You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா பரவல்: விமான சேவை கடும் சரிவில் இருந்து எப்போது மீளும்?
- எழுதியவர், நிதி ராய்
- பதவி, பிபிசி, மும்பை
34 வயதாகும் ரித்திகா ஸ்ரீவஸ்தவா தனது எதிர்காலம் குறித்த அச்சத்தில் உள்ளார். விமான போக்குவரத்து துறையில் கடந்த 9 ஆண்டுகளாக பணிபுரிந்த அவருக்கு தற்போது வேலை இல்லை. டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் இருந்த அவரது குடும்பம், தற்போது மீண்டும் அவரது சொந்த ஊரான வாரணாசிக்கு குடியேறியுள்ளது.
"டெல்லியில் வாழும் அளவிற்கு எங்களிடம் பணம் இல்லை. எங்கள் சேமிப்பு எல்லாம் தீர்ந்துவிட்டது. என் கணவருக்கும் முழு ஊதியம் வருவதில்லை. 30 சதவீதம் மட்டுமே வருகிறது. எனக்கும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வேலை இல்லை," என்கிறார் பிபிசியிடம் பேசிய ரித்திகா.
ஏற்கனவே பிரபலமான விமான நிறுவனத்தில் வருவாய் பிரிவில் பணிபுரிந்து வந்த ரித்திகா, வேறொரு விமான நிறுவனத்தில் சேர்வதற்காக தனது பழைய வேலையை விட்டிருந்தார். புதிய நிறுவனத்தில் மார்ச் 20ஆம் தேதி சேர்வதாக இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக அது நின்று போனது.
"எங்களை அவர்கள் வேலையை விட்டு நீக்குவதாக ஏதும் கூறவில்லை. பழைய நிலை திரும்பியதும் மீண்டும் அழைப்பதாக கூறினார்கள். ஆனால், அது கடினம் என்று இப்போது தோன்றுகிறது," என்கிறார் ரித்திகா.
ரித்திகாவின் கணவர், நடிகர்கள் மற்றும் பெரிய அரசியல்வாதிகளுக்கு வாடகை விமானங்கள் வழங்கும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.
"டெல்லியில் எங்களால் வீட்டு வாடகை மற்றும் பிற செலவுகளை தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால் ஊர் திரும்பிவிட்டோம். கடந்த 7 மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை" என்று ரித்திகா மேலும் கூறுகிறார்.
ஆனால், கொரோனா தொற்று காலத்திற்கு முன்பே, அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனம் சிக்கலில்தான் இருந்தது. அந்நிறுவனத்தின் சுமார் 60 விமானிகள் தங்களுக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கேட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதில் சிலரிடம் பிபிசி பேசியபோது, தங்கள் வீட்டை நடத்துவதுகூட கடினமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
"நாங்கள் கடந்த டிசம்பர் மாதமே ராஜிநாமா கடிதத்தை வழங்கினோம். ஆனால், எங்களை அதே வேலையில் நீடிக்குமாறும், எங்களுக்கு அதிக ஊதியம் தருவதாகவும் ஏர் இந்தியா கூறியது. ஆனால், அது நடக்கவில்லை. அதற்குள் கொரோனா ஊரடங்கு அமலானது. இப்போது எங்களை பணிநீக்கம் செய்துவிட்டனர். நான் விமானியாக 60-70 லட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ளேன். 2-3 ஆண்டுகள் பயிற்சி எடுத்தேன். விமானி ஆவது அவ்வளவு எளிதானதல்ல. விமானத்துறை என்பது மற்ற துறைகளை போல அல்ல. ஒன்று இல்லையென்றால் இன்னொன்று என்று மாறுவதற்கு. எங்களுக்கு இருக்கும் தேர்வுகள் மிக, மிக குறைவு" என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு விமானி.
"நாங்கள் பயிற்சி எடுத்த போது வாங்கிய கடன்களை இன்னும் அடைக்கவில்லை. இப்போது வங்கியில் இருந்து வந்து வட்டியை கட்ட சொல்லி வீட்டிற்கு வருகிறார்கள். நாங்கள் எப்படி கட்டுவோம்? மன உளைச்சலாக இருக்கிறது. என் காரை எப்போது எடுத்து செல்வார்கள் என்று தெரியவில்லை. என் குடும்பத்தை நடத்த 2000, 3000 என கடன் வாங்குகிறேன். என்னால் சரியாக தூங்கக்கூட முடியவில்லை" என்று மேலும் ஒரு விமானி தெரிவித்தார்.
இந்தப் பிரச்சனை எவ்வளவு பெரியது?
விமான போக்குவரத்து மற்றும் அதனை சார்ந்துள்ள துறைகளில் இந்தியாவில் 30 லட்சம் வேலையிழப்புகள் இருக்கலாம் என சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு கணக்கிட்டிருந்தது.
வருவாய் அதிகம் இல்லாமல், எரிபொருள், விமான நிலையத்திற்கான செலவுகள், விமானம் நிறுத்துவதற்கான கட்டணம், விமான பராமரிப்பு செலவு ஆகியவற்றை விமான நிறுவனங்கள் பார்க்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு செலவை குறைக்க முடியும் என்றால் அது ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மட்டுமே.
கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னரே விமானப் போக்குவரத்து துறை சிக்கலில்தான் இருந்தது.
எனினும், இப்போதைக்கு இத்துறை மீளும் என்று நம்பிக்கை இல்லை என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
கொரோனா பரவல் தாக்கத்தால் தொழில்கள், பயணம், சுற்றுலா மற்றும் உலக பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
வைரஸ் தாக்கம் குறைவது போல தெரியவில்லை என்ற சூழலில், பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பதும் அதற்கு ஏற்றாற்போல விமானங்களை அதிகளவில் இயக்குவதற்கான சாத்தியமும் மிகமிக குறைவு.
தற்போது விமானத்துறைக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், குறைந்த பயணிகளின் எண்ணிக்கை.
கடந்த ஆண்டு மே முதல் செப்டம்பர் வரை 702 லட்சமாக இருந்த பயணிகள் எண்ணிக்கை, இந்தாண்டு அதாவது 2020 மே 25 முதல் செப்டம்பர் 30 வரை 110 லட்சமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 84.2 சதவீதம் குறைவு.
மேலும், கொரோனாவால் ஏற்பட்ட நேரடி தாக்கம் ஒருபக்கம் இருக்க, இத்துறை எப்போது மீளும் என்பது, நோய்தொற்றால் ஏற்பட்ட உலக பொருளாதாரம் மீதான தாக்கத்தை பொறுத்தே இருக்கும்.
நுகர்வோரின் வாங்கும் திறன் குறைந்திருக்க, அவர்கள் மீண்டும் பயணத்தில் செலவு செய்வதை அவ்வளவு எளிதில் எதிர்பார்க்க முடியாது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
- டிரம்ப் Vs பைடன்: அமெரிக்கத் தமிழர்கள் ஆதரவு யாருக்கு அதிகம்?
- பிரான்ஸ் நீஸ் தேவாலய தாக்குதல்: தாக்குதல்தாரி துனிஷியாவிலிருந்து வந்தவர்
- காஷ்மீர் இல்லாத வரைபடம் - செளதியிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா
- கெய்க்வாட்டின் ‘ஸ்பார்க்’, ஜடேஜாவின் அதிரடி - மீண்டும் சிஎஸ்கே பாணி வெற்றி
- அபிநந்தன் விடுதலை: எம்.பியின் பேச்சால் பதறிய பாகிஸ்தான் ராணுவம் - என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :