே கட்டுப்பாடுகளை விதிக்க கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி புறநகர்ப் பகுதியில் உள்ள புராரி எனும் இடத்தில் போராட்டத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், டெல்லி ஜந்தர் மந்தர் அருகே போராட்டம் நடத்தவே விவசாய சங்கங்கள் விரும்புகின்றன.

டெல்லி எல்லையில் இருப்பவர்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்றால் டிசம்பர் 3ஆம் தேதி அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமித் ஷா கூறியிருந்தார்.

டெல்லி புறநகர்ப் பகுதியில் உள்ள புராரி எனும் இடத்தில் போராட்டத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், டெல்லி ஜந்தர் மந்தர் அருகே போராட்டம் நடத்தவே விவசாய சங்கங்கள் விரும்புகின்றன.

டெல்லி எல்லையில் இருப்பவர்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்றால் டிசம்பர் 3ஆம் தேதி அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமித் ஷா கூறியிருந்தார்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் கலந்து கொண்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :