அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சர்ச்சை: மகளுக்கு பதவி வழங்கியது ஏன்? - சர்ச்சைக்கு விளக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா நியமிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
படக்குறிப்பு, கோப்புப் படம் - சித்திரிப்புக்காக

தன் மீதான புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது பற்றி கவலை இல்லை என அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சூரப்பா, தமிழக அரசிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில் பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்றும் இதற்கு மாநில அரசின் நிதியுதவி வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதற்கு தமிழக அரசு சார்பில், தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

அதேபோல, ஐஐடியில் பணியாற்றி வந்த அவரது மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் கௌரவ பதவி வழங்கப்பட்டது சர்ச்சையானது. இந்நிலையில், சூரப்பா மீது விதவிதமான புகார்கள் வந்துள்ளதால், விசாரணை நடத்த குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.

அந்த குழு விசாரித்தால் எந்த தகவலும் புதிதாக கிடைக்காது என்றும் தான் வெளிப்படையான நபர் என்றும் சூரப்பா தெரிவித்துள்ளார்

சூரப்பா மீதான புகார்களை விசாரித்து, மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என விசாரணை குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. குழு தரும் விசாரணை அறிக்கை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி அண்ணா பல்கலை கழக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சூரப்பா, இது தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையா என்பதை கல்வியாளர்கள்தான் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு பெயர் குறிப்பிடாமல் மிரட்டல் கடிதங்கள் அதிகம் வருவதாக கூறிய அவர், பணிமாறுதல் வேண்டும் என்றும் இல்லை என்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுகிறார்கள் என்றார்.

''என் மீதான புகார்களில் உண்மை இல்லை என்று அனைவருக்கும் தெரியும். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பைசா கூட முறைகேடு செய்யப்படவில்லை. இந்த புகார்களால் அண்ணா பல்கலைக் கழகத்துக்கான எனது பணிகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது. என் மீதான புகார்கள் எனக்கே ஆச்சரியம் தருகின்றன. எனது பதவிக்காலத்தில் நேர்மையை கடைபிடித்துள்ளேன், பணி நியமனங்களுக்கு பணம் வாங்கியிருந்தால் ஆதாரத்தை காட்டட்டும்,'' என்றார்.

மகளுக்குப் பதவி வழங்கியது ஏன்?

மேலும் தனது மகளுக்கு அளிக்கப்பட்ட கவுரவ பதவி குறித்து கேட்டபோது, ''எனது அதிகாரத்தை பயன்படுத்தி மகளுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. தமிழக அரசு நடத்தும் விசரணையை பற்றிய கவலை எனக்கு இல்லை. என்னை பற்றிய தகவல்களை வெளிப்படையாக வைத்திருக்கிறேன். என் மகளின் சேவை பல்கலைகழகத்துக்கு தேவை என்பதால் நியமனம் நடைபெற்றது,'' என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது ஏன்

துணைவேந்தர் சூரப்பா மத்திய மனித வளத் துறைக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியது சர்ச்சையாக மாறியது. தமிழக அரசிடம் தெரிவித்ததை கடிதமாக எழுதியதாக அவர் சொன்னபோதும், அது எதிர்ப்புகளுக்கு காரணமானது.

துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி கடந்த அக்டோபர் மாதம் திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: