பகவத் கீதை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு விருப்பப் பாடமா? கட்டாயப் பாடமா?

பட மூலாதாரம், Twitter
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு 'பகவத் கீதை' பாடம்
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட தத்துவவியல் பாடத்திட்டத்தில் 'பகவத் கீதை' இடம்பெற்றதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாகத் துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மற்றும் இளநிலை பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் பாடத்திட்டம் அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழுமத்தின் அறிவுறுத்தலின்படி நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுவதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

இந்திய-மேற்கத்தியப் பாரம்பரியங்களை ஒப்பிட்டுப் பார்த்து ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் தத்துவத்தில் ஒரு புதிய கருத்தை உருவாக்குவது, இலக்கியம் மற்றும் அறிவியலில் கற்பனைத்திறன், எண்ண ஓட்டங்களை ஊக்கப்படுத்துவது, அறிவியலுக்கும், மனித குலத்துக்கும் உள்ள இடைவெளியைச் சுயபரிசோதனை செய்து அதற்குப் பாலமாக இருப்பது, தன்னைப்பற்றிய புரிந்து கொள்ளுதலை இன்னும் அதிகப்படுத்துவது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதாகப் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தத்துவவியல் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் உள்பட பகவத் கீதை தொடர்பான பாடங்களும் இடம்பெற்று இருந்தன. மேலும் அதை மாணவ-மாணவிகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்த பாடத்திட்டத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், 'அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளில் 2019-ம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் தத்துவப்பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில் இந்திய-மேல்நாட்டு தத்துவப்படிப்பு என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது' என்று தெரிவித்து இருந்தார்.
இதேபோல ஆசிரியர், மாணவர், வாலிபர், அறிவியல், எழுத்தாளர் அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், 'பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அருகிவரும் நிலையில், அப்படிப்பில் சேர்வதற்கான ஆர்வம் மாணவர்களிடையே குன்றி வருகிறது. தற்கால தேவைக்கேற்ப பொறியியல் பாடங்களை நவீனமாக மேம்படுத்தும் நடவடிக்கையே இப்போதைய தேவை. அதைவிடுத்து பகவத் கீதை போன்றவற்றைப் பாடத்தில் சேர்த்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை பொறியியல் படிப்பினை மதிப்பிழக்கச்செய்யும். எனவே அண்ணா பல்கலைக்கழகம் தனது பொறியியல் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்துள்ள மதச்சார்புடைய அனைத்து பாடங்களையும் உடனடியாக நீக்கிவிட வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நேற்று மாலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கட்டாயப் பாடமாக இருக்கும் பகவத் கீதை உள்ளிட்ட தத்துவவியல் பாடம் விருப்ப பாடமாக மாற்றப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் அந்த பாடத்தைத் தேர்வு செய்து படிக்கலாம். இல்லாதவர்கள் பட்டியலில் உள்ள மொத்த 12 பாடங்களில் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு பாடத்தைத் தேர்வு செய்து படித்துக் கொள்வதற்கான வகையில் மாற்றம் கொண்டு வரப்படும்' என்று தெரிவித்தார்.

தினமணி: 'நதிநீர்ப் பங்கீட்டுக்கு தீர்வு காண சிறப்புக் குழுக்கள்'

தமிழகம் - கேரளம் இடையேயான நதிநீர்ப் பங்கீட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண சிறப்புக் குழுக்கள் அமைப்பது என்று இரு மாநில முதல்வர்கள் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கு 5 பேர் கொண்ட குழுவும், பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்துக்கு தனிக் குழுவும் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்துடனான பல்வேறு நதிநீர்ப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனை, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திருவனந்தபுரத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்காக அவர் சென்னையில் இருந்து காலை விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம், முதல்வரின் செயலாளர் சாய்குமார், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பலரும் சென்றிருந்தனர்.
கூட்டத்துக்குப் பிறகு, இரு மாநில முதல்வர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, தமிழக முதல்வர் பழனிசாமி, " 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையிலான நீர்ப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது.
ஏற்கெனவே ஆலோசித்தபடி, பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் மூலம் நீர்ப் பங்கீடு செய்வதற்கு இரண்டு மாநிலத்திலும் தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவின் ஆய்வின் அடிப்படையில் நீர்ப் பங்கீடு செய்து கொள்ளப்படும்.
இதேபோன்று, பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தனிக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அந்தத் திட்டமும் நிறைவேற்றப்படும். ஆனைமலையாறு, நீராறு, நல்லாறு திட்டம், சிறுவாணி பிரச்னை போன்றவற்றுக்கும் இந்தக் குழு மூலமாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தப் பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்." என்றார்.

இமயமலை வயகராவுக்கு தங்கத்தை விட ஏன் அதிக விலை?
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1

இந்து தமிழ்: 'நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் பெற்றோருடன் சிக்கினார்'

பட மூலாதாரம், Getty Images/ facebook
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மாணவர் உதித் சூர்யா திருப்பதி மலை அடிவாரத்தில் சிபிசிஐடி போலீஸாரிடம் சிக்கினார். உடனிருந்த பெற்றோரும் பிடிபட்டனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் மருத்துவர் வெங்கடேசன். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இவரது மகன் உதித் சூர்யா, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவர் உதித்சூர்யா, நீட் தேர்வு மற்றும் கலந்தாய்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது மருத்துவக் கல்வி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது
இதுகுறித்து தேனி மாவட்டத்தில் உள்ள க.விலக்கு காவல் நிலையத்தில் மாணவர் உதித் சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், உதித் சூர்யா மீது கூட்டுச்சதி 120 (பி), மோசடி செய்தல் (419), ஏமாற்றுதல் (420) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர். அவர்களை காவல்துறை தேடி வந்தனர்.
இதையடுத்து, சென்னையில் உள்ள மாணவரின் வீடு உட்பட பல இடங்களில் தேனி மாவட்ட தனிப்படை போலீஸார் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் உதித்சூர்யா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை தள்ளிவைத்தது.
இந்நிலையில், நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கைக் கடந்த 22-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, போலீஸ் டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தேனி மாவட்ட சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கினர். முதல்கட்டமாக, தலைமறைவாக இருக்கும் உதித்சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரைப் பிடிக்க முயற்சி செய்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் உதித் சூர்யா திருப்பதியில் இருப் பதை கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று காலையிலேயே திருப்பதி சென்ற சிபிசிஐடி போலீஸார், திருப்பதி மலை அடிவாரத்தில் ஒரு விடுதியில் மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். 3 பேரையும் பிற்பகலில் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் தேனி மாவட்ட சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

#MeToo - அமெரிக்கா முதல் தமிழகம் வரை
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "சுபஸ்ரீ மரணம்: அக்டோபர் 23ஆம் தேதிக்குள் அறிக்கை"

பட மூலாதாரம், Facebook
பேனர் விழந்து சுபஸ்ரீ பலியான விவகாரத்தைமுழுமையாக விசாரித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அக்டோபர் 23ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஜெயகோபால் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை போலீஸார் இதுவரை கைது செய்யாதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி, இந்த சம்பவத்துக்கு காரணமாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஜெயகோபால் உள்ளிட்ட முக்கிய நபர்களை போலீஸார் இதுவரை கைது செய்யாதது ஏன்? சட்டவிரோத பேனர்களைத் தடுக்க ஆளுங்கட்சி தரப்பில் இதுவரை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு கூடுதல் தலைமை வழக்குரைஞர் எமிலியாஸ், சம்பந்தப்பட்ட நபர் குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளார். அவரை பல்வேறு இடங்களில் தேடி வருகிறோம், அவரைக் கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இரண்டு வாரமாகவா தேடுகிறீர்கள்? ஜெயகோபால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டாரா? என கேள்வி எழுப்பினர். சட்டவிரோத பேனர் கலாசாரம் சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பெரும்பாலான பேனர்கள் சாலைகளை ஆக்கிரமித்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும்தான் வைக்கப்படுவதாக நீதிபதிகள் கூறினர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












