ஜெயலலிதா தோழி சசிகலா விடுதலை பற்றி கர்நாடக சிறைத்துறை தகவல் - தமிழக அரசியல்

ஜெயலலிதா தோழி சசிகலா

பட மூலாதாரம், IMRAN QURESHI

இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

சசிகலா டிசம்பரில் விடுதலை

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரும் டிசம்பரில் அவர் விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது என இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி உச்சநீதிமன்றம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா நான்கு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது.

மூவரின் தண்டனை காலமும் நிறைவடைய உள்ள நிலையில் 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி மூவரும் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது. இதையடுத்து சுதாகரன் தரப்பில் கடந்த மாதம் அபராதத் தொகையான ரூ.10கோடியே 10 ஆயிரத்தை பெங் களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

கடந்த 18ம் தேதி சசிகலாவின் அபராதமாக ரூ.10 கோடியே 10 ஆயிரம் செலுத்தப்பட்டது என்கிறது அந்தச் செய்தி.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்கள்

மருத்துவக் கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். இடங்களைத் தோ்வு செய்து, பொருளாதார சூழல் காரணமாக அனுமதிக் கடிதத்தைப் பெறாமல் சென்ற 3 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான கடிதத்தை மருத்துவக் கல்வி இயக்ககம் வழங்கியது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விக் கட்டணங்கள், விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அரசே செலுத்தும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தாா். இதையடுத்து சுயநிதிக் கல்லூரிகளில் இடங்களைத் தோ்வு செய்துவிட்டு அனுமதிக் கடிதத்தைப் பெறாமல் சென்ற மாணவிகள் திவ்யா, கௌசிகா, தாரணி ஆகிய 3 பேரை மருத்துவக்கல்வி இயக்ககம் மீண்டும் அழைத்து, எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம் என்று கூறி மாணவா் சோ்க்கைக்கான அனுமதிக் கடிதத்தை திங்கள்கிழமை வழங்கியது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் இடங்கள் கிடைக்க தமிழக அரசு சாா்பில் சட்டங்கள் இயற்றப்பட்டு, இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 313 எம்.பி.பி.எஸ். அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 92 பி.டி.எஸ். அரசு ஒதுக்கீட்டு இடங்களும் என மொத்தம் 405 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிடைத்தன என்கிறது தினமணி.

கேரளாவில் புதிய சட்டத்திருத்தம் தற்காலிக ரத்து

பினராயி விஜயன்

பட மூலாதாரம், Getty Images

சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியதால், போலீசாருக்கான கூடுதல் அதிகார உத்தரவை கேரள முதல்வர் பினராயி விஜயன் தற்காலிகமாக ரத்து செய்துள்ளார் என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

கேரளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில், போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று இந்த சட்ட திருத்தத்துக்கு சொந்த கட்சியில் இருந்தும் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: