You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரான்ஸ் நீஸ் தேவாலய தாக்குதல்: "இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல்" - அதிபர் மக்ரோங்
பிரான்ஸின் நீஸ் நகரில் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆணை கத்தியால் குத்தி கொன்றவர் இரு தினங்களுக்கு முன் துனிஷியாவிலிருந்து வந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலீஸாரால் சுடப்பட்ட அந்த நபர் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.
பிரான்ஸின் நீஸ் நகரில் நேற்று நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இது ஒரு "இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல்" என பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தால் பள்ளிகள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கையை மூவாயிரத்திலிருந்து ஏழாயிரமாக அதிகரிப்பதாகத் தெரிவித்தார் மக்ரோங்.
மேலும் நாட்டின் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் பாரிஸ் நகரின் வட மேற்கு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றிற்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலிகள் இந்த தாக்குதலில் இருப்பதாக கூறப்படுகிறது. முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களைத் தனது மாணவர்களிடத்தில் காட்டியதாக கூறப்படும் சாமூவேல் பேட்டி என்ற ஆசிரியர் தலைவெட்டி கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸில் பதற்றம் அதிகரித்தது. கேலிச் சித்திரங்களை பிரசுரிப்பது நாட்டின் உரிமை என மக்ரோங் பேசியது மற்றும் தீவிர இஸ்லாமியவாதத்தை ஒடுக்கும் அரசின் முயற்சிகள் ஆகியவை துருக்கி மற்றும் பிற முக்கிய முஸ்லிம் நாடுகளை கோபத்தில் ஆழ்த்தியது.
நீஸ் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் போலீஸாரால் சுடப்படும் முன் "அல்லாஹு அக்பர்" எனக் கத்தியதாக தெரிகிறது.
பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் விசாரணையைத் துவங்கியுள்ளனர்.
இரண்டு தொலைபேசிகள், 30 செமீ அளவில் ஒரு கத்தியும் தாக்குதல் நடத்தியவரிடம் இருந்ததாக பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமை விசாரணை அதிகாரி ஷான் தெரிவித்தார்
"மேலும் தாக்குதல் நடத்தியவரால் கைவிடப்பட்ட ஒரு பையையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். அந்த பைக்கு அருகில் இரு கத்திகள் இருந்தன. அது தாக்குதலில் பயன்படுத்தப்படவில்லை," என்றும் அவர் தெரிவித்தார்.
நீஸுக்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்ட பிரான்ஸ் அதிபர் மக்ரோங், "எங்களுடைய விழுமியங்களுக்காகதான் நாங்கள் மீண்டும் தாக்கப்பட்டிருக்கிறோம். எந்த பயங்கரவாதத்திற்கும் அடிபணியாத, சுதந்திரமாக நம்பிக்கையை தேர்வு செய்துகொள்ள இங்குள்ள உரிமைதான் அந்த விழுமியம்." என தெரிவித்தார்.
மேலும் "நான் இன்று மீண்டும் ஒருமுறை மிகுந்த தெளிவுடன் சொல்கிறேன்; நாங்கள் எதனையும் விட்டு கொடுக்க மாட்டோம்," என்று தெரிவித்துள்ளார் மக்ரோங்
மேலும் இரு சம்பவங்கள்
வியாழனன்று பிரான்ஸில் மற்றொரு சம்பவமும் நடைபெற்றுள்ளது. அவிக்னான் நகரில் போலீஸாரை கைத்துப்பாக்கி கொண்டு அச்சுறுத்திய நபரை போலீஸார் சுட்டு வீழ்த்தினர்.
செளதி அரேபியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு வெளியே உள்ள காவலாளி ஒருவர் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் பின்னர் கைது செய்யப்பட்டார்.
என்ன நடந்தது?
நீஸில் உள்ள தேவாலயம் ஒன்றில் காலை, முதல் பிரார்த்தனை கூட்டத்திற்கு முன்பாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் ஒரு 60 வயது பெண்ணும், 55 வயது ஆணும் தாக்கப்பட்டு தேவாலயத்திற்குள் உயிரிழந்தனர்.
கொல்லப்பட்ட ஆண் தேவாலயத்தின் ஊழியர் ஆவார். அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். தாக்குதலில் கத்திக்குத்து காயங்களுடன் தப்பித்த மற்றொரு 44 வயது பெண் அருகில் உள்ள உணவு விடுதி ஒன்றுக்கு தப்பிச் சென்று பின் உயிரிழந்தார்.
"பலர் தெருவில் நின்று கூச்சலிடுவதை நாங்கள் பார்த்தோம். போலீஸார் வந்தனர். துப்பாக்கிச் சத்தம் பலமுறை கேட்டது," என தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் நபர் பிபிசியிடம் தெரிவித்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நீஸ் நகரில் பிரான்ஸில் அதுவரை இல்லாத அளவு மோசமான ஒரு ஜிகாதிஸ்ட் தாக்குதல் நடைபெற்றது. துனிஷியாவை சேர்ந்த ஒருவர் வேன் ஒன்றை கூட்டத்திற்குள் ஓட்டிச் சென்றதில் 86 பேர் கொல்லப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :