நரேந்திர மோதி உரை: "இந்தியாவுக்கு தீங்கு நினைத்தால் தக்க பதிலடி" - இந்திய ராணுவத்தினர் மத்தியில் பேச்சு

(உலக அளவிலும் இந்தியாவிலும் நடக்கும் முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.)

ராஜஸ்தானில், ஜெய்சல்மீர் பகுதியில் உள்ள லாங்கேவாலாவில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியை கொண்டாடினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

அப்போது படையினர் மத்தியில் உரையாடிய பிரதமர் மோதி, இந்தியாவுக்கு யாரேனும் கெடுதல் நினைத்தால் இந்தியப் படையினர் தக்க பதிலடி கொடுப்பர் எனத் தெரிவித்தார்.

"இந்தியாவிற்கு யாரேனும் தீங்கு நினைத்தால் நமது படையினர் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பர். இது உலகிலேயே இந்திய ராணுவம் நம்பகத்தன்மை வாய்ந்த ஒன்று என்பதைக் காட்டுகிறது. இன்றைய அளவில் பிற பெரிய நாடுகளுடன் இந்திய ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்." என்று தெரிவித்தார் பிரதமர் மோதி.

மேலும், "பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட மூலோபாய கூட்டணியில் ஈடுபட்டுள்ளோம். பயங்கரவாதத்தை எதிர்த்து இந்தியாவின் ஆயுதப் படைகள் எந்த நேரத்திலும் எந்த காலத்திலும் போராடும் என்பதை நிரூபித்துவிட்டார்கள்.

சீனாவின் வுஹான் நகரிலிருந்து மக்களை மீட்கும் பணியில் இந்திய விமானப் படை முன்னோக்கி இருந்தது. சில நாடுகளில் தங்களின் மக்களை மீட்க தவறிவிட்டனர் ஆனால் நமது மக்களை மீட்டு பிற நாடுகளுக்கு உதவி செய்த ஒரே நாடு இந்தியாதான்." என்றும் அவர் தெரிவித்தார்.

"கோவிட் பெருந்தொற்று காலத்தில் இந்திய ஆயுதப்படையினர் சிறப்பாக பணியாற்றினர். நாட்டில் முகக் கவசங்கள், சானிடைசர்கள், பாதுகாப்பு கவச உடைகள், மருத்துவ உபகரணங்கள், மற்றும் மருத்துவமனை வசதிகள் ஆகியவை மக்களுக்குச் சென்று சேர அரும்பணியாற்றினர்." என்றார்.

ராணுவத்தினருக்கு இனிப்புகளையும் வழங்கினார் பிரதமர் மோதி.

ஜோர்ஜா மாநிலத்திலும் பைடன் வெற்றி, வட கரோலினாவில் டிரம்புக்கு ஆறுதல் வெற்றி

தலைப்பைப் பார்த்துவிட்டு, என்ன இன்னும் அமெரிக்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியவில்லையா என்று கண்கள் விரியப் பார்க்கிறீர்களா? ஆம். அது உண்மைதான்.

அதிபருக்கான போட்டியில் வெற்றி பெறத் தேவையான 270க்கு மேற்பட்ட இடங்களில் பைடன் வெற்றி உறுதியானதால் அவர் அதிபராகத் தேர்வு பெறுகிறார் என்று ஊடகங்கள் முன்னறிவிப்பு (புரொஜெக்ட்) செய்தன.

அமெரிக்கத் தேர்தலில், அதிபர் வேட்பாளர்களுக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்தல் சபை வாக்குகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.

ஒரு வேட்பாளர் குறிப்பிட்ட மாநிலத்தில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுவிட்டால், அந்த மாநிலத்தில் உள்ள தேர்தல் சபை வாக்குகள் முழுவதும் அவருக்கு சேர்ந்துவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: