கோவை - சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து: 'நடுத்தர பயணிகள், தொழில்களை பாதிக்கும்'

- எழுதியவர், மு.ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கோவை மற்றும் சென்னைக்கு இடையே இயங்கி வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை டிசம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் பயணிகள் ரயில் சேவையை துவங்கிடவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
கடந்த 18ம் தேதி இதற்கான அறிவிப்பை தெற்குரயில்வே நிர்வாகம் வெளியிட்டிருந்தது. அதில், பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாலும், எதிர்பார்த்த அளவில் இல்லாததாலும் டிசம்பர் 2ம் தேதி முதல் கோவை - சென்னை - கோவை வழிகளில் பயணிக்கும் சிறப்பு ரயிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
"முன் பதிவு மூலம் மட்டுமே பயணச்சீட்டுகள் வழங்கப்படுவதால் சிறப்பு ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது," என்று கூறுகிறார் கோவை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் ஜமீல் அஹமத்.
"கோவை மற்றும் சென்னைக்கு இடையே பல முறை பயணிக்கும் நடுத்தர மக்களின் விருப்பமாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை உள்ளது. இந்த வழித்தடத்தில் விமான கட்டணம் ரூ.4,௦௦௦ முதல் ரூ.6,௦௦௦ வரையாக உள்ளது. அதுவே, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணச்சீட்டு ஆயிரம் ரூபாய்க்குள் மட்டுமே உள்ளது.
நம் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகள், குளிரூட்டப்பட்ட வசதிகள் என மிகவும் சௌகரியமான சேவையை இதில் பெற முடிகிறது. கொரோனா காரணமாக ரயில்களில் உணவு வழங்கப்படுவதில்லை. எனவே, தற்போது பயணக்கட்டணம் ரூ.775/- மட்டுமே. இருந்தும், இதில் அதிக அளவு பயணிகள் இல்லாமல் போனதற்கு காரணம், அதன் புக்கிங் முறை தான்."
"முன்பதிவு முறையில் மட்டுமே சிறப்பு ரயில்களுக்கு பயணச் சீட்டு வழங்கப்படுகிறது. முன்பதிவு முறையோடு, கவுண்ட்டரில் பயணச்சீட்டு வழங்கும் முறையும் மீண்டும் நடைமுறைக்கு வந்தால், அவசர வேலைக்காக திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பயணிகளும் இதில் பயணிக்க கூடும். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளோடு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வையும் ரயில்வே துறையினர் பயணிகள் மத்தியில் ஏற்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும்." என்கிறார் ஜமீல்.
சிறப்பு ரயில்கள் தொடர்ந்து செயல்பட கோரிக்கை
"டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் விடுமுறை மற்றும் பண்டிகைகளுக்கான மாதங்கள். எனவே இம்மாதங்களில் மக்கள் அதிகம் பயணங்களை மேற்கொள்வர். மேலும், கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் பயணம் செய்யும் மனநிலையும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
இது போன்ற காலகட்டத்தில் மக்களை முடக்கும் வகையில் சிறப்பு ரயில் சேவையை ரத்து செய்வது சரியான முடிவாக இருக்காது. இதேபோல், கோவையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் ஐ.டி நிறுவன ஊழியர்கள், உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே, மீண்டும் இந்த சிறப்பு ரயில்கள் சேவை துவங்கிடவேண்டும்" என கோரிக்கை வைக்கிறார் இவர்.
கொரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் பயணிகளுக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. பொது முடக்கத்தால் தவித்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துவர ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
படிப்படியாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத் தளர்வுகளின் போது பயணிகள் போக்குவரத்துக்கான சிறப்பு ரயில்களின் இயக்கமும் துவங்கியது. குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களில் முன்பதிவு மூலம் மட்டுமே பயணச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 3ம் தேதி முதல் துவங்கியது.
எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.பி
தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களான சென்னை மற்றும் கோவையை இணைக்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்படுவது ஏற்புடையதில்லை என்கிறார் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்.
"தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு ஷதாப்தி எக்ஸ்பிரஸ் என்றால் கோவை - சென்னை இடையேயான ரயில் சேவை மட்டும்தான். மக்கள் வரவேற்பு குறைவாக இருக்கிறது என்ற காரணத்தால் இதை ரத்து செய்வது ஏற்புடையதல்ல.
கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மக்களுக்கான அனைத்து போக்குவரத்துகளுக்கும் அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களான சென்னை மற்றும் கோவையை இணைக்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரத்து செய்யும் யோசனை திரும்பப்பெற வேண்டும் என தெற்குரயில்வே நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன்".

"இந்தியா முழுவதும், பயணிகள் ரயிலாக மிகக்குறைந்த விலையில் இயக்கப்பட்ட ரயில்கள், கொரோனா காரணத்தினால் சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் நான்கு மடங்கு கட்டணங்களை உயர்த்தி வசூலிப்பது ஏற்புடையதில்லை.
இதனால், வேலைக்காக வெளியூர் சென்று வரும் எளிய மக்கள் பாதிப்படைகின்றனர். எனவே, குறைந்த கட்டணத்திலான பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவக்கப்பட வேண்டும். மேலும், பொள்ளாச்சி வழியாக கோவை முதல் இராமேஸ்வரம் செல்லும் ரயிலும் மீண்டும் இயக்கப்பட வேண்டும்" என வலியுறுத்துகிறார் பி.ஆர்.நடராஜன்.
ஷதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து அறிவிப்பை திரும்பப் பெறக்கோரி இவர் சேலம் ரயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
சேவைக்கு ஆதரவளிக்கும் வணிகர்கள்
பின்னலாடை வணிகர்கள் ஏராளமானோர் சென்னையிலிருந்து திருப்பூருக்கு வந்து செல்லும் முக்கிய ரயில்களில் ஒன்று ஷதாப்தி எக்ஸ்பிரஸ் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை உற்பத்தியாளர் சுரேஷ்குமார்.
"திருப்பூரின் மிகமுக்கிய போக்குவரத்து என்றால் அது ரயில் சேவை தான். தொழில் நகரம் என அறியப்பட்டாலும் போதுமான அளவு ரயில் சேவை திருப்பூருக்கு இல்லை என்பது தான் உண்மை. இந்த சூழலில் சென்னையை இணைக்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரத்து செய்வது தொழில் முனைவோருக்கு மிகப்பெரிய இழப்பு என கருதுகிறேன்.

பட மூலாதாரம், Getty Images
காரணம், உணவு இணைய வசதி மற்றும் குளிரூட்டபட்ட சுத்தமான ரயில் பெட்டிகளை கொண்டுள்ளதோடு, சுமார் ஐந்து மணி நேரம் முப்பது நிமிடங்களில் விரைவாக பயணிக்க முடியும்."
"வியாபாரத்திற்காக ஏராளமானோர் வாரத்திற்கு ஒருமுறை திருப்பூரிலிருந்து சென்னைக்கு இந்த ரயிலில் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, சென்னையிலிருந்து திருப்பூருக்கு வந்து பின்னலாடைகளை வாங்கிச் செல்லும் வணிகர்களுக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரத்து செய்வது பாதிப்பை ஏற்படுத்தும்.
காரணம், போக்குவரத்து நெரிசல்மிக்க சாலைகளை கடந்து சென்னை விமான நிலையம் சென்று விமானத்தில் கோவை வந்தடைந்து, அங்கிருந்து திருப்பூர் வருவதற்கு நேர விரையமாகும். அதுவே, வசதிகள் நிறைந்த சதாப்தி ரயிலில் சிரமங்களின்றி திருப்பூரை வந்தடைய முடியும். சென்னை - திருப்பூருக்கு இடையேயான இந்த இணைப்பு துண்டிக்கப்படுவது கண்டிப்பாக பின்னலாடை வியாபாரிகளை பாதிக்கும்.
சதாப்தி ரயில் சேவைக்கான தரம் மற்ற ரயில்களில் இல்லாததால், தொழில்முனைவோர் மட்டுமின்றி விமான பயணக் கட்டணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நடுத்தர குடும்பங்களையும் இது பாதிக்கும்" என்கிறார் இவர்.
கொரோனா பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு இயல்புநிலை திரும்பி வரும் இச்சூழலில் சிறப்பு ரயில் என்கிற பெயரில் அதிக கட்டணத்தில் பயணிகளுக்கான சேவை வழங்கப்படுவதாக தெரிவிக்கிறார் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன்.

பட மூலாதாரம், Getty Images
"கொரோனா பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு அனைத்து பொதுபோக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிவரும் நிலையில், ரயில்வே துறை மட்டும் சிறப்பு ரயில் என்கிற பெயரில் அதிக கட்டணத்தில் பயணிகளுக்கான சேவையை வழங்கி வருகிறது. எப்போது சாதாரண கட்டணத்திலான பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவங்கப்படும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ரயிலில் பயணித்து மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் எளிய மக்களால் சிறப்பு ரயில்களின் அதிக கட்டணத்தை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சாதாரண கட்டணத்தில் பயணித்த எளிய மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சரிகட்ட பயணிகளிடம் வசூலிப்பது சரியான நடைமுறை அல்ல.
கொரோனா தாக்கத்தால் வருவாய் இழந்து மீண்டும் எழத் துவங்கியிருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் ரயில்வே சேவை இருக்க வேண்டுமே தவிர, தனியார் நிறுவனங்களைப் போல லாபமும் வருவாயும் அதன் நோக்கமாக இருக்கக் கூடாது" என்கிறார் கதிர்மதியோன்.
செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் கோவை - சென்னை சென்ட்ரல் (ரயில் எண்: 06028 ) மற்றும் சென்னை சென்ட்ரல் - கோவை (ரயில் எண்: 06027 ) ஆகிய இரண்டு சதாப்தி சிறப்பு ரயில்களும் நவம்பார் 30ம் தேதி வரை மட்டுமே இயக்கப்படவுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












