You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பின் இறங்குமுகம் வலதுசாரி அரசியலின் முடிவா?
- எழுதியவர், ராமு மணிவண்ணன்
- பதவி, துறைத் தலைவர், அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
அமெரிக்க தேர்தலைப் பொறுத்தவரை, கடந்த பல தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய அன்றைய தினமே முடிவுகள் வெளியாகிவிடும். இப்போது நடந்திருப்பது கடந்த பல வருடங்களில் நாம் காணாத ஒரு விஷயம்.
இந்தத் தேர்தலை consequential தேர்தல் என்று அழைக்கிறார்கள். அதாவது பலவிதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் என்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைவிட, ஜோ பைடன் - டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 20 இருக்கைகளுக்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஆகவே இதை மிக, மிக இறுக்கமான தேர்தலாக இதைப் பார்க்க முடிகிறது.
இந்தத் தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் என்று பார்த்தோமானால், ஃபுளோரிடா - ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும் என நினைத்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. அமெரிக்க தேர்தல் வரைபடத்தை எடுத்துப் பார்த்தால், ஜனநாயக கட்சிக்கு உரிய "நீலம்" கரையோரப் பகுதிகளை வென்றிருக்கிறது. உட்புறப் பகுதிகளில் டிரம்ப் வென்றிருப்பதால் அது "சிவப்பு" நிறமாக காண்பிக்கப்படுகிறது.
இதை வைத்துப் பார்த்தால், உள்நாட்டுப் பிரச்சனைகளைக் கையாளுவதில் டிரம்ப் நிர்வாகம் சிறப்பாக இருந்ததாக மத்திய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள் என்று சொல்லலாம். மேற்கு, கிழக்கு கடற்கரைப் பகுதிகளைச் சார்ந்தவர்கள் இடதுசாரி அரசியலை நோக்கி நகர்கிறார்கள் என்பதையும் நாம் இப்போது பார்க்க முடிகிறது.
இந்தத் தேர்தலில் ஊடகங்களின் நிலை குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, தாராளவாத ஊடகங்கள் டிரம்ப்பிற்கு எதிரான பிரசாரங்களையே மேற்கொண்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ஊடகங்களையும் எதிர்கட்சிகளையும் டிரம்ப் கையாண்ட விதம் பொறுக்க முடியாததாக இருந்தது. அந்த நிலையில்தான் ஊடகங்கள் இதனைப் பெரிதாக பேச வேண்டியதாயிற்று. ஆகவே, டிரம்புடைய பிழைகளை ஊடகங்கள் பெரிதாகக் காட்டியதாகச் சொல்ல முடியாது.
பொதுவாக அமெரிக்க அதிபர், தோல்வியடைந்தால் அதை ஏற்றுக்கொண்டு உரை நிகழ்த்த வேண்டும். ஆனால், டிரம்ப் வெற்றியைத் தவிர தான் எதையும் ஏற்கப்போவதில்லை என்று சொல்லிவிட்டார். அப்படி அவர் தோல்வியை ஏற்காவிட்டால், அது அவர் வகிக்கும் அமெரிக்க அதிபர் பதவிக்கு அவமதிப்பாக இருக்கும். ஒருவருக்கு வெற்றி, ஒருவருக்கு தோல்வி என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், டிரம்ப் தேர்தலுக்கு முன்பே தோல்வியை நான் ஏற்கப்போவதில்லை என்று சொல்வதும் இப்போது வாக்குப் பதிவில் குளறுபடிகள் இருக்கிறது என்றெல்லாம் சொல்வதும் சரியல்ல.
விஸ்கான்சின் மாநிலத்தில் 21 ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் குடியரசு கட்சியினர் தோல்வியடைகிறார்கள். ஆகவே அங்கு மறு வாக்கு எண்ணிக்கையைக் கோருகிறார்கள். பல இடங்களில் வழக்குத் தொடர்வதற்கான முனைப்புகளைக் காட்டுகிறார்கள். மிச்சிகனில் தேர்தல் அதிகாரிகள் அனைவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இப்படி பல இடங்களில் வழக்குத் தொடர்வதால், மக்களின் கவனம் அவர்கள் பக்கம் திரும்புகிறது. இந்த வழக்குகள் எல்லாம் உச்ச நீதிமன்றத்திற்கே சென்றாலும் கூட, தேர்தல் களத்தில் முடிவுகள் தெளிவாகிவிடும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்க நிர்வாகத்தில் அதிபரின் குடும்பம் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. அமெரிக்க அதிபர் மாளிகையைப் பொறுத்தவரை, அதிபரின் குடும்பம் என்பது அவர்கள் அரசியல்வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், டிரம்பைப் பொறுத்தவரை மனைவி, மகள், மருமகன் என எல்லோருக்கும் ராஜீய ரீதியான முக்கியப் பதவிகளை வழங்கினார்.
இது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பிறகு, மற்ற நாடுகளுடனான உறவில் இவர் பயன்படுத்திய சொற்கள், சுற்றுச்சூழல், மனிதவளம், ஐ.நா. போன்ற முக்கியமான விஷயங்களில் இவர் எடுத்த முடிவுகள் ஆகியவை அமெரிக்க மக்களுக்கு ஏற்புடையவையா என்ற கேள்வியை ஏற்படுத்தியது. ஜோ பிடேன் வந்தால் இவை மாறும்; தன்னிச்சையான செயல்பாடுகள் குறையும் என நம்பலாம். செனட், பிரதிநிதிகள் சபை ஆகியவற்றிலும் ஒரு பக்குவமான நிலை ஏற்படும் என கருதலாம்.
அதிபர் மாறினால் தெற்காசிய பிராந்திய பகுதிகளில் உடனே மாற்றம் இருக்குமென எதிர்பார்க்க முடியாது. டிரம்ப் இந்தியாவுடன் பிரதமர் மோடியுடன் நெருக்கமாக இருந்தார். ஆனால், இதற்கு டிரம்ப் மட்டுமே காரணமல்ல. அவரால்தான் இது அமைந்தது எனச் சொல்ல முடியாது. கடந்த 10 - 15 ஆண்டுகளாகவே இந்திய - அமெரிக்க உறவில் ஒரு மாற்றம் இருந்தது. இரு நாடுகளுமே நெருக்கத்தை நாடிவந்தன. ஆகவே அமெரிக்காவில் குடியரசுக் கட்சியோ, ஜனநாயகக் கட்சியோ - யார் வந்தாலும் பெரிய மாற்றம் உடனே இருக்காது. அதேபோல, பாகிஸ்தான் குறித்த நிலைப்பாட்டிலும் பெரிய மாற்றம் இருக்காது.
கொரோனா போன்ற பெருந்தொற்று இல்லாவிட்டால், டிரம்ப் வெற்றிபெற்றிருப்பார் என்றுகூடச் சொல்லலாம். கொரானா தொடர்பாக இவர் பேசிய பேச்சு, மக்களை இவர் மீது நம்பிக்கை இழக்கச் செய்தது. பெரும் எண்ணிக்கையில் மக்கள் இறந்திருந்தார்கள். பெரும் எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், அமெரிக்காவின் சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமாக இருந்தது. இந்தத் தோல்விக்கு அது ஒரு முக்கியமான காரணம்.
அதேபோல, கருப்பின மக்களுடன் இருந்த முரண்பாடுகள். தனிப்பட்ட முரண்பாடுகள் மட்டுமல்லாமல் அரசியல் கொள்கைகள் சார்ந்த முரண்பாடுகளும் இருந்தன. இந்த முரண்பாடுகள் அமெரிக்க நிர்வாகத்திலேயே இருந்தன. டிரம்ப் அவற்றை நீக்குவதற்கோ, குறைப்பதற்கோ, காரணங்களை விளக்குவதற்கோ முயற்சிகளை எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்ததாக அமெரிக்க பொருளாதாரம். வேலை இழப்பு, வேலையின்மை, வாழ்வாதாரமே மிக சாவாலான விஷயமாக உருவெடுத்தது. இதுதான் அவருடைய தோல்விக்கு முக்கியமான காரணமாக பார்க்க வேண்டியுள்ளது.
இந்தியா, சீனாவுடனான அமெரிக்க உறவுகள் எப்படி மாறும் என்ற கேள்வி இருக்கிறது. அதற்குப் பதில், "அரசியலில் நிரந்தர நண்பர்களோ, எதிரிகளோ கிடையாது. தேசம் மீதான நிரந்தர அக்கறை மட்டுமே உண்டு" என்பதுதான். மற்றபடி அனைவருமே கருவிகள். டிரம்பும் அப்படித்தான். அவருடைய காலம் முடிவுக்கு வருகிறது. இனி வேறொருவர் வருவார். அவ்வளவுதான்.
டிரம்ப் அமெரிக்க அதிபராக வெற்றிபெற்ற பிறகு, வலதுசாரி அரசியலில் உலகம் முழுவதும் ஒரு ஏற்றம் இருந்தது. மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகளிலும், ஏன் ஸ்காண்டிநேவிய நாடுகளிலும்கூட வலதுசாரி எழுச்சி இருந்தது. இப்போது எல்லாம் முடிவுக்கு வந்துவிடும் எனச் சொல்ல முடியாது. ஆனால், அந்த மாற்றம் குறித்து, அந்த அரசியல் குறித்து கடுமையான விமர்சனங்கள் வரும். டிரம்ப்பின் இந்தத் தோல்வி, வலதுசாரி அரசியலின் ஏற்றம் குறித்து முக்கியமான வினாக்களை எழுப்பியிருக்கிறது என்பதுதான் முக்கியம்.
பிபிசிக்கு அளித்த நேரலை பேட்டியின் எழுத்து வடிவம் இது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- வாட்ஸ் ஆப்பில் 7 நாட்களில் மெசேஜுகள் தானாக அழிந்துவிடும் ஆப்ஷன் அறிமுகம்
- தமிழகத்தில் யாத்திரை அரசியல் பா.ஜ.கவுக்கு பலன் தருமா?
- அமெரிக்க தேர்தல் குழப்பத்திலும் சில நன்மைகள்: பட்டியலிடும் அமெரிக்க தமிழர்கள்
- ஒட்டக பாலில் டீ கேட்டு கடை ஊழியர்களைத் தாக்கிய இளைஞர்கள் கைது
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- "தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா?" - கமல் ஹாசன் விளக்கம்
- அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் - நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: