பார்லி-ஜி, பஜாஜ் தயாரிப்புகள்: வெறுப்புணர்வு ஊடகங்களை புறக்கணிக்க முடிவு - பின்னணி என்ன?

பார்லி ஜி

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்கள் பொதுமக்களிடையே ஏற்படுத்தி வரும் தாக்கம், நாளுக்கு நாள் பெருகி வரும் வேளையில், குறிப்பிட்ட ஒரு சம்பவம் நடந்தால் அதை விவாதப்பொருளாக்கி, உலகின் கவனத்தை ஈர்க்கும் இன்டர்நெட் யுகத்தில் உலகம் தற்போது இருக்கிறது.

வெறுப்புணர்வு அரசியல் பல வடிவங்களில் பிரதிபலிக்கும் நிலையில், அதை பிரபல தனியார் நுகர்வோர் தயாரிப்புகள் எவ்வாறு அணுகுகின்றன என்பதை பிபிசியின் நிகில் இனாம்தார், அபர்ணா அல்லூரி ஆய்வு செய்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் செய்தி ஊடகங்களில் அதிகமாக ஒருவரது பெயர் அடிபட்டது என்றால் அது பஜாஜ் ஆட்டோவின் தலைமை செயல் அதிகாரி ராஜிவ் பஜாஜ் ஆகத்தான் இருக்கும். வெறுப்புணர்வையோ மக்கள் மனதில் நஞ்சு விதைக்கும் வகையிலோ செயல்படும் ஊடகங்களில் இனி தங்களுடைய விளம்பரங்கள் இடம்பெறாது என அவர் வெளிப்படையாக அறிவித்தார்.

இந்தியாவில் குறிப்பிட்ட சில தனியார் தொலைக்காட்சிகள், விளம்பர ஆதாயத்துக்காக தங்களின் தொலைக்காட்சியை அதிக பார்வையாளர்கள் பார்ப்பதாக காண்பிக்க டிஆர்பி ரேட்டிங் மோசடியில் ஈடுபட்டதாக மும்பை காவல்துறை குற்றம்சாட்டியது. அது தொடர்பான செய்திகள், தேசிய அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்த நேரத்தில், சிஎன்பிசி-டிவி18 என்ற தொலைக்காட்சிக்கு ராஜிவ் பஜாஜ் பேட்டியளித்தார். அதில் அவர், "தனியார் தொலைக்காட்சிகளில் எவை மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறதோ அவற்றுடன் எங்களுடைய நிறுவனம் விளம்பர உறவு வைத்துக் கொள்ளாது. அவற்றுக்கு எங்களின் விளம்பரம் இனி கிடையாது" என்று அறிவித்தார்.

இதுபோன்ற அறிவிப்பு தனியார் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே இந்தியாவின் மற்றொரு மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லி-ஜி, ஆட்சேபகர தகவல்களை ஒளிபரப்பும் நிறுவனங்களுடன் இனி நாங்கள் விளம்பர உறவு கொள்ள மாட்டோம் என அறிவித்தது.

"இதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தங்களின் தொலைக்காட்சியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற குறிப்பை நாங்கள் உணர்த்துகிறோம்," என்று பார்லி-ஜி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி தெரிவித்தார்.

பஜாஜ்

பட மூலாதாரம், Getty Images

பொதுவெளியில் மக்களை பாதிக்கும் அன்றாட நிகழ்வுகளை பற்றி இந்த நிறுவனங்கள் இதுவரை அதிகம் பேசியதோ அல்லது வெளிப்படையாக கருத்துகளை வெளியிட்டதோ கிடையாது. அதுதான், இந்த நிறுவனங்கள் அரிதாக வாய் திறந்தபோது பலருக்கும் அது ஆச்சரியத்தை அளித்தது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் பொதுவாக அரசியல் விவகாரங்கள், பொது அல்லது சமூக விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியிருப்பதையே வழக்கமாக்க கொண்டிருக்கின்றன.

ஆனால், மேற்கு நாடுகளில் ஒரு பாலினத்தவர்கள் உரிமைகள் அல்லது வெறுப்புணர்வு அல்லது இனவெறி போன்ற விவகாரங்கள் தலையெடுத்தபோது, அங்குள்ள பெரு நிறுவனங்கள், பொதுப்படையாக குரல் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்காக ஆதரவுக்கரம் நீட்டின.

இப்போது இந்தியாவில் பார்லி-ஜி, பஜாஜ் போன்ற நிறுவனங்கள், தங்களை மக்களுடன் இணைத்துக் காட்டிக் கொள்ள மேற்கு நாடுகளின் பாணியை பின்பற்றுவது போலவே அவற்றின் சமீபத்திய செயல்பாடுகள் உள்ளன.

சமீப மாதங்களில் இந்தியாவின் தனியார் தொலைக்காட்சிகள் சில, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான செய்திகளை தொடர் நேரலைகளாக ஒளிபரப்பி அந்த சம்பவத்தை தேசிய அளவிலான பிரச்னை போல காட்ட முற்பட்டன. அதே நேரம், சுஷாந்தின் தோழி ரியா சக்ரவர்த்திதான் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சில ஊடகங்கள் செய்திகளை ஒளிபரப்பிய செயல்பாடு, அவர்களின் அந்தரங்கமான விவரங்கள் எனக் கூறி வெளியிடப்பட்ட தகவல்கள் போன்றவை விசாரணை அமைப்புகளாலேயே ஆட்சேபிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் அதுபோன்ற செய்திகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளும் அளவுக்கு பிரச்னையைத் தீவிரமாக்கியது.

ரியா

பட மூலாதாரம், Getty Images

அதற்கு இடையே, ஊடகங்களில் போட்டி போட்டுக் கொண்டு பார்வையாளர்களை ஈர்க்க சுஷாந்த் சிங் மரணம், அதன் முந்தைய மற்றும் பிந்தைய தகவல்கள் ஒளிபரப்பான விதத்தை சமூக ஊடகங்களிலும் அவற்றின் பயனர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து பாலிவுட் திரையுலக பிரபலங்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என பலரும் ஊடகங்களின் செயல்பாடுகளை விமர்சித்து இடுகைகளை பதிவிட்டனர்.

தொலைக்காட்சி நேயர்கள் வட்டத்தில் இருந்து உலகின் கவனம் டிஜிட்டல் உலகின் பக்கம் திசை திரும்பும் வகையில் பலரது பார்வை சமூக ஊடகங்களின் மீது திரும்பியிருக்கிறது. இதனாலேயே வெகுஜனம் பார்க்கும் தொலைக்காட்சிகளின் நேயர்களை விட சமூக ஊடக பயனர்களிடையே தங்களுடைய தயாரிப்புகளை கொண்டு செல்ல இது சரியான நேரம் என்பதை தனியார் நிறுவனங்கள் கருதத் தொடங்கியிருப்பதாகவே ஊடக நிபுணர்கள் பார்க்கிறார்கள்.

வழக்கமாக செய்தி தொலைக்காட்சிகளில் தங்களின் மொத்த வருவாயில் பெரும்பகுதியை இந்த நிறுவனங்கள் விளம்பரத்துக்காக செலவிடும்.

"அமுல்" என்ற பால் பண்ணை பெரு நிறுவனம் தனது வருவாயில் 40-50 சதவீதத்தை விளம்பரத்துக்காக ஒதுக்குகிறது. பலசரக்கு அங்காடிகளின் தொடர் நிறுவனங்களை நடத்தி வரும் ஃப்யூச்சர் குரூப், சில தளங்களில் எதிர்மறை செய்திகள் மற்றும் கிளர்ச்சியை தூண்டும் வகையில் வெளியிடப்படும் தகவல்கள் தங்களை கவலையில் ஆழ்த்தி வருவதாக கூறியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் விளம்பரங்கள் செய்யும் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. அதற்கு அவற்றின் பொருளாதார மந்த நிலை மட்டும் காரணம் கிடையாது என்றும், சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்ப்பதில் நேயர்களுக்கு ஏற்படும் சலிப்பு, ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகள் பக்கம் அவர்கள் திரும்ப காரணமாகியிருக்கின்றன.

மேலும் பலர் சமூக ஊடக காட்சித்தளங்கள் பக்கம் திரும்பியதும் காரணம். யூட்யூப் போன்ற விடியோ தளங்களில் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் அந்த தளங்களில் விளம்பரங்கள் அதிகமாக வெளிவருவதும் இதற்கு உதாரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஊடகத்துறையில் முன்னோடி ஆலோசகராக கருதப்படும் பரிதோஷ் ஜோஷி, "தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை விற்பதற்காகவே ஊடகங்களில் விளம்பரம் செய்கின்றன. வெறும் நிகழ்ச்சி வழங்குநராக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அவை விரும்புவதில்லை" என்கிறார்.

"அந்த நிறுவனங்களுக்கு இது முழுக்க, முழுக்க வர்த்தகம் மட்டுமே. தங்களுடைய நிறுவனத்தின் பெருமை, அவற்றின் விளம்பரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகங்கள் வாயிலாக நுகர்வோரை அடைவதாக அவர்கள் கருதுகிறார்கள்," என்கிறார் பரிதோஷ்.

மக்களிடையே தவறான தகவல்களை ஊடகங்கள் கொண்டு சேர்க்கிறதென்றால், அந்த தொலைக்காட்சிகளுக்கு பாராமுகத்தை காட்ட விளம்பர நிறுவனங்களுக்கு உரிமை உண்டு என்கிறார் என்டிடிவி செய்தித்தொலைக்காட்சியின் உயரதிகாரி சுபர்ணா சிங்.

அக்டோபர் மாதத்தில் இரண்டு பெரு நிறுவனங்களான பஜாஜ், பார்லி-ஜி போன்றவை தங்களின் விளம்பர வெளியீடு தொடர்பாக முக்கிய முடிவை அறிவித்த வேளையில், மக்களின் சமூக நல்லிணக்கத்துக்காக ஒளிபரப்பப்பட்ட ஒரு நகைக்கடை விளம்பரம், எதிர்மறை விளைவை சந்தித்தது.

தனிஷ்க்

பட மூலாதாரம், Getty Images

43 நொடிகள் ஓடக்கூடிய விளம்பரத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் தங்களுடைய இந்து மருமகளுக்கு வளைகாப்பு நடத்தும் காட்சி இருந்தது. தனிஷ்க் என்ற பிரபல நகைக்கடையின் விளம்பரம் அது. ஆனால், தீவிர வலதுசாரிகளின் கடும் எதிர்ப்பு, போராட்டங்கள் காரணமாக ஒரு கட்டத்தில் அந்த விளம்பரத்தை நீக்கும் கட்டாயத்துக்கு தனிஷ்க் நிறுவனம் ஆளானது.

இந்த விவகாரத்தில் தனிஷ்க் நிறுவனத்தின் நிர்வாகிகள், பிபிசியிடம் பேசுவதை விரும்பவில்லை. ஆனால், அந்த நிறுவனத்துக்காக விளம்பரம் தயாரித்த நிறுவன தலைமை அதிகாரி அஸாஸ் உல் ஹக் பிபிசியிடம் பேசினார்.

"நல்ல நோக்கத்துக்காக நாங்கள் தயாரித்த விளம்பரம் அது. ஆனால், அதற்காக அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு கூட அச்சுறுத்தல் விடுக்கப்படும் என நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை," என்று அஸாஸ் உல் ஹக் கூறினார்.

தனிஷ்க் நிறுவனத்தை நடத்தி வருவது டாடா குழுமம். தனது தொழிற்துறை வரலாற்றில் பல பெரிய சூறாவளி சவால்களை அந்த நிறுவனம் சந்தித்திருக்கிறது. ஆனால், சமீபத்திய விமர்சனம், தனிஷ்க் விளம்பரத்தில் இஸ்லாமிய ஆண்கள், இந்து பெண்களை கவர்ந்திழுத்து அவர்களை மதமாற்றம் செய்யும் சதியின் அடையாளம்தான் இந்த விளம்பரம் என தீவிர வலதுசாரிகள் டிரோலிங் செய்தனர்.

தனிஷ்க் நிறுவனத்துக்காக விளம்பரத்தை இயக்கிய அமித் அகாலி, நாங்கள் தயாரித்த விளம்பரம் விவாதங்களை வளர்க்கும் என நினைத்தோம். ஆனால், அது சர்ச்சைகளை உருவாக்கியது. இதுதான் நமது யதார்த்தம். நான் ஒரு ஹிந்து சீக்கியர். நான் திருமணம் செய்தது ஒரு பார்ஸியை என்று அவர் கூறினார்.

"எங்களுடைய விளம்பரத்தின் நோக்கமே ஏகத்துவம் அல்லது ஒற்றுமை. கடுமையான காலகட்டத்திலும் ஒன்றாக இருப்பதையே நாங்கள் அந்த விளம்பரம் மூலம் வலியுறுத்த விரும்பினோம்," என்கிறார் அவர்.

ஆனால், பல தொழில்துறை சூறாவளிகளை சந்தித்த டாடா நிறுவனம், அந்த விளம்பரத்தை நீக்க முடிவெடுத்தபோது, அந்த நிறுவன தலைவர் ரத்தன் டாட்டாவையும் சமூக ஊடக விமர்சனங்கள் விட்டு வைக்கவி்லலை. ரத்தன் டாட்டாவை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் "முதுகெலும்பில்லாதவர்" என்று விமர்சித்தார்.

கட்டுரையாளர் சந்தோஷ் தேசாய், "யதார்தத்தின் பக்கம் இதுபோன்ற நிறுவனங்கள் இருக்க வேண்டும்," என வலியுறுத்தினார்.

"கலப்புத்திருமணம் என்பது சமூகத்தில் மக்களால் வரவேற்கப்பட்டாலும், அதற்கு ஆழமான அரசியல் கலந்த எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இது வெறும் உள்ளார்ந்த நம்பிக்கை மட்டுமின்றி எங்களுக்குள் எங்களைச் சுற்றிய வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது," என்று தனிஷ்க் விளம்பரத்தை தயாரித்த குழுவினர் தெரிவித்தனர்.

"இந்த வெறுப்புணர்வு சிந்தனைகள் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தின் மறுவினைதான் தற்போது தொலைக்காட்சிகளில் அவை ஒளிபரப்பும் தவறான தகவல்களுக்கான எதிர்வினை. அந்த ஊடகங்கள் தங்களின் வருவாய் ஆதாரமாக நம்பும் பெரு நிறுவனங்கள், இப்போது தங்களுக்குள் ஒரு விளம்பர விநியோக நெறியை வகுத்துக் கொண்டுள்ளதை, ஓர் எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதுவும் வெறுப்புணர்வு பிரசாரங்களுக்கான எதிர்வினைதான்," என்கிறார்கள் ஊடகத்துறை வல்லுநர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :