You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனா வேட்டை விலங்கு எனக் கூறிய அமெரிக்க அமைச்சர் – நாசூக்காக மறுத்த இலங்கை அதிபர்
இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வேட்டை விலங்கு போல இலங்கையில் நடந்துகொள்வதாகவும், அமெரிக்கா நண்பனாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால், இதற்கு உடனடியாக பதில் அளிக்கும் விதத்தில் டிவிட்டரில் பதிவிட்ட இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, வெளியுறவு கொள்கையில் இலங்கை நடுநிலையோடு நடந்துகொள்வதாகவும் அதிகார சக்திகளின் சண்டையில் அது சிக்கிக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த ட்வீட்டில் அவர் மைக் பொம்பேயோவையும் டேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மண்ணில் சீனாவை விமர்சித்து அமெரிக்கா பேசியது இலங்கைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காட்டும் வகையில் அமைந்தது இந்த ட்வீட். அத்துடன், அமெரிக்க உறவை வரவேற்கும் அதே நேரத்தில், சீனாவின் நட்பை இலங்கை அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுக்காது என்பதையும் இந்த குறிப்பு காட்டியது.
அதே நேரம் இலங்கையில் உள்ள சீனத் தூதரகமும் மைக் பொம்பேயோவின் பேச்சைக் கண்டித்துள்ளது.
சீனாவுக்கும் இலங்கைக்கும் தங்கள் உறவைக் கையாள்வதற்குத் தேவையான ஞானம் உள்ளது. மூன்றாம் தரப்பின் கட்டளைகள் தேவையில்லை என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், ஒரு நாட்டுக்கு வருகை தருகிறவர்கள் கனிகளையும், மரியாதையையும் கொண்டுவரவேண்டும்: சிக்கல்களையும், இடர்களையும் கொண்டுவரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்தியா வந்திருந்த மைக் பொம்பேயோ சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில் தாம் தனித்திருப்பதாக இந்தியா நினைக்கக் கூடாது. அமெரிக்கா எப்போதும் இந்தியாவுடன் இருக்கும் என்று தெரிவித்தார்.
இதற்குப் பதில் அளித்த சீனா, இந்த எல்லைப் பிரச்சனை என்பது இருதரப்பு சிக்கல், இதில் மூன்றாவது தரப்பு தலையிடுவதற்கு தேவை ஏதும் இல்லை என்று தெரிவித்தது.
மைக் பொம்பேயோவின் பேச்சுக்கு இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை எதிர்வினையாற்றியிருந்தன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :