You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீபாவளி கொண்டாட்டத்தை கொரோனா வைரஸ் பாதித்ததா? பட்டாசு வெடித்தார்களா? தமிழ்நாடு நிலவரம் என்ன?
தமிழ்நாடு முழுவதும் தீபாவளி திருநாளன்று வழக்கமாக காணப்படும் ஆரவாரத்தை இந்த ஆண்டு கொரோனா தொற்று சற்றே குறைத்துவிட்டதாக பொது மக்கள் கருதுகின்றனர்.
கொரோனா பாதுகாப்பு, தொடர் மழை மற்றும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு என பல காரணங்களால் 2020ம் ஆண்டின் தீபாவளி திருநாள் ஆரவாரம் குறைந்த நாளாக காணப்படுகிறது.
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் தீபாவளி கொண்டாட்டம் இந்த ஆண்டு எவ்வாறு காணப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள பொது மக்களிடம் பேசினோம். கொரோனா காலத்தில் தீபாவளி திருநாளை கொண்டாடும் போது பொது மக்கள் முகக் கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது.
தீபாவளி கொண்டாட்டத்திற்கு பட்டாசு வாங்குபவர்கள், குறைந்த அளவு ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தேர்வு செய்யலாம் என தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டினை ஒப்பிடும்போது மக்கள் பட்டாசுகளை குறைத்துவிட்டார்கள். மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள் என்று கூறும் சுற்றுசூழல் செயல்பாட்டாளர் ஜி.சுந்தர்ராஜன், மக்களைப் போலவே, அரசுத் துறைகள் சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்களில், பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்.
தீபாவளி திருநாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே சென்னை தியாகராய நகர் பகுதியில் கடைகளில் கூட்டம் அலைமோதும் காட்சிகளை பல ஆண்டுகளாக பார்த்திருப்போம். முந்தைய ஆண்டுகளை காட்டிலும், இந்த ஆண்டு குறைவாக கூட்டம் காணப்பட்டதாக கூறுகிறார் தையல் தொழிலாளி ரமா(45).
''ஒரு மணிநேரத்தில் சுடிதார் தைத்து தரும் கடைகள் தீபாவளி நாளன்று கூட வேலை செய்வார்கள். இந்த ஆண்டு எங்களுக்கு குறைந்த லாபம் கூட கிடைப்பதற்கு வழியில்லை. ஏற்கனவே ஊரடங்கு காலத்தில் இழப்பை சந்தித்தோம். இந்த தீபாவளி விற்பனை உதவும் என நினைத்தோம். நாங்கள் எதிர்பார்த்த அளவு வியாபாரம் நடக்கவில்லை,''என்கிறார் ரமா.
- கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
- கொரோனா சானிடைசர் தரமானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களுக்காக சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கும். இந்த ஆண்டு பயணம் செய்பவர்கள் குறைவாக இருந்ததால், குறைந்த அளவு பேருந்துகளை மட்டுமே இயக்கியதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு. 18,547 பேருந்துகளை இயக்கியதாகவும், அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 14,757ஆக குறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.டி. நிறுவனங்களின் பணியாளர்கள் உள்பட பல துறை நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால், பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் கல்வி நிலையங்கள் மூடியிருப்பதால் மாணவர்கள் பயணிப்பது குறைந்துவிட்டது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில் தீ விபத்து
மதுரை தெற்கு மாசி நவ்மத்கான் தெரு பகுதியில் ஒரு ஜவுளி கடையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தையடுத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு தீயணைப்பு படை வீரர்கள் காயமடைந்தனர்.
அதில் சிவராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் தீபாவளிக்கு முந்தைய நாள் பல இடங்களில் சிறு வியாபாரிகள் கடை விரித்திருந்தனர். துணி, வளையல் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பலவும் சாலையோரக் கடைகளில் விற்கப்பட்டன.
மதுரை நகர தீபாவளி சந்தை உற்சாகம் குறையாமல் நடைபெற்றதாக கூறுகிறார் இல்லத்தரசி ஷீலா.
'குழந்தைகள் பட்டாசு வேண்டாம் என்றனர்...'
கோவை ஆர் எஸ் புரத்தைச் சேர்ந்த நர்மதா அவரது குடும்பத்துடன் தீபாவளி அன்று கோயில்களுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணாமாக வீட்டில் இருப்பதாக கூறுகிறார்.
''என் இரண்டு மகள்களும் ஆன்லைன் வகுப்பில் படிக்க வேண்டும் என்பதால், இரண்டு செல்போன் வாங்கினோம். கொரோனா ஊரடங்கு காலத்தில் எங்கள் பூக்கடையில் வியாபாரம் நடக்கவில்லை. இந்த ஆண்டு குழந்தைகளுக்கு புது துணி மட்டும் வாங்கினோம். மகள்கள் இருவரும் பட்டாசு வேண்டாம் என மறுத்துவிட்டார்கள். கோயில்களுக்கு சென்றால் பாதுகாப்பாக இருக்குமா என்பது சந்தேகம் என்பதால் எங்கும் போகவில்லை,'' என்கிறார் நர்மதா.
காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பாட்டாசு வெடிக்கவேண்டும் என தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இருந்தபோதும், கோவையில் ஒரு சில இடங்களில் குழந்தைகள் காலை 7 மணிக்கு பின்னரும் ஆர்வமாக பட்டாசுகளை வெடிக்கின்றனர்.
ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக மழை பெய்துவருவதால், சாலையோர கடைகள் காணப்படவில்லை. விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் பலரும் தீபாவளி திருநாளுக்கு முந்தைய இரவு துணி வாங்குவதற்கும், இனிப்பு வாங்குவதற்கும் சாலையோர கடைகளுக்கு செல்வர்.
இந்த ஆண்டு அந்த பரபரப்பு ராமநாதபுரத்தில் காணப்படவில்லை. அதனால், கொரோனா காலத்தில் சந்தித்த இழப்பை தீபாவளி சமயத்தில் சிறிதளவு சமாளிக்க நினைத்த தங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாக சிறு வியாபாரிகள் கூறுகின்றனர்.
சில வீடுகளில் பட்டாசுகளை வாங்கி வைத்திருந்தபோதும், மழை காரணமாக வெடிக்க முடியவில்லை என குழந்தைகள் வருத்தத்தில் உள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 வயது மிதுன் இந்த ஆண்டு தீபாவளிக்குப் பட்டாசுகளை வெடிக்க முடியவில்லை என்ற வருத்தத்தோடு இருப்பதாக கூறுகிறான். ''மூன்று நாட்களாக பலத்த மழை நீடிப்பதால், வாங்கி வைத்த பட்டாசுகளை வெடிக்கமுடியவில்லை. இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு இல்லாத தீபாவளியாக மாறிவிட்டது,''என்கிறான் மிதுன்.
மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
அதோடு, தீபாவளி அன்று ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இளைஞர்கள் வண்டி கட்டிக்கொண்டு புது திரைப்படங்களை பார்க்க செல்வது வழக்கம். திரையரங்குகள் திறக்கவில்லை என்பதால், அந்த இளைஞர் பட்டாளமும் சாலைகளில் காணப்படவில்லை.
பிற செய்திகள்:
- 'சானிடைசர் தடவியபின் பட்டாசு வெடித்தால் கைகளில் தீப்பற்ற வாய்ப்பு'
- ஜோர்ஜாவையும் கைப்பற்றினார் பைடன்: இதனால் என்ன ஆகும்?
- கிராம நிர்வாக அலுவலரின் தன்னார்வ சேவை: கட்டணமில்லா ஆம்புலன்ஸ் இயக்குகிறார்
- உலகின் சூழலை அதிகம் மாசுபடுத்துவது அமெரிக்காவா? சீனாவா?
- விவாகரத்து, மது அருந்துதல்: கடுமையான இஸ்லாமிய சட்டங்களை தளர்த்திய ஐக்கிய அரபு அமீரக அரசு
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: