You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினியின் அரசியல்: தொடங்கும் முன்பே முடிவுரை எழுதினாரா?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து பல புதிய தகவல்களைக் கொண்டிருந்த அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதிலிருந்த தகவல்கள் சரியானவை எனக் கூறியிருக்கும் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை என பகிரப்பட்ட அறிக்கையில், ரஜினிகாந்தில் உடல்நலம் குறித்து முன்பு இடம்பெற்றிராத பல தகவல்கள் இருந்தன.
இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலும் ஜூன், ஜூலை மாதங்களிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2ஆம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிக்கலாம் என ரஜினி நினைத்திருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக அந்த திட்டம் நடக்காமல் போனதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்குப் பிறகு இருந்த தகவல்கள்தான் பலரையும் அதிரவைத்தன.
"2011ஆம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரஜினியே ஒப்புக் கொண்ட ரகிசயம்
2016ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் கபாலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங் உள்ளிட்ட பணிகள் முடிந்த பிறகு, அவர் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு சில பரிசோதனைகளைச் செய்து கொண்டதாகவே அப்போது தகவல்கள் வெளியாயின. அங்கிருந்து திரும்பியவுடன் 2.0 படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். ஆகவே, அமெரிக்காவில் ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சகிச்சை செய்து கொண்ட தகவல் பெரிதாக யாருக்கும் தெரியாத தகவலாகவே இருந்தது. இந்த நிலையில், அந்தத் தகவல் சரியான தகவல் என ரஜினி கூறியிருக்கிறார்.
தனது உடல்நலம் குறித்த இவ்வளவு முக்கியமான தகவலை ரஜினி இப்போது ஏன் வெளியிட வேண்டும் என்பதுதான் பலரிடமும் இருக்கும் கேள்வி. "2011ஆம் ஆண்டு அவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனது. அவர் சிங்கப்பூருக்குச் சென்று சிகிச்சை பெற்றார். அவரது உடல் நலத்தில் என்ன பிரச்சனை ஏற்பட்டது, என்ன சிகிச்சை பெற்றார் என்பதையெல்லாம் 2012ல் ஒரு விழாவில் பகிர்ந்துகொண்டார். அதற்குப் பிறகு அவரிடம் பேசிய அவருடைய நலம்விரும்பிகள், அந்தத் தகவல்களை அவர் வெளியில் தெரிவித்திருக்க வேண்டியதில்லை என்று கூறினார்கள். இதனால்தான் 2016ல் அவர் சிகிச்சை பெற்ற விவகாரத்தை அவர் வெளியில் தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது அந்தத் தகவல் உண்மைதான் என்று சொல்லியிருப்பதன் மூலம், தான் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் என நினைக்கிறேன்" என்கிறார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரும் அவரைப் பற்றிய புத்தகங்களை எழுதியவருமான ரஜினி ராமகிருஷ்ணன்.
ரஜினி வெளியிட்டதாகக் கூறப்பட்ட அறிக்கையில், அவர் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது."
கொரோனா தொற்று எப்போது முடியும் என தெரியாத இந்த தருணத்தில் எனது அரசியல் பிரவேசம் குறித்து எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினேன். அதற்கு மருத்துவர்கள் கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும் அந்த தடுப்பூசியை உங்களுக்கு செலுத்தினால் அதை உங்கள் உடல்நிலை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியும். இப்போது உங்களுக்கு வயது 70. மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு எனவே கொரோனா காலத்தில் மக்களை தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
"இந்த மார்ச் மாதம் வரை கட்சி ஆரம்பிக்க வேண்டுமென்பது ரஜினியில் சிந்தனையில் இருக்கவே செய்தது. ஆனால், கொரோனா பரவல் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுவிட்டது. அவர் மக்களையெல்லாம் சந்தித்து, கட்சி ஆரம்பிக்க நினைத்தார். இனி அதற்கு வாய்ப்பில்லாத நிலையில், அவர் கட்சி துவங்கும் வாய்ப்பில்லையென்றே நினைக்கிறேன். ஆகவே அந்த அறிக்கை குறித்து அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன்" என்கிறார் ரஜினி ராம்கி.
அந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் சரி என ரஜினி ஒப்புக்கொண்டால், அவருக்குத் தெரிந்தேதான் அது வெளியிடப்பட்டிருக்கிறது என்று அர்த்தம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
"ரஜினிக்கு அரசியலுக்கு வரும் நோக்கம் இருக்கவில்லையென்றே நினைக்கிறேன். ஆனால், அவர் அரசியலுக்கு வரவேண்டுமென பா.ஜ.க. நெருக்கடி அளித்துவந்தது. ரஜினியைப் பொறுத்தவரை, ஆந்திராவில் என்.டி. ராமாராவைப் போல கட்சி ஆரம்பித்து மூன்று மாதங்களுக்குள் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார். ஆனால், ரஜினி என்.டி.ஆர் இல்லை" என்கிறார் ராதாகிருஷ்ணன்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முடிவெடுத்துவிட்ட நிலையில், அவர் தனியாகக் கட்சி ஆரம்பித்தால் எந்த அளவுக்கு வாக்குகள் கிடைக்குமென கணக்கிடப்பட்டதாகவும் அதிகபட்சம் 20 -25 சதவீத வாக்குகளே கிடைக்கும் என்பதை அந்தத் தருணத்திலேயே உணர்ந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள் ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர்கள். அப்படி 20 - 25 சதவீத வாக்குள் மட்டுமே கிடைத்தால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது உணர்ந்துதான் கடந்த ஆண்டு செய்தியாளர் சந்திப்பை வைத்து மக்கள் எழுச்சி ஏற்பட்டால் தவிர, தான் அரசியலுக்கு வரப்போவதில்லையென ரஜினி அறிவித்தார்.
"ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முதலமைச்சராக வர நினைக்கிறார். அவருக்கு தோல்வியை எதிர்கொள்ளும் சக்தியில்லை. இதைத்தான் அவரது அறிக்கைகள், பேச்சுகள் காட்டுகின்றன" என்கிறார் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.
ஆனால், இந்த விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் ரஜினி இழுத்துக்கொண்டே செல்வதாகக் கூறுகிறார், தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன்.
"தான் அரசியலுக்கு வருகிறோமா இல்லையா என்ற விவகாரத்திற்கு ரஜினி முற்றுப்புள்ளி வைப்பதுதான் சரியாகவும் நியாயமாகவும் இருக்கும். ஒவ்வொரு அறிக்கையிலும் கடைசியில் ஒரு 'கமா'வை விட்டுச் செல்வது, அவர் மீதான நம்பகத்தன்மையைக் குலைக்கிறது. ஒரு உணர்வு ரீதியான பிளாக்மெயில் போலத்தான் இது இருக்கிறது" என்கிறார் செந்தில்நாதன்.
ரஜினி கடைசியாக வெளியிட்ட ட்விட்டர் செய்தியிலும் தான் கட்சி ஆரம்பிக்கப்போவதைப் பற்றி முடிவாக ஏதும் சொல்லாமல், "இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்" என்று கூறியிருப்பதை ஆழி செந்தில்நாதன் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால், இந்த விவகாரத்தை ரஜினி தொடர்ந்து இழுத்துக்கொண்டே போவது ரஜினியின் பலவீனத்தை குறிக்கிறதா அல்லது அரசியலில் ஏதாவது செய்ய வேண்டுமென இன்னும் நினைக்கிறாரா என்பது தெரியவில்லை என்கிறார் செந்தில்நாதன்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ரஜனிகாந்த் இனி மக்களைச் சந்தித்து, புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்திற்கு நெருக்கமானவர்கள்.
பிற செய்திகள்:
- சீனா வேட்டை விலங்கு எனக் கூறிய அமெரிக்க அமைச்சர் – நாசூக்காக மறுத்த இலங்கை அதிபர்
- சென்னையில் கொட்டித்தீர்க்கும் மழை - ’எந்த நகருக்கும் கையாள்வது சிரமமே’
- கொரோனா தொற்று பாதித்த பிறகு ஒருவரின் நோய் எதிர்ப்புத்திறன் குறையுமா?
- 2000 ஆண்டுகள் பழமையான தோசை, சர்வதேச அளவில் பிரபலமானது எப்படி?
- `காற்று மாசால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்றால் அதிகம் உயிரிழக்கின்றனர்` - ஆய்வில் தகவல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :