You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர் இல்லாத வரைபடம் - செளதியிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா
ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு இந்த ஆண்டு தலைமை தாங்கும் செளதி அரேபியா, அந்நிகழ்வையொட்டி வெளியிட்ட விளம்பரம் மற்றும் புதிய செளதி கரன்சியில் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் இடம்பெற்றிருப்பதற்கு, தனது கடுமையான எதிர்ப்பை இந்தியா பதிவு செய்துள்ளது.
செளதி தலைநகர் ரியாத்தில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு வரும் நவம்பர் 21,22 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி அந்நாட்டில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய வல்லரசுகள் கலந்து கொள்ளும் இந்த உச்சி மாநாட்டையொட்டி செளதி அரேபியாவின் செலாவணி ஆணையம் அதன் கரன்சியை அறிமுகப்படுத்தியது.
உலக வரைபடம் இடம்பெற்றுள்ள அந்த கரன்சியில், காஷ்மீரில்லாத இந்தியாவின் வரைபடம் உள்ளது. மேலும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளான கில்கிட், பால்டிஸ்தான் ஆகியவையும் அதில் இல்லை. இந்த வரைபடம் அடங்கிய ஜி20யை வழங்கும் செளதி அரேபியா என்ற பெயரிலான காணொளி, கரன்சி படத்தை அந்த நாட்டின் அரசுத்துறைகள் அவற்றின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றன.
ஆனால், அந்த நாடு எதிர்பார்க்காத ஒன்றாக ட்விட்டரில் அந்த வரைபடத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்தியாவின் தலையே இல்லாத வரைபடமா என கருத்துகளை பதிவிடத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறையின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டதும், செளதி அரசிடம் இந்தியா சார்பில் கடுமையாக எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.
இந்த தகவலை டெல்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா உறுதிப்படுத்தினார்.
ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் அங்கம். இந்த விவகாரத்தில் தனது தவறை திருத்திக் கொள்ளுமாறு செளதி அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் செளதி அரசுக்கும் இடையிலான உறவு, பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சிக்காலத்தில் மேலும் வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு இந்தியாவுக்கு செளதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் வருகை தந்தபோது, சம்பிரதாய மரபுகளை மீறி விமான நிலையத்துக்கே சென்று அவரை வரவேற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் மோதி.
செளதியின் மிகப்பெரிய எண்ணெய் நுக்ரவு நாடுகளில் மூன்றாமிடத்தில் இந்தியா உள்ளது. அதனால், வர்த்தக ரீதியிலான அதன் உறவுகள் செளதியுடன் சிறப்பாக உள்ள நிலையில், தற்போதைய வரைபட விவகாரம் தெரிந்தே மேற்கொள்ளப்பட்டதா அல்லது தவறுதலாக நடந்ததா என்பதை செளதி அரசு இதுவரை தெளிவுபடுத்தவில்லை.
இது குறித்து விசாரித்தபோது, தொடக்கத்தில் இந்திய வரைபடத்தில் கில்கிட், பால்டிஸ்தான் ஆகியவற்றை பாகிஸ்தானுக்கு உட்பட்ட இடமாக சித்தரித்து ஒரு வரைபட விளம்பரத்தை செளதி வெளியிட்டதாகவும் பின்னர் அந்த பகுதிகள் அகற்றப்பட்டு திருத்தப்பட்ட விளம்பரம் வெளியிடப்பட்டதாகவும் தெரிய வந்தது.
இந்த நிலையில், கில்கிட், பால்டிஸ்தான் இல்லாத காஷ்மீர் பகுதிகளை இந்தியாவுக்கு தீபாவளி பரிசாக செளதி அளிப்பதாக பாகிஸ்தானைச் சேர்ந்த செயல்பாட்டாளர் அம்ஜத் அயூப் மிர்ஸா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.இந்திய ஊடகங்கள் சிலவற்றிலும் இந்த விவகாரம் விரிவாக ஒளிபரப்பப்பட்டது.
பாகிஸ்தானில்இதற்கு முன்பு இந்தியாவின் பகுதிகளான ஜுனாகாத், சர் கிரீக், மனவடார், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் ஒரு பகுதியை தனது அங்கமாகக் கோரி அந்நாடு ஒரு வரைபடத்தை கடந்த ஆண்டு வெளியிட்டது. அதற்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்த இந்திய அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை நீக்கிய முதலாமாண்டு நிறைவையொட்டி இந்தியா அந்த நடவடிக்கையை கொண்டாடிய வேளையில், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரியதாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் வெளியே செளதி அரேபியாவில் அதன் அரசாங்கத்தாலேயே வரைபடம் தவறுதலாக சித்தரிக்கப்பட்டு அது விளம்பரமும் செய்யப்பட்டிருப்பது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பிற செய்திகள்:
- அரசியல் பிரவேசத்திற்கு முடிவுரை எழுதி விட்டாரா ரஜினிகாந்த்?
- சீனா வேட்டை விலங்கு எனக் கூறிய அமெரிக்க அமைச்சர் – நாசூக்காக மறுத்த இலங்கை அதிபர்
- சென்னையில் கொட்டித்தீர்க்கும் மழை - ’எந்த நகருக்கும் கையாள்வது சிரமமே’
- கொரோனா தொற்று பாதித்த பிறகு ஒருவரின் நோய் எதிர்ப்புத்திறன் குறையுமா?
- 2000 ஆண்டுகள் பழமையான தோசை, சர்வதேச அளவில் பிரபலமானது எப்படி?
- `காற்று மாசால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்றால் அதிகம் உயிரிழக்கின்றனர்` - ஆய்வில் தகவல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :