365 நாளில் 300 கிலோ எடை குறைத்த திருநெல்வேலி கோயில் யானை - எப்படி தெரியுமா?

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி ஒரே ஆண்டில் சுமார் 300 கிலோ அளவுக்கு உடல் எடையை குறைத்திருக்கிறது.
உடல் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு யானை காந்திமதியின் செயல் உத்வேகம் அளித்துள்ளது.
50 வயதான கோயில் யானை காந்திமதி, கடந்த ஆண்டு 4450 கிலோ எடை கொண்டிருந்தது. 2019 டிசம்பர் மாதம் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட யானைகள் புத்துணர்வு முகாமில் அதிக எடை இருப்பதாகவும், எடை அதிகரிப்பு காரணமாக முடக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
காந்திமதியின் எடை 4,000 கிலோ ஆக இருக்கவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததை அடுத்து, யானையின் உடல் எடை குறைப்பில் கோயில் அதிகாரிகள் அதிக கவனம் எடுத்துக்கொண்டனர்.
தற்போது காந்திமதியின் எடை 4,150 கிலோ ஆக குறைந்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டில் 150 கிலோ குறைப்பதற்கான தீவிர பயிற்சியில் காந்திமதி ஈடுபட்டிருப்பதாக கோயில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் காந்திமதிக்கு, பழம், தேங்காய் மற்றும் இனிப்புகள் வழங்குவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது பெரிய அளவில் உதவியது என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் மருத்துவர் செல்வமாரியப்பன்.
''யானையின் ஒரு நாள் உணவில் முன்னர் 75 கிலோ பசுந்தீவனங்கள் இருந்தன. தற்போது அந்த அளவை 150 கிலோவாக உயர்த்தியுள்ளோம். அரிசி, வெல்லம் போன்ற பொருட்களை பக்தர்கள் கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கோயில் யானைக்கு நாம் சாப்பிடும் உணவுகளை கொடுப்பதால், மனிதர்களை போலவே யானைக்கும் உடல் எடை கூடும். முடக்குவாதம், நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது,''என்கிறார் மருத்துவர் செல்வ மாரியப்பன்.

யானையின் இயல்பு பற்றி பேசிய மருத்துவர், ''கோயிலில் இருக்கும் யானைகளுக்கு, கோயில் சேவகம் ஒரு வேலையாக இருக்கும். ஆனால், யானை அதிகம் நடக்க வேண்டும், அதன் உணவு எளிதில் ஜீரணமாகக்கூடியதாக இருக்கவேண்டும். குறிப்பாக 45 வயதிற்கு மேற்பட்ட யானைகளுக்கு முடக்குவாதம் மற்றும் அஜீரண கோளாறுகள் அதிகரிக்கும். தற்போது காந்திமதியின் எடை குறைந்து வருவதால், இந்த உடல் உபாதைகளை தடுக்க முடியும்,''என்கிறார் மருத்துவர்.
தினமும் மூன்று மணி நேரம் நடை பயிற்சிக்கு காந்திமதியை அழைத்துச்செல்பவர் யானை பாகன் ராமதாஸ்.
வீதியுலா செல்வது, மூலவருக்கு தீர்த்தம் எடுத்து வருவது என்பதோடு தற்போது கோயில் வளாகத்தை ஐந்து முறை சுற்றி வருகிறது காந்திமதி யானை.
''ஒவ்வொரு மாதமும் மருத்துவர் சோதனை செய்கிறார். ஜீரண திறன்,மூச்சு திறன், நடக்கும் முறை, பின்னோக்கி நடத்தல், அமர்ந்து எழுவது என பலவிதமாக சோதனை செய்கிறார்கள். உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பதால் வெளி உணவுகள், இனிப்பு பண்டங்கள் கொடுப்பதை நிறுத்தி விட்டோம். உடல்உழைப்பை அதிகரித்துள்ளோம். காந்திமதியை நடைப்பயிற்சிக்கு கூட்டி செல்வதால், எனது ஆரோக்கியம் சீராகிவிட்டது,''என ஆனந்தப்படுகிறார் பாகன் ராமதாஸ்.

உணவு கட்டுப்பாட்டுக் கொண்டு வந்ததும் இரண்டு வாரங்கள் வரை காந்திமதி தயக்கம் காட்டியதாக கூறும் நெல்லையப்பர் கோயில் நிர்வாக அதிகாரி ராமராஜ், தற்போது பசுந்தீவனங்களை யானை ஆர்வத்தோடு உண்பதாக கூறுகிறார்.
''காந்திமதி இளைப்பாற, ஷவர் குளியல் தரப்படுகிறது. கால்களுக்கு பயிற்சி கொடுப்பது, கண்களில் கழிவுகள் தேக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வது என இரண்டு பாகன்கள் வேலை செய்கிறார்கள்.
கான்கிரீட் தரை கால்களை பாதிக்கும் என்பதால்,காந்திமதி நிற்கும் இடத்தில் மணல் தரை அமைத்துள்ளோம். எங்களது கவனம் ஒருபுறம் என்றால், காந்திமதி எடை குறைப்புக்கு அதிக ஒத்துழைப்பு தருவதால்தான் எடையை குறைக்கமுடிந்தது. அன்பு செலுத்தும் பக்தர்கள் உணவு தரவேண்டும் என கோரினால், அவர்களிடம் விளக்குகிறோம். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால், யானைக்கு அருகில் பக்தர்கள் நிற்பதற்கு அனுமதிப்பதில்லை. சமூக இடைவெளி விட்டு யானையைப் பார்த்துச்செல்கிறார்கள்,''என்கிறார் ராம்ராஜ்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: இந்தியாவில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் நவம்பர் 30வரை பொதுமுடக்கம் தொடரும்
- கோவிட் 19: பிற வைரஸ்களைவிட கொரோனா ஏன் மிகவும் ஆபத்தானது?
- திருமாவளவனை எதிர்த்து போராட்டம் நடத்த சென்ற குஷ்பு கைது
- இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் நடராஜன்: விளையாட வாய்ப்பு கிடைக்குமா?
- `வரலாற்றின் தொங்குநிலையில்' நாம் வாழ்கிறோமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












