தீபாவளி பாதுகாப்பு: கைகளில் சானிடைசர் தடவியபின் பட்டாசு வெடிக்கலாமா?

இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

சானிடைசர் தடவியபின் பட்டாசு வெடிக்கலாமா?

தீபாவளி தினத்தில் கைகளில் சானிடைசர் தடவிய பின்பு பட்டாசு வெடிக்கலாமா என்பது குறித்து சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காயப் பிரிவு தலைமை மருத்துவர் ரமா தேவி விளக்கம் அளித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை.

கைகளில் சானிடைசரைத் தடவிக் கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. சானிடைசர்களில் ஆல்கஹால் கலந்திருப்பதால் அவற்றுக்குத் தீப்பற்றக்கூடிய தன்மை உண்டு. அதனால் பட்டாசுகளை வெடிக்கும்போது, சானிடைசரைப் பயன்படுத்த வேண்டாம். வெடித்து முடித்த பிறகு கைகளைச் சோப்பு போட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.

"கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம் என்பதால் புகையைத் தவிர்ப்பது நல்லது. இதய பாதிப்பு உள்ளவர்களுக்காகச் சத்தம் வரக்கடிய வெடிகளைத் தவிருங்கள். கூடுதல் ஒலி, ஒளியைக் கொடுக்கும் பட்டாசுகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது'' என்று மருத்துவர் ரமா தேவி தெரிவித்தார் என்கிறது அந்த செய்தி.

சென்னையில் கொரோனா வைரஸ் விதிமீறல் அபராதம்

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பரவல் தடுப்பு விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் சனிக்கிழமை வரை ரூ.3.08 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.

இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் மட்டும் ரூ.51.82 லட்சமும், மாதவரத்தில் ரூ.30.37 லட்சமும், கோடம்பாக்கத்தில் ரூ.26.92 லட்சமும், குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூரில் ரூ.5.30 லட்சமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து மட்டும் ரூ.13.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து நிவாரணத் தொகையாக ரூ.4382 கோடியை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்கிறது தினமணி செய்தி.

நடப்பாண்டு புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரண உதவியாக மேற்கு வங்கம், ஒடிஷா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு நிவாரண நிதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மேற்கு வங்கத்திற்கு ரூ.2,707.77 கோடியும், ஒடிஷாவுக்கு ரூ.128.23 கோடியும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ. 268.59 கோடியும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு கர்நாடகத்திற்கு ரூ. 577.84 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.611.61 கோடியும், சிக்கிம் மாநிலத்திற்கு ரூ.87.84 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: